சாப்பிட்டவர்களின் இதயங்களில்  மகாராணியாய்

இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமைத்துப்போட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி


மே 21, 2020 10:07


இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் சமைத்துப்போட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


ஆந்திரா:

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல, ஒரே மாநிலத்திற்குள் சுமார் 700 கி.மீ. தொலைவில் இருந்து வந்து கூட வேலை பார்க்கிறார்கள்.


இப்படி வேலை பார்த்தவர்கள் கூட கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, சொந்த ஊருக்கு போவதற்கு பொதுபோக்குவரத்து வசதி இன்றி அல்லாடுகிற நிலை, தொடர் கதையாய் நீண்டுகொண்டே இருக்கிறது.

அப்படி பாதிப்புக்குள்ளான ஆந்திராவை சேர்ந்த இடம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சமைத்து போட்டார் என்பது காக்கிச்சட்டைக்குள்ளும் தாய்மை கனியும் இதயம் உண்டு என்று நிரூபிப்பதாக அமைந்திருக்கிறது. பொதுவாக போலீசார், இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் மோசமான முறையில் நடந்து கொள்வதாக பரவலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பற்றி வெளிவந்திருக்கும் தகவல்கள், போலீஸ் துறைக்கு பிராயச்சித்தம் தேடித்தருவது போல அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர் மம்தா. அவரும் அவரது கணவரும், அவர்களோடு சேர்ந்த ஒரு குழுவினரும் 700 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள அதே ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தார்கள்.

ஊரடங்கால் வேலை இழந்து, பொதுபோக்குவரத்து சாதனங்களான ரெயில், பஸ் முடங்கிப்போன வேளையில் இவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு அவர்களது கால்களே வாகனங்களாகின.

700 கி.மீ. நடந்தே வந்து விட்டார்கள். நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு அவர்கள் விஜயநகர எல்லைக்கு அப்பால் 25 கி.மீ. தொலைவில் வந்தபோது பசி வயிற்றைக்கிள்ளியது. நடந்து வந்த சோர்வு ஒருபுறம், வயிற்றுப்பசி இன்னொருபுறம் வாட்டி எடுத்தது.

அங்கே மற்றுமொரு சோதனை, சோதனைச்சாவடி வடிவில் வந்தது. அங்கே இருந்த சோதனைச்சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.

இந்தநிலையில் விஜயநகர போலீஸ் சூப்பிரண்டான ஐ.பி.எஸ். அதிகாரி பி.ராஜகுமாரியின் செல்போன் எண், மம்தாவுக்கு கிடைக்கிறது. அவர் உடனே செல்போனில் அந்த அதிகாரியைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரோ அந்த அழைப்பை எடுத்து பேசாமல் தவற விட்டிருக்கிறார்.

பகல் முழுக்க பணியாற்றி விட்டு இரவில் சற்றே இளைப்பாறலாம் என அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது செல்போனை பார்க்க அதில் மம்தாவின் அழைப்பு ‘மிஸ்டு காலாக’ பதிவாகி இருந்தது.

உடனே அந்த எண்ணுக்கு ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமாரி அழைத்துப்பேசினார், மம்தா பேசினார். அவரது குரலிலே சோர்வு, பசி, கண்ணீர், வேதனை, அயர்ச்சி அத்தனையும் கலந்திருந்தது. “பசி தாங்க முடியலம்மா.. ஏதாவது சாப்பிட  கிடைக்குமா? தாகத்துக்கு தண்ணி கிடைக்குமா?” என்று திக்கி திணறி சொல்லி விட்டார்.

உடனே ராஜ்குமாரி, தனது சக போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு, மம்தாவும், அவரது குழுவினரும் பசியாற ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என விசாரிக்க அவர்களோ, ரொட்டிதான் வாங்கித்தர முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் பசிக்கு ரொட்டி போதாது என்பதை ராஜகுமாரி உணர்ந்து ‘நோ’ சொல்லிவிட்டார். வீட்டுக்கு வந்தவர் அவசர அவசரமாக அவர்களுக்கு எலுமிச்சை சாதம் சமைத்து எடுத்துக் கொண்டு ஓடினார். அப்போது நேரம் புதன்கிழமை (நேற்று) அதிகாலை 1.30 மணி.

ஆனால் அதற்குள் மம்தாவையும், அவரோடு வந்தவர்களையும் அரசு முகாமில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்தி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கே சென்றார். அவர்களுக்கு அந்த எலுமிச்சை சாதம் அந்த அதிகாலை நேரத்தில், அந்தப் பசியில் அமிர்தமாய் அமைந்தது. ருசித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட்டவர்களின் இதயங்களில் அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜகுமாரி, மகாராணியாய் வீற்றிருக்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?


செய்தி



செஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,