திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
26-06-2020 14:09
திருமழிசை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்து குறைந்து உள்ளதாலும், காய்கறிகளை சேமித்து வைக்க போதுமான குடோன் வசதி இல்லாததாலும் தினசரி 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாகி வருகிறது.
போரூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதையடுத்து பூ, பழம் மார்க்கெட் மாதவரம் பஸ் நிலையத்திற்கும், காய்கறி மொத்த விற்பனை திருமழிசைக்கும் மாற்றப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. சில்லரை காய்கறி விற்பனை கடைகளுக்கு இதுவரை மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை.
திருமழிசை மார்க்கெட்டிற்கு தினசரி 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. திருமண விழாக்கள், விருந்து, உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் ஊரடங்கு காரணமாக தற்போது நடைபெறாததால் காய்கறிகள் தேவை குறைந்து உள்ளது.
மேலும் மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்தும் குறைந்து உள்ளதாலும், காய்கறிகளை சேமித்து வைக்க போதுமான குடோன் வசதி இல்லாததாலும் தினசரி 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாகி அங்கு தரையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி சங்க நிர்வாகி சுகுமார் கூறியதாவது:-
திருமழிசை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக அதிகாலை 2 மணி முதல் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. வியாபாரிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
கோயம்பேடு சில்லரை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாததால் இங்கிருந்து காய்கறிகள் வாங்கி சென்று மினி வேன்கள் மூலம் கோயம்பேடு, விருகம்பாக்கம், நெற்குன்றம், மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரம் மற்றும் அங்குள்ள காலி இடங்களில் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வியாபாரிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளனர்.
அதிகாரிகளின் இதுபோன்ற கெடுபிடி காரணமாக வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டு காய்கறி விற்கும் தொழிலையே விட்டுவிட்டனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து பல தொழில் நிறுவனங்களுக்கு இங்கிருந்து காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தற்போது அது முற்றிலும் தடைபட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடையும் காய்கறிகள் பெரும்பாலும் வீணாகாமல் மறுநாள் காலையில் விற்பனை செய்து விடுவோம்.
ஆனால் இங்கு ஷீட் போட்டு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு போதிய வசதிகள் இல்லை. இதன் காரணமாக விற்பனையாகாமல் தேக்கமடையும் பச்சை காய்கறிகள் கேரட், முட்டை கோஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் 200 டன் வரை வீணாகி வருகிறது.
Comments