லீனா மணிமேகலையின் `மாடத்தி'
லீனா மணிமேகலையின் `மாடத்தி'
ஆவணப்படங்கள், கலைப்படங்கள் வழியாக அரசியலைப் பேசும் 'தனித்தியங்கும் திரைப்பட இயக்குநர்களில் ' (Independent film makers)பலர் தமிழில் இருக்கிறார்கள்‘
. அத்தகையவர்களில் முக்கியமானவர் லீனா மணிமேகலை. சமீபத்தில்இவர் இயக்கியிருக்கும் 'மாடத்தி', புதிரை வண்ணார்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பேசுகிறது.
சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் இந்தியாவின் நூற்றாண்டுகால துயர வரலாறு நாம் அறிந்தததே
. தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போலவே 'காணக்கூடாத சாதிகளாக' இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். இவர்கள் பகலில் நடமாடக்கூடாது. இரவில் மட்டும்தான் வெளியில் வரவேண்டும். எப்படி பட்டியலினச் சாதிகள் பிற ஆதிக்கச்சாதிகளால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதைப்போல பட்டியலினச் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் இவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளை வெளுப்பதே இவர்களுக்கான குலத்தொழில்.
இதைக்கேள்விபடுவதே நம்மனதை கஷ்டபடுத்துகிறது அல்லவா
மாடத்தி
சாதியப்படிநிலையில் இவர்களுக்கு மேலேயிருக்கும் பட்டியலினச் சாதியினர் புதிரைவண்ணார்களை ஏறெடுத்துப்பார்க்க மாட்டார்கள். இவர்கள் செல்லும் வழியில் 'மேல்சாதியினர்' வந்துவிட்டால் அவர்கள் பார்வையில் படாதவாறு மறைந்துவிட வேண்டும்
இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்கள்; அடிமைகளுக்கான அடிமைகள். சாதியின் மோசமான அம்சமே தனக்கு மேலே ஒரு சாதி இருப்பதைப்போல கீழே ஒரு சாதியும் இருப்பதுதான். அதனாலேயே தங்களுக்கு ஓர் அடிமை கிடைத்த திருப்தியில் ஒடுக்கப்பட்டவர்கள் திளைக்கும்போது சாதியத்தின் இருப்பு காப்பாற்றப்படுகிறது. இப்படி பார்க்கக்கூடாத சாதிகளாக வாழ்பவர்கள்குறித்து டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தன் காலத்திலேயே பதிவுசெய்திருக்கிறார்.
பல ஆண்டுகள் கழிந்தாலும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளில் நடந்ததைப்போல பெரிய மாற்றங்கள் எதுவும் புதிரைவண்ணார்கள் வாழ்க்கையில் நடந்துவிடவில்லை
. இவர்கள் அளவில் சிறுபான்மைச்சாதி. சாதிச்சான்றிதழ் இவர்களுக்குக் கிடைப்பதே சிரமமான நிலையில் இவர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது குறித்த முறையான ஆவணங்கள் இல்லை. எழுத்தாளர் இமையம் அவர்கள் இவர்களை பற்றி 'கோவேறு கழுதைகள்' என்னும் நூலை எழுதினார். அதைத்தாண்டி மிகச்சில ஆய்வுக்கட்டுரைகள் என்னும் அளவிலேயே இவர்கள் குறித்த பதிவுகள் இருக்கின்றன.
ஒடுக்குமுறையின் எல்லா வலிகளையும் தன்மீது தாங்கிக்கொள்ளும் புதிரைவண்ணார்கள் குறித்துத்தான் லீனா மணிமேகலையின் 'மாடத்தி' - 90 நிமிடப் படம் பேசுகிறது.
இவர்களது பிரச்னைகளை கலைநேர்த்தியுடன் கூடிய புனைவாக லீனா.தந்துள்ளார் என சொல்லலாம்
கதைப்பற்றி
புதிதாகத் திருமணமான தம்பதி பைக்கில் ஒரு காட்டுவழியில் போகும்போது மனைவிக்கு மாதவிடாய் வந்துவிடுகிறது. நாப்கின் இல்லாத சூழலில் துணியாவது கிடைக்குமா என்று கேட்கிறாள் அந்தப் பெண். அருகேயிருந்த ஒற்றைக்குடிசையில் ஏதாவது துணி கிடைக்குமா என்று பார்ப்பதற்காகச் சென்ற கணவன் நெடுநேரமாகியும் திரும்பவில்லை. பதற்றத்துடன் அந்தப் புதுப்பெண் குடிசைக்குச் செல்லும்போது அங்கே ஒரு சிறுவன் மட்டுமே இருக்கிறான். அவன் வரைந்த ஓவியங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அந்த ஓவியங்களின் வழி 'மாடத்தி'யின் கதை விரிகிறது.
'மாடத்தி'யில் சிறுவன் வரைந்த ஓவியங்களின் வழி கதை சொல்லப்படுவது குரசோவாவை நினைவுபடுத்தியது.
'மேல்சாதி'யினரின் துணிகளைத் துவைப்பது, அவர்கள் இறந்துவிட்டால் குழிவெட்டுவது ஆகிய தொழில்களைச் செய்து அவர்கள் கண்களில் படாமல் ஊர் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் புதிரைவண்ணார் தம்பதியினர் வேணியும் சுடலையும். அவர்களது மகள் யோசனாவுக்கு சிறுவயதுக்கே உரிய கனவு ததும்பும் விழிகளும் ஊருக்குள் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஒருநாள் ஊர்த்திருவிழாவில் சாமி வழிபாடு நடக்கும்போது பெற்றோருக்குத் தெரியாமல் அவள் ஊருக்குச் சென்றுவிடுகிறாள். அங்கே குடித்துக்கொண்டிருக்கும் 'மேல்சாதி' இளைஞர்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கபடுகிறாள். பிறகு அவளே 'மாடத்தி' என்னும் பெண் தெய்வமாய் மாறி, தங்களைப் பார்க்கக்கூடாது என்று ஒதுக்கிவைத்தவர்களின் கண்களைப் பறித்துவிடுகிறாள். இந்தக் கதைகளைச் சிறுவன் தன் ஓவியங்கள் வழி அந்தப் புதுப்பெண்ணுக்கு விளக்குவதாகப் படம் அமைந்திருக்கிறது.
பாதையில் செல்லும்போது ஆதிக்கச்சாதியினர் வந்தால் புதர்களில் தாயும் மகளும் மறைந்துகொள்வது ஆரவாரக் கூச்சலுடன் பொழியும் அருவியில் குளித்துக்கொண்டிருக்கும் யோசனா, ஓர் 'மேல்சாதி' இளைஞன் அங்கே குளிக்க வந்ததும் பாறையிடுக்கில் ஒளிந்துகொள்வது எனப் பல காட்சிகளில் சாதியத்தின் வன்முறையை மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் லீனா.
'காணக்கூடாத சாதி' என்று ஒதுக்கிவைத்துக்கொண்டே கணவனை சாராயம் குடிக்கவைத்துவிட்டு 'மேல்சாதிக்காரன்' வேணியைப் பாலியல் வன்முறை செய்வதும் அந்தக் கோபத்தை வேணி துவைக்கும் துணிமீது காட்டுவதும் என காட்சிகள் அடுத்தடுத்து விரிகின்றன. ஒடுக்கப்பட்ட பெண்கள்மீது பாலியல் மீறல்கள் மேற்கொள்ளப்படும்போது மட்டும் 'தீண்டாமை' விலகிவிடுகிறது என்பதுதான் சாதிய எதார்த்தம்.
பொதுவாகவே பெரும்பாலான பெண் தெய்வங்களுக்குப் பின்னால் ரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையும் கொலைக்கதையும் இருக்கும். அதேபோல்தான் இங்கே பாலியல் வன்முறைக்கு உள்ளான யோசனா, 'மாடத்தி' என்னும் பெண் தெய்வமாக மாறுகிறாள்.
யோசனாவாக அஜ்மினா காசிம், தாய் வேணியாக செம்மலர் அன்னம், தந்தை சுடலையாக அருள்குமார், ஊர்த்தலைவராக புருஷோத்தமன், ஊரின் முக்கிய பிரமுகராக கிரிக்கெட் மூர்த்தி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
திரைக்கதை: லீனா, ரபீக் இஸ்மாயில், கவிஞர் யவனிகா ஶ்ரீராம்
வசனம்: ரபீக் இஸ்மாயிலும் கிரிக்கெட் மூர்த்தியும்
இசை :. கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு:. ஜெஃப் டோலன், அபிநந்தன், கார்த்திக் முத்துக்குமார்
இந்த படத்தை திரையரங்குகளிலோ ஓடிடி தளங்களிலோ 'மாடத்தி'யைக் காண இயலாத சூழலில் 'மாடத்தி'யை இணையத்தின் மூலம் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது.
வட அமெரிக்காவின் தெற்காசிய திரைப்படவிழாக்கள், Coalition of South Asian Film Festivals CoSAFF.org என்று ஒரு அமைப்பாக இணைந்து நடத்தும் மாபெரும் திருவிழாவில் 'மாடத்தி' படம் திரையிடப்படவிருக்கிறது.
அக்டோபர் 8, மாலை 5 மணி (அமெரிக்க பசிபிக் நேரம்) மற்றும் அக்டோபர் 9, காலை 5.30 மணி (இந்திய நேரம்) ஆகியவற்றில் நேரலையாகத் திரையிடப்படுகிறது.
திரையிடல் முடிவில் திரைப்படக் குழுவினரோடு நேரலை கலந்துரையாடலும் நடைபெறுகிறது
அக்டோபர் 7-10 மூன்று நாட்கள் விழாவில் பதிவுசெய்து கொள்பவர்கள் படத்தை கேட்டுப் பெற்று பார்க்கும் வாய்ப்பும் தரப்படுகிறது. கட்டணம் எதுவும் இல்லை. இலவசமாக Cosaff.org இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்துகொண்டால் 'மாடத்தி'யை மட்டுமல்லாது இந்த ஆண்டில் வெளிவந்த காத்திரமான தெற்காசியப் படங்களையும் காணலாம்.
Comments