குறுந்தொகையில் உணவு சமைக்கும் பாங்கு
உணவு சமைக்கும் பாங்கு - குறுந்தொகைப் பாடல்
கணவனுக்குச் சமையல் செய்யும் தலைவியின் அழகைப் புனைந்துரைக்கிறது குறுந்தொகைப்பாடல் ஒன்று. தலைவி ஒருத்தி காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் கெட்டியான தயிரைப் பிசைந்து தலைவனுக்குப் புளிக்குழம்பு வைக்கிறாள். குழம்பைத் தாளிக்கும்போது எழும் புகை, தலைவியின் குவளை போன்ற அழகிய கண்களில் நிறைகின்றன. புகை மூட்டத்தில் தானே துலாவிச் சமைத்த புளிக்குழம்பை ‘இனிது இனிது’ என கணவன் உண்டதைக் கண்ட தலைவியின் முகம் நுண்ணிதின் மகிழ்கின்ற காட்சியைக் கூடலூர் கிழார் காட்சிப்படுத்தியுள்ளார்.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்
முகனே” (குறுந்தொகை 167)
நாட்டுப்புற பாடல்களும், பெண்கள் கணவனுக்குச் சமையல் செய்த அழகைப் புனைந்து பாடுகின்றன. ஒரு மனைவி உரலில் நெல்லைப் போட்டு உலக்கையில் குத்தினால் அரிசி உடைந்து போகுமென்று தன் உள்ளங்கையை உரலாக்கித் தன் பெருவிரலை உலக்கையாக்கி ஆவாரம் பூ நிறத்தில் அரிசியைப் புடைத்தெடுத்துக் கணவனுக்கு உணவு சமைக்கிறாள்.
“மூலரெண்டு முறம் எடுத்த
ஏலேலோ கும்மி ஏலேலோ
முறத்துக்கொரு நெல்லெடுத்து
ஏலேலோ கும்மி ஏலேலோ
குத்திநல்லா புடைச்செடுத்தா
ஏலேலோ கும்மி ஏலேலோ
ஒன்னுரெண்டா போகுதுன்னு
ஏலேலோ கும்மி ஏலேலோ
உள்ளங்கையை உரலு பண்ணி
ஏலேலோ கும்மி ஏலேலோ
பெருவிரலை உலக்கை சாத்தி
ஏலேலோ கும்மி ஏலேலோ
அள்ளி நல்லா புடைச்செடுத்தா
ஏலேலோ கும்மி ஏலேலோ
ஆவாரம்பூ தன் நிறம
ஏலேலோ கும்மி ஏலேலோ”
என்று பாடுகிறார். கணவனுக்குச் சுவையான உணவைச் சமைத்துப் பரிமாறுவதும் அவன் சுவைத்து உண்பதை எட்டி நின்று பார்த்து அகமகிழ்வதும் அவன் வயிறார உண்டு முடித்த பிறகு எஞ்சியதை உண்டு வாழ்வதும் நம் கிராமப்புறங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் வழக்கம்.
Comments