ஒரு போளியின் விலை

இன்றைய சிறுகதை


                    ஒரு போளியின் விலை: 



ஏதோ சில பொருட்களை வாங்கித் திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு ஹோட்டலின் `இன்றைய ஸ்பெஷல்' போர்ட் கண்ணில் பட்டது. `ஏன்டி, என்னவோ சூடா போளி போடறோம்னு போட்டிருக்கானே, ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டு விட்டுப் போவமா?' 


 


`ஒண்னும் தேவையில்லை. கையில மளிகைச் சாமானை வைய்ச்சுண்டு போளி கேட்கறதாக்கும். பராக்கு பார்க்காம மொதல்ல ரோட்டைப் பார்த்து ஸ்கூட்டரை ஓட்டுங்க' என்று கடிந்து கொள்கிறாள் மனைவி. போளி சாப்பிடாமலே தம்பதி வீடு திரும்புகின்றனர். அந்த ஹோட்டலில் போளியின் விலை ஒன்று இருபது ரூபாய். 


 


கணவன் போளியை மறந்து விட்டு வேறு வேலையில் மூழ்கியிருக்க, மனைவி மறுநாள் பண்டிகைக்கான முஸ்தீபில் இறங்குகிறாள். கடைசி பாத்திரத்தையும் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு ஒரு பத்து நிமிஷம் ஓய்வெடுக்கலாம் என்று திரும்ப எத்தனிக்கையில் மண்டையில் ஒரு மின்னல் தோன்றுகிறது. `நேத்து எங்கயோ போளி சாப்பிடலாமான்னு கேட்டார் இல்ல? சரி, மிச்சம் மாவு நிறைய இருக்கே, வெல்லம், நெய்யுல பொறட்டிப் போட்டு நாலே நாலு தட்டலாமா?' என்று அவளுக்குத் தோன்றுகிறது. அங்கே போளியின் விலை 100 ரூபாய். 


 


மனைவி மாவை அளந்து போடும் போது தன் வீட்டுக்கு அருகிலுள்ள மாப்பிள்ளை, பேரனை நினத்துக் கொள்கிறாள். `பேரன் சாப்பிட மாட்டான். நான் ஒண்னு சாப்பிடறேன். மாப்பிள்ளைக்குக் கொண்டு வா. என் மாமியார் வந்திருக்கா. அவளுக்கும் சேர்த்து எடுத்து வா' என்று போனில் மகள் சொல்கிறாள். அங்கே போளியின் விலை இன்னும் ஏறுகிறது. ஒரு போளி 250 ரூபாய். 


 


. `ஏங்க கிளம்பறீங்களா? ஏதோ போளி நேத்து கேட்டீங்களே. ரெண்டு துண்டு வாயிலே போட்டுட்டு வாங்க. பொண்ணு வீட்டுக்கு போய்ட்டு வந்துடலாம். மாப்பிளைக்கு போளின்னா ரொம்பப் பிடிக்கும்.' 


 


`அது சரி. உன் பொண்ணு வீட்டுக்கு மட்டும் போனா எப்படி? என் அண்ணன் பேரன் என்ன குத்தம் பண்ணினான்? போன தடவை போன போது என் பையை நோண்டி நோண்டிப் பார்த்தான். இன்னொரு நாலு அஞ்சு எக்ஸ்‌ட்ரா எடுத்துக்க' 


 


`சரி தான். சரி அப்ப நீங்க சட்டையை மாட்டிட்டுக் கிளம்புங்க. இன்னும் நாலு சூடா தட்டி எடுத்துக்கறேன்.' 


 


இங்கே போளி விலை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போட்டி போடும் போலிருக்கிறது. ரூபாய் 1000!!


 


`ஒருவன் மற்றவர்களுக்காகக் கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்'. உங்களுக்கு எப்படி? 20 ரூபாய் போளி போறுமா? 1000 ரூபாய், 10,000 ரூபாய் போளி வேணுமா? காசு செலவு அதிகம் இல்லீங்க. இங்கே விலைவாசி இரண்டாம் பட்சம் தான். மனோ பாவம் தான் முக்கியம். 


 


 


ஸ்ரீதர் சாமா


annaroad@gmail.com


94443 92452


 


 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,