அழகிய கண்ணே
கண்ணுக்கு எது அழகு?
கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும்போது மட்டும்தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கண்களில் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை முயற்சிகளை எடுக்கலாம். காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்து கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.
கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது. இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும். தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும்.
கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறைகளில், கணினியில் வேலை செய்வோர், ½ மணி நேரம், 1 மணி நேரத்திற்கொரு முறை இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து, பசுமை படர்ந்த மர இலைகளை, புற்களைப் பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும். பன்னீரில், விளக்கெண்ணெயை கலந்து, பஞ்சில் தோய்த்து, கண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும். வடிகட்டிய டீ தண்ணீரில், பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும். கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மை, கண்ணுக்கு, அழகும், குளிர்ச்சியும் சேர்க்கும். கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
|
Comments