உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி
உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி
- அறிமுகம்
- உடலை வளர்க்கும் உணவுகள்
- உடலைப் பாதுகாப்பவை மற்றும் உடலியக்கத்தைச் சீராக்கும் உணவுகள்
- சமூக செயல்பாடுகளில் உணவின் பங்கு
- உளவியல் சார்ந்த செயல்பாடுகள் (PSYCHOLOGICAL)
- சக்தி அளிக்கும் உணவு வகை
- உணவுத் தொகுதிகளின் முக்கியத்துவம்
- உணவுப் பிரமீடு
- சமநிலை (BALANCE)
அறிமுகம்
உணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புகளின் வேதிகலவையாகும். இச்சத்துகள் நிறைந்த உணவு வாழ்நாள் முழுவதும் உடல் வளர்ச்சிக்கும் உடல்நலத்தைப் பேணவும் இன்றியமையாத தேவையாகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான சிறப்பான தேவைகளை நிறைவு செய்வதிலும், உடல் நலம் குன்றியவர்கள் நோயிலிருந்து மீண்டு வரவும் இச்சத்துகள் உதவுகின்றன.
உணவினை, நம் உடலில் செயல்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
உடலை வளர்க்கும் உணவுகள்
புரதம் நிறைந்த உணவினை, உடலை வளர்ப்பவை என்கிறோம், பால், இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள புரதம் முதல் தர புரதமாகும்.
பருப்பு வகைகள் மற்றும் கொட்டை வகைகளில் புரதம் நிறைந்திருந்தாலும், இவற்றை உயர்தரப் புரதமாகக் கருத இயலாது. புரதம் உள்ள உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவுகின்றது. இவை சக்தி அளிப்பவையாகவும் உள்ளது.
உடலைப் பாதுகாப்பவை மற்றும் உடலியக்கத்தைச் சீராக்கும் உணவுகள்
தாது உப்புகள், புரதம் மற்றும் உயிர்ச் சத்துகள் செறிந்த உணவுப் பொருட்களை உடலைப் பாதுகாப்பவை எனவும், உடலியக்கத்தைச் சீராக்கும் உணவு எனவும் கூறுகிறோம். இவை உடல்நலத்திற்கும் உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கும், தசைகள் சுருங்கி விரிவதற்கும், உடலில் நீரின் அளவைச் சமநிலைப் படுத்துவதற்கும், இரத்தம் உறைதலுக்கும், உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கும், இதயத் துடிப்பைச் சீராக்குவதற்கும், இன்றியமையாதது. பால், முட்டை, கல்லீரல், பழவகைகள், காய்கறிகள் போன்ற உணவுகள், உடலைப் பாதுகாக்கும் மற்றும் உடலியக்கத்தைச் சீராக்கும் உணவுப் பொருட்களாகும்.
சமூக செயல்பாடுகளில் உணவின் பங்கு
நமது இனம், சமுதாயம், பண்பாடு, மதம் சார்ந்த வாழ்க்கை முறையில், உணவு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மதம் மற்றும் சமூக அடிப்படையிலான குடும்பங்களின் கூட்டு வாழ்க்கையில் அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக, உணவானது விளங்குகிறது.
உளவியல் சார்ந்த செயல்பாடுகள் (PSYCHOLOGICAL)
உடல் மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமின்றி, உணவு மனிதர்களின் ஒரு சில உளவியல் தேவைகளையும் நிறைவு செய்கிறது. உளவியல் சார்ந்த தேவைகளான பாதுகாப்பு உணர்வு, சமூகத்தில் தன்னையும் ஒரு அங்கமாக உணர்ந்து கொள்ளுதல், அன்பு செலுத்துதல் போன்ற தேவைகளை உணவு மறைமுகமாக நிறைவு செய்கிறது. (எ.கா.) நம் குடும்பத்தினருக்காகச் சுவையான உணவு சமைத்து அன்புடன் பரிமாறுதல் நமது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் செயல்பாடாகும்.
சக்தி அளிக்கும் உணவு வகை
- கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவினை சக்தி அளிக்கும் உணவுகள் என்கிறோம்.
- இவை உடலின் தன்னியக்க உறுப்புகள் சரிவர இயங்கவும், தொழில், குடும்ப அலுவல்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நாம் விரும்பிய பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் ஈடுபடவும், உணவு செரித்து, ஊட்டச்சத்துகளாக மாற்றப்படுவதற்கும் தேவையான சக்தியை அளிக்க வல்லது.
- சக்தியானது உணவு ஆக்ஸிகரணமடைவதால் கிடைக்கிறது. தானியங்கள், வேர்கள், கிழங்குகள், உலர்ந்த பழங்கள், எண்ணெய் வகைகள், வெண்ணெய் மற்றும் நெய் சக்தியை அளிக்கும் உணவு வகைகளாகும்.
உணவு தொகுதிகளின் முக்கியத்துவம்
- தேவையான அளவு ஊட்டச்சத்துகளை அளிக்கக் கூடிய முழுமையான சீருணவைத் திட்டமிட உதவுகிறது.
- ஊட்டச்சத்து நிலையினை மதிப்பிடுதல் : ஒருவரின் உணவு உட்கொள்ளும் அட்டவணையைக் கொண்டு அவர் எந்தெந்த உணவுகளைச் சேர்த்திருக்கிறார். அல்லது தவிர்த்திருக்கிறார் என அறிந்து கொள்ளுவதின் மூலம், அவரது ஊட்டச்சத்து நிலையினைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
- ஊட்டச்சத்து நிலையினை மதிப்பிடுதல் மூலம், ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கல்வியை அளிக்கலாம்.
உணவு பிரமீடு
- உணவு பிரமீடு வழிகாட்டி என்பது 1992-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க விவசாயத் துறை (USDA) பரிந்துரை செய்த, தினசரி உட்கொள்ள வேண்டிய உணவுகளின் ஒரு பொதுவான திட்டம். உணவு வழிகாட்டி பிரமீடு என்பது உடல்நலத்தைப் பேணும் உணவு முறையைத் திட்டமிட உதவும் மதிப்புமிக்க கருவியாகும்.
- உணவு வழிகாட்டி பிரமீடானது ஒவ்வொரு உணவுத் தொகுதியிலிருந்து, ஒருவருக்குரிய தினசரி உணவுப் பங்கீட்டினை பரிந்துரைக்க உதவுகிறது.
- உணவு பிரமீடு மூலம் தானியங்களை பிரதான உணவாக உட்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது. அதனையடுத்து, பழங்கள் மற்றும் காய்கறிகள், பயறு வகைகள், பால் மற்றும் இறைச்சி வகைகள், பின்பு சர்க்கரை மற்றும் எண்ணெய் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- மனிதன் தான் விரும்பும் உணவை, உணவின் சமநிலை, பல்வேறு உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தல், மிதமாக நடுநிலையான உணவு போன்ற அடிப்படைக் காரணிகள் பாதிக்கப்படாமல், உணவு வழிகாட்டி பிரமீடின் பரிந்துரையுடன் உண்ணமுடியும்.
சமநிலை (BALANCE)
சமநிலை என்பது பல்வேறு உணவு வகைகளிலிருந்து உணவினைத் தேர்ந்தெடுத்தல்.
- சர்க்கரை
- எண்ணெய்
- பால் மற்றும் இறைச்சி
- பயறுகள்
- பழங்கள் மற்றும் காய்கறிகள்
- தானியங்கள்
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்
Comments