பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை

பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை


தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியல் பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார். 1989-ஆம் வரும் மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.


பன்மொழிப்புலவர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார்.  


தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரான அப்பாதுரை தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழி களிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடிய திறமை படைத்தவர்.


தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார்.


 


 குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம். சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.


சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றார். தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.


திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.


சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.


தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.


‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.


அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.


* ‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றும், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.


* அறிவுச் சுரங்கம், தென்மொழித் தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப்   புலவர் கா.அப்பாத்துரை 


1989-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி