தானத்தில் சிறந்தது குருதி
தானத்தில் சிறந்தது குருதி; இது உறுதி: இன்று உலக இரத்த தானம் செய்வோர் தினம்
சராசரியாக மனித உடலில் 5 லிட்டர் இரத்தம் இருக்கும். பொதுவாக மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய், விபத்து, ஆகியவற்றின்போது, பாதிக்கப்பட்டவருக்கு இரத்தம் தேவைப்படும். இதுவரை மனித இரத்தத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை.தேவைப்படும் இரத்தத்தை, இன்னொருவர் தானம் செய்வதன் மூலம் மட்டுமே பெற முடியும். உலகளவில் இரத்தத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
ஒருவர் இரத்ததானம் செய்வதன் மூலம், வேறொருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. இன்று ஒருவர் ரத்த தானம் செய்தால், நாளை அவருக்கே கூட பயன்படலாம்.
நல்ல உடல்நிலையில் உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் இரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். இரத்ததானம் கொடுக்கும் முன், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்து, உரிய அளவில் இருந்தால்தான் தானம் பெறுவார்கள். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தானத்தின்போது, 350 மி.லி., இரத்தம் மட்டுமே உடம்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். அதுவும் 2 நாட்களில் இழந்த இரத்தத்தை மீட்டு விடுகிறது. 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை இரத்ததானம் வழங்கலாம்.
இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள இரத்ததானம் செய்வது உதவுகிறது. இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும் இரத்த தானம் செய்யும்போது சீரடைகிறது. ஒரு யுனிட் இரத்தத்தை மூன்று பகுதிகளாக பிரித்து தேவைப்படுபவர்களுக்கு இரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடியும்..
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு எதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமே ரத்ததானம் செய்யப்படுகிறது. எனவே ரத்தானம் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து செய்தால் மட்டுமே, இந்தியாவில் தேவைப்படும் ரத்தத்தை பெற முடியும்.
அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்க முடியாத "தத்துப்பிள்ளைகளாகி' விட்டன. விபத்தில் அடிபட்டு, சாலையில் இரத்தம் வீணாக... இரத்தம் தந்து காப்பாற்றுவதால், உயிர்பிழைக்கும் மனித உயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம்மால் எப்போதும் செய்ய முடிகிற, கொடுத்தாலும் குறையாத தானம்... இரத்ததானம்தான்.
Comments