வாழ்வாதாரத்தை இழந்த நிலையில்..
இரண்டு சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ஒன்று இன்றைய சம்பவம். மற்றொன்று நேற்றைய சம்பவம். முதலில் இன்றைய சம்பவம்.
எந்த வீட்டில் எந்த மங்களகரமான நிகழ்ச்சி நடைபெற்றாலும்,
எந்த ஆலயத்தில் எந்த முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றாலும், ஏன், சில ஆலயங்களில் அன்றாடமே நடைபெறும் சாதாரண பூசைகளின்போதும், அரசு பொது நிகழ்ச்சிகளாகட்டும், அல்லது விழா நிகழ்ச்சிகளாலும், விழா தொடங்குவதற்கு முன் நம் காதுகளில் கேட்பது மங்கள நாதசுரம் மேளதாளம் இசைதான்.
எளியவர் முதல், பணக்காரர் வரை நாதசுர வித்வான்கள் இசைக் கச்சேரி அளிப்பது சர்வ சாதாரணம். திரையில் இன்றும் சிங்கார வேலனே தேவா என்ற பாடலிலிருந்து, நலம்தானா பாடலைத் தொடர்ந்து, நாதசுர இசைக்கு ஒரு தனி வரவேற்பு இருப்பது உண்டு. அந்தக் காலத்தில் அவர்களுக்கு இருந்த மதிப்பே தனி அப்படிப்பட்ட கலைஞர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நேரில் காணும் சம்பவம் நான் வசிக்கும் தெருவிலேயே நடைபெற்றது. என் வீட்டில் காலை 5-30 மணிக்கே காதை பிளக்கும் நாதசுரம் மற்றும் மேள சத்தம் கேட்டது. உடனே, வீட்டை விட்டு வெளியே வந்து, வெளி கதவை திறந்து எங்கிருந்து இசைச் சத்தம் வருகிறது என்று பார்த்தேன்
என் வீட்டிலிருந்து எதிர்ப்புறம் 6 வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசலில் வாசித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் அல்ல, 3 நாதசுர கலைஞர்கள், 3 மேள வாத்தியக்காரர்கள். சரி, அந்த வீட்டில் ஏதோ விசேஷம் போல என்று எண்ணிக்கொண்டு என் அறைக்குள் வந்து விட்டேன்.
சுமார் 1 மணி நேரம் கழித்து, வீட்டு வாசலைப் பெருக்குபவர் வந்தார். அந்த வீட்டில் என்ன விசேஷம், நாதசுரம் வாசிக்கும் சத்தம் காலையிலேயிருந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறதே, என்றேன். அவர் சொன்ன பதில், என்னை கதிகலங்க வைத்தது. அந்த வீட்டில் யாரோ இறந்து விட்டார்கள், யாரென்று தெரியவில்லை, அதனால்தான் இசை கேட்கிறது என்றார். எப்படி வாழ்ந்த இசைக் கலைஞர்கள், கொரனா என்ற கொடிய நோய்த் தொற்று தாக்குதலினால், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மரண வீட்டில் வாசிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். பொதுவாக, இறப்பு நிகழ்ந்து, 16 ஆம் நாள், சடங்குகளை முடித்து விட்டு, சம்பந்திகள் அளிக்கும் புத்தாடைகளை அணிந்துகொண்டு, கையில் கலச சொம்புடன் கொள்ளி போட்டவர் வரும்போது, அவருக்கு முன்னால் மங்கள வாத்தியம் வாசித்து வருவோர், இன்று இறந்தவருக்கு வாசிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்கள் என்றால் இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஆகவே, உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த வாசிப்பால், ஏதோ ஓரளவு வருமானம் வரும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் என்பது கண்களைக் கலங்கச் செய்கிறது.
இன்னொரு சம்பவம், படித்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விளக்குவது. அதனை நாளை தருகிறேன்
.
Comments