மூக்குத்தி அம்மன்: விமர்சனம்

மூக்குத்தி அம்மன்: விமர்சனம்


வீட்டுக்குள் வரட்டுமா என்று ஆன்லைன் அசரீரியாகக் கேட்டபோது, தீவிர பக்தைக்கோ, பக்தனுக்கோ கொடுமை செய்யும் வஞ்சகர்களை மூக்குத்தி அம்மனே பாடம் கற்பிக்கிற கதையாக இருக்கும் என்ற எண்ணமே ஏற்பட்டது. சரி, அப்படியான படங்களைப் பார்த்து வெகுநாளாகி விட்டது, இதைப் பார்த்துவைப்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இது வேறு மாதிரி என்ற தகவல் கிடைக்க ஓர் எதிர்பார்ப்பாக மாறியது.


மக்களின் அச்சத்தையும் அறியாமையையும் முதலீடாக்கிக் கோடிகளில் பணம் குவிக்கிற சிலரது போலி ஆன்மிகத்தை அம்பலப்படுத்துகிற சினிமா முயற்சி இது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், லட்சக்கணக்கான மக்கள் மனங்களையும் வளைத்துப்போட்டு, 170 நாடுகளில் ஆசிரமம் வைத்திருக்கிற பகவதி பாபாவோடு மோதுகிறான், தொலைக்காட்சி நிருபரான ராமசாமி. அதில் அவனுக்குத் துணையாக வருவது யாரென்றால் மூக்குத்தி அம்மனே!


பாரம்பரிய பக்தி, புதிய விவகாரங்கள் என இணைத்து, கலகலப்பு நிறைந்த நகைச்சுவைப் படையலாக வந்திருக்கிறது படம். ஆகவே குடும்பங்களில் பெரியவர்கள் இளையவர்கள் எல்லோரும் விரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். கடவுளே நேரில் வந்து பிரச்சினைகளைப் பேசுகிற, தீர்த்துவைக்கிற கதைகள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்திருக்கின்றன. ‘கடவுள்’ வந்து நாத்திகம் பேசிய படம்கூட உண்டு. அந்த வம்சாவளியில் வந்துள்ள இந்தப் படத்தில், அம்மன் உண்மையான பக்திக்கும் சுயநல பக்திக்கும் உள்ள வேறுபாட்டைப் பேசுவது நயம்.


வேறொரு கடவுளின் கோயிலுக்குப் பெரும் கூட்டமும், உண்டியல் வசூலும் போவதைச் சொல்லி, தனது கோயிலையும் அதேபோல் புகழ் பெறச் செய்ய வேண்டும் என்பது, நாயகனுக்கு வரமளிப்பதற்காகக் குடும்பத்துக் குலதெய்வம் போடுகிற நிபந்தனை. அதற்காகப் பாம்புப் புற்றில் பால் ஊற்றெடுக்கிற ஒரு மகிமைத் தந்திரத்துக்கு ஏற்பாடு செய்கிறான் நாயகன். கடவுள்களின் போட்டி போலத் தொடங்கினாலும், உண்மையான மோதல் என்னவோ போலி மகிமைவாதிகளுடன்தான்.


 
பெரிய இடத்தோடு வம்பு வைத்துக்கொள்வதற்குத் தயங்குகிற ஊடக நிறுவன நிர்வாகியும் வருகிறார். “சாமியார் Vs சாமி” என்று மோதல் முற்றுகிறபோது, முந்தைய சில அரசியல் படங்கள் போல, இதிலும் நேரடி தொலைக்காட்சி பேட்டியின் மூலமாக உண்மைகள் வெளிவருகின்றன. அங்கேயே வந்து காட்சி தருகிற அம்மனை மடக்குவதாக நினைத்து, ”நீ உண்மையாகவே கடவுள் என்றால் நீயே அந்த அற்புதத்தைச் செய்திருக்கலாமே, ஏன் ஒரு மனிதனைப் பயன்படுத்தினாய்” என்று பகவதி பாபா கேட்க, “உண்மைதான். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நீ ஏன் புரோக்கராக இருக்க வேண்டும்” என்று அந்தக் கேள்வி திரும்பி வந்து இவர் மேலேயே பாய்கிற இடம் பலரையும் யோசிக்க வைக்கக்கூடியது.


“கடவுளே இல்லை என்று சொல்கிறவர்களால் பிரச்சினை இல்லை, நான்தான் கடவுள் என்று சொல்கிறவர்கள்தான் பிரச்சினை.” - பக்தனிடம் அம்மன் இப்படிக் கூறுகிற இடம் முக்கியமானது. தன்னைக் கடவுளின் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டு, அம்மனிடமே பேசி சிக்கல்களைத் தீர்ப்பதாகக் கூறுகிறவன் தன்னை எதிர்க்கிறவர்களை வேறு மதத்தவர்களாலும் வெளிநாட்டவர்களாலும் இயக்கப்படுகிறவர்களாகக் காட்ட முயல்வதை அம்மனே தட்டிக்கேட்கிற இடம் நுட்பமானது.


கணவன் குடும்பப் பொறுப்பைக் கைகழுவிவிட்டு ஓடிப்போனதால் நான்கு குழந்தைகளை தானே வளர்க்கும் சுமையைச் சுமக்கும்  தாய், கூசாமல் புளுகுகிறவளாக மாறிவிடுவது புரிந்துகொள்ளத்தக்கது. 


திரும்பி வர மாட்டானா என்று ஏங்கியவர் பொய்யர்கள் கூட்டத்தில் இருந்த அவன் மறுபடி வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறுகிறபோது எடுக்கிற முடிவு ஏற்கத்தக்கது. தாத்தாவும் அம்மாவும் மூன்று தங்கைகளுமாக ராமசாமியின் குடும்பம் திருப்பதி கோயிலுக்குப் போக எடுக்கிற முயற்சிகள் தட்டிப்போனாலும், படம் பார்க்கிறவர்களின் மனக்கோயிலுக்குள் வந்துவிடுகிறார்கள்.


என்னதான் பொழுதுபோக்குப் படம் என்றாலும், பார்த்த பொழுதை அர்த்தமுள்ளதாக்குகிற விஷயங்கள் இவ்வளவு இருக்கின்றன படத்தில்.


அந்தச் சாமியார் நேரலை பேட்டியில் ஒருமுறை பட்ட பின் இரண்டாவது பேட்டிக்கு வருவாரா?


 ஆயினும், மக்களின் ஒரு உரிமையாகிய இறை நம்பிக்கை சுரண்டப்படுவது பற்றிப் பேசுகிற ஒரு சினிமா விரும்பிப் பார்க்கிற சுவாரசியமான படமாகவும் வந்திருப்பது சிறப்பு.


பண்பலை வானொலித் தொகுப்பாளராக அறிமுகமாகி, கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராகி, படத்துறையில் கால் பதித்த ஆர்ஜே பாலாஜி, கதையை எழுதி, நடித்திருப்பதோடு, இயக்குநராகவும் அவதரித்திருப்பது அக்கறையின் அருள். அவரும் இணைந்து இயக்கியிருக்கும் சரவணனும் அடுத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


நயன்தாரா அழகாகத் தனது கம்பீரத்தை நிறுவியிருக்கிறார்.


 ஊர்வசி சர்வ சுதந்திரமாகத் தனது ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 


போலி குருவாக அஜய் கோஷ் மிகையாக நடித்திருப்பதாகத் தோன்றுகிறது, ஒருவேளை குறிப்பாக யாரையும் அடையாளப்படுத்துவது போல் இருக்கக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்தாரோ என்னவோ. 


மௌலி  தங்கையராக வருவோர், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருண்ணன் , இசையமைப்பாளர் ஜி.கிரிஷ், தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என எல்லோருமாகச் சேர்ந்து செய்துள்ள மூக்குத்தி தரமானதாக மின்னுகிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி