திரு ஆடிப்பூரம்..
நமக்காக ஒரு ஆன்மீக தொடரை வழங்க இசைந்துள்ளார்
திருமதி ஜெயந்தி சதீஷ்
இந்த தொடரின் முதல் பகுதியாக இன்று
திரு ஆடிப்பூரம் பற்றி வழங்கியுள்ளார்
1. திரு ஆடிப்பூரம்....
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு.. பூரம் நட்சத்திரத்தை திருப்பூரம் என குறிப்பிடுவது எதனால் போன்ற கேள்விக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊரே பதிலாய் அமைகிறது..
திருப்பூரம் என சொல்வதற்கு பதிலாக திருஆடிப்பூரம் என்பதற்கான கேள்வியின் பதில் ஸ்ரீ ஆண்டாள் நள வருடம் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மானிட குழந்தையாய் அவதரித்ததாலேயே திரு ஆடிப்பூரம் என்கிறோம்..
தீயவற்றை அழித்து நல்லதை காக்கும் பொருட்டு.. பெருமாள் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார்..
பெருமாள் அவதரித்த பின்னரே பிராட்டியும் அவதரிக்கிறார்.. ஆனால் கலியுகத்தில் பிராட்டி மானிட பெண்ணாய் அவதரித்து மானிட வாழ்க்கை வாழ்ந்ததற்கான காரணங்கள் என்ன?
இப்படியாய் பல கேள்விகளுக்கு விடை ஸ்ரீவில்லிப்புத்தூரில் விடை கிடைக்கிறது..
யார் இந்த பெரியாழ்வார்? இவருக்காக எதற்காக ஸ்ரீ தாயார் மானிடபெண்ணாய் அவதரிக்க வேண்டும்? .. பல கேள்விகள் எழுகின்றதல்லவா?
: பெரியாழ்வாரின் இயற்பெயர் "விஷ்ணு சித்தர்"
முகுந்தபட்டர், பத்மாவதி அம்மையாருக்கு 5 வது குழந்தையாய் பிறந்தவர்..
சோழ தேசத்தில் இருந்து வந்த வம்சம் என்பதால் சோழிய வம்சர் எனப்படுகின்றனர்..
மதுராபுரியில் ஒரு சமயம் கண்ணன் மாலை கட்டுபவர் வீட்டிற்கே சென்று அவரிடம் , " எனக்கு இந்த மாலையை தருவாயா" என கேட்டாராம்.. மாலை கட்டியவருக்கு வியப்பு.. உலகை ஆளும் பரந்தாமன் சாதாரணமாய் வந்து தன்னிடம் மாலை கேட்கிறாரே ? என்று..
இதை உணர்ந்த விஷ்ணுசித்தர் வேதங்களினாலும், சாஸ்திரங்களினாலும் பெருமாளை அடைந்து விட முடியாது.. தூய பக்தி, இறை தொண்டு மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்பதை மதுராபுரியில் நடந்த உண்மை கதையை கேட்டு பெருமாளின் மேல் தீராத பக்தி கொண்டு மாலை கைங்கர்யம் செய்ய ஆரம்பித்தார்..
எப்படி விஷ்ணு சித்தர் என்னும் பெயர் பெரியாழ்வார் என மாறியது?...
ஒரு சமயம் , பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு நகர்வலம் வருகையில் ஒரு திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு புதியவனைக் கண்டான்.
அவனை எழுப்பி “நீ யார்?” என்று கேட்டான். அந்தப் புதியவன் “ஐயா! நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி வருகிறேன்“ என்றான்..
மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும் உண்டாகில் சொல்“ என்று கேட்டான்.
அவனும் “மழைக்காலத்தின் தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில், முதுமையின் தேவையை இளமையில், மறுமையின் தேவையை இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான்..
மன்னன் மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவில் நடந்தவற்றை சொல்லி “நமக்கு இப்போது குறையொன்றுமில்லை. மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?” என்று கேட்டான்.
செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி அளிப்போம்“ என்றார்
மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட ஆணையிட்டான்..
இதற்கிடையில், விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் பாண்டிய சபைக்கு சென்று பரதத்வத்தை நிர்ணயித்து பொற்கிழியறுத்து வா" என ஆணையிட..
விஷ்ணு சித்தரோ அறிவார்ந்த ஆன்றோர் சபையில் பரதத்வத்தை நான் எப்படி விளக்க முடியும் என வினவ இறைவனோ உன் மூலமாக நான் தான் அந்த காரியத்தை செய்து முடிக்க போகிறேன் என கூறி முடிக்க கனவு கலைந்து எழுந்தார் விஷ்ணு சித்தர்..
அதே சமயம் பாண்டிய மன்னன் கணவில் தோன்றி விஷ்ணு சித்தர் என்பவரை அழைத்து வர வில்லிபுத்தூருக்கு பல்லக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார் ஸ்ரீ வடபத்ரசயன பெருமாள்..
அந்த காலம் போக்குவரத்து வசதி அற்ற காலம்..
மறுநாள் காலை.. விஷ்ணு சித்தர் இல்லத்து வாயிலில் பாண்டிய மன்னன் அனுப்பிய பல்லக்கு இருக்க ஸ்ரீ வடபெருங்கோயிலுடையானை மனதில் எண்ணிய வண்ணம் பாண்டிய சபைக்கு சென்றார் விஷ்ணு சித்தர்..
மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர்..
அங்கிருந்த மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன் வரவேற்பதா? என்றவாறு மனதிற்குள் எண்ணினர்..
அபிமான துங்கனான செல்வநம்பி மறுமைக்குத் தேவையான மார்க்க தரிசனம் காட்ட விஷ்ணு சித்தரை கூறினார்..
விஷ்ணு சித்தரும், இதிகாசமேற்கோள்களால் பரதத்வத்தை விளக்கினார்.
அப்போது கிழிகட்டிய தோரணமானது அவர் முன் வளைந்து கிழியை அறுக்க ஏதுவாக நின்றது. விஷ்ணுசித்தரும், அரசரும், மக்களும் வியக்க விரைந்து கிழியறுத்தார்..இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும் அவரைப் பணிந்தனர்..
மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன் வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும் உடன்வர நகர்வலம் வந்தான்..
அத்த சமயம், ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன், தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார்..
இந்த காட்சியை கண்ட விஷ்ணு சித்தர் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்..
பெருமாளுக்கே பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார்
2 ஸ்ரீ தாயார் அவதாரம்...
பெரியாழ்வார் தான் வென்ற பொற்கிழியை ஸ்ரீ வடபெருங்கோயிலில் சமர்பித்து விட்டு மாலை கட்டும் கைங்கர்யத்தை மிகவும் சிரத்தையாக தொடர்கிறார்..
விஷ்ணு சித்தர் மனம் முழுவதும் அரங்கனை பற்றியே இருக்கிறது..
அவரின் பெருமையை இந்த உலகிற்கு காட்ட ஸ்ரீ தாயார் 5 வயது பெண் குழந்தையாய் நள வருடம் ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று துளசி செடிக்கு அடியில் அவதாரம் ஆகிறாள்..
நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டிருக்கும் சமயம் தன்னை யாரோ அப்பா என அழைப்பதை கண்டு திரும்பி பார்க்கிறார் பெரியாழ்வார்..
யார் என வினவ , ஸ்ரீ வடபெருங்கோவில் தெய்வம் இந்த குழந்தைக்கு கோதை என பெயர் சூட்டி உன் மகளாய் வளர்த்து வா என அசரீரியாய் உத்தரவிடுகிறார்..
ஸ்ரீ மகாலெஷ்மி தாயார் கோதையாய் அவதரித்த நாளே திருப்பூர நன்னாள் ஆகும்..
எந்த ஊரிலும் இல்லாத பெருமை இந்த ஊருக்கு உண்டு.. எல்லா ஊர்களிலும் பெருமாளுக்கே ப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பத்து நாள் உற்சவம் நடைபெறும்.. இங்கு ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும்..
ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு ஆடிப்பூரம் திருவிழா காட்சிகளின் புகைப்படதொகுப்பினை இங்கே பார்க்கலாம்
திருமதி ஜெயந்தி சதீஷ் ( ஸ்ரீவில்லிபுத்துர்)
Comments