அக்னி ஆட்டம் ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் 2020 :


மே 4 முதல் அக்னி ஆட்டம் ஆரம்பம் -


தோஷ காலத்தில் இதை எல்லாம் செய்யாதீங்க


          மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் எந்த நட்சத்திரமுமே அக்னி நட்சத்திரம் இல்லை. ஆனால் அக்னிக்கு நிகரான சூரியனின் நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளது, இதில் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. மே 4 முதல் 28 வரை அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயில் வறுத்து எடுக்கும். இந்த அக்னி நட்சத்திர தோஷ காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.


சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் 1 பாதம் வரை சூரியன் பயணிக்கும் போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.


நெருப்பு கோள் சூரியன் மேஷ ராசி செவ்வாயின் வீடாகும். நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்புக் கோள் செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால் நெருப்பு கிரகமான சூரியன், மேஷத்தில் சஞ்சாரிக்கும் போது வெயில் உக்கிரமாக தகிக்கிறது.


பரணியின் தொடங்கி ரோகிணி வரை
சூரியன் பயணம் சித்திரை மாதம் மேஷம் ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியில் முடிகிறது. அசுவினியில் பயணத்தை தொடங்கும் சூரியன், கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு பாதம்வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்கின்றனர்.


அக்னி பகவான்
ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. அக்னியின் முக்கிய குணம் பிரகாசம், ரூபம் ஹிரண்மயம் அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை கொண்டு சேர்க்கிறார். இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர். அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர். அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.


அக்னி நைவேத்தியம்
அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும். பிரசாதமாக முறையே ஞாயிறுக்கிழமை பாயசம், திங்கட்கிழமை பால், செவ்வாய்கிழமை தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் கிழமை தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் கிழமை சர்க்கரை மற்றும் நெய், வெள்ளிக்கிழமை வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனிக்கிழமை பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.


தோஷ காலம்
காண்டவ வனத்தை அக்னி தேவன் கபளீகரம் செய்த காலமே அக்னி நட்சத்திர காலம் என்கிறது புராண கதை. சூரியன் வெப்பம் தகிக்கும் இந்த கால கட்டத்தை கத்திரி வெயில் காலம் என்றும் கூறுகின்றனர். இது தோஷகாலமாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தனர். இப்போதும் கூட வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.


27 நாட்கள் அக்னி ஆட்டம்
இந்த ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை மொத்தம் 27 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலமாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் தாக்கம் குறையத் தொடங்கும். அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு லாக் டவுன் காலம் என்பதால் பல கோவில்கள் மூடப்பட்டுள்ளன.


என்ன செய்யலாம் செய்யக்கூடாது
அக்னி நட்சத்திர காலத்தில் நல்ல காரியங்கள் செய்யலாமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அதே நேரத்தில் முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி