சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம்

நடிகர் எழுத்தாளர் சோ அவர்களின் பிறந்தநாள் இன்று


 


"சோ" எழுதிய எங்கே பிராமணன்? தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சுவையான கேள்வி-பதில் உரையாடல்:



கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?



சோ : நீங்கள் பகுத்தறிவு என்று பேசுவதால் முதலில் அந்த விஷயத்தைப் பார்ப்போம். இப்போது ஒரு தலைவரின் சமாதி என்று ஒன்றை நிறுவி, அங்கே போய் வருடா வருடம் மலர் வளையம் வைக்கிறார்கள். ஏன்? அந்தத் தலைவரும் என்றைக்கோ போய்ச் சேர்ந்து விட்டவர்தானே? இங்கே இவர்கள் வைக்கிற மலர் வளையம், அங்கே அவருக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அல்லது அந்த மலரின் வாசனை அவருக்குப் போய் விடுமா? அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. அதை மட்டும் ஏன் செய்கிறார்கள்? அதுவும் அவர் என்று இறந்தாரோ, அந்தத் தேதியில் போய்ச் செய்வானேன்? மற்ற தினங்களில் செய்தால், அந்த மலர் வளையம் அவருக்கு ஏற்புடையதாகாதா? அவர் இறந்த தினத்தன்று இந்த மரியாதையை ஒரு அரசியல்வாதி செய்யவில்லை என்றால், உடனே அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. ‘இறந்த தலைவர் மீது இவருக்கு மரியாதை இல்லை’ என்ற பேச்சு வருகிறது. சரி, இப்படி மலர் வளையம் வைப்பதால் ஒருவேளை ஓட்டு வருமோ, என்னவோ தெரியாது. 
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அது அவர்களுடைய பிரேதத்திற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல. அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று – ஆதித்ய ரூபம்; இரண்டாவது – ருத்ர ரூபம்; மூன்றாவது – வஸு ரூபம். அந்த ரூபத்தில் அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதை இங்கே செய்யப்படுகிற சிராத்தம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதில் முக்கியமானதே சிரத்தைதான். இந்த சிராத்தத்தைத்தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறோம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,