ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


 





















    
 


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


ஆகஸ்ட் 18,  2020 11:50 AM


சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது.


 


இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.


 


 


 


பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், டெல்லி மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், ஆரியமா சுந்தரம், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வைகை, வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகோ, டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். இவர்களது வாதம் 45 நாட்களுக்கும் மேலாக நடந்தது.



அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிறப்பித்துள்ளனர்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது.  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. தீர்ப்பின் முழு விவரம் மதியம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,