இசை பங்களிப்பு மூலம் எஸ்பிபி உதவி

             கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் முடக்கம் அடைந்துள்ளன. சினிமாத் துறையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால், பல்வேறு தொழிலாளர்கள், கலைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். தொழிலாளர்களை உள்ளடக்கிய பெப்ஸி அமைப்பு மூலம் பலருக்கும் உதவிகள் போய்க் கொண்டிருக்கின்றன.


            பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா ஊரடங்கு ஆரம்பமான நாட்களில் இருந்தே கொரோனா நிவாரண நிதியை தன்னுடைய இசைப் பங்களிப்பு மூலம் வசூல் செய்ய ஆரம்பித்தார். முதலில் தினமும், பின்னர் வாரத்திற்கு சில நாட்கள் என பேஸ்புக்கில் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க பல்வேறு மொழிப் பாடல்களைப் பாடினார். தன்னிடம் விருப்பப் பாடலைக் கேட்பவர்கள் கொரோனா நிதியை வழங்கிப் பாடலைக் கேட்க வேண்டும் என எஸ்பிபி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பலரும் நன்கொடை கொடுத்து தங்களின் விருப்பப் பாடல்களைக் கேட்டனர்.


'லிசனர்ஸ் சாய்ஸ்' என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சி மூலம் 17 லட்சத்திற்கும் கூடுதலான தொகை, மேலும் சில இசைக் கலைஞர்கள் அப்படி வசூலித்த 3 லட்ச ரூபாய் சேர்த்து 20 லட்ச ரூபாயை நன்கொடையாக திரட்டியதாக எஸ்பிபி இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவித்துள்ளார்.


அந்தத் தொகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாயும், மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு 12 லட்ச ரூபாய் வரை நிவாரணத் தொகையாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக 80 ஆயிரம் ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.


கொரோனா நிவாரண நிதியை பலரும் பல்வேறு விதத்தில் தங்கள் ரசிகர்களிடமிருந்து பெற்றனர். ஆனால், தன்னுடைய இசை பங்களிப்பு மூலம் எஸ்பிபி செய்ததில் அவருடைய ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்றனர்.


 



ருத்ரா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி