ரமணமகரிஷி பகுதி (2)
ரமணமகரிஷி
தொடர்
பகுதி (2 )
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு"
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். பிற பற்றுகளை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.
இந்த திருக்குறள் வேங்கடராமனுக்கு பொருந்தும்.
தனது 16 ஆவது வயதில் வேங்கடராமனுக்கு தூண்டுதலை ஏற்படுத்தியதொரு புத்தகம். அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிறப்பினை உரைக்கும் பெரியபுராணம். துறவும்,தெய்வீக உறவும் சாத்தியமானது தான் என்பதை முதன் முதலில் அறிந்தார்.
இதன் காரணமாக, அவருள் ஒரு விழிப்புணர்வு எழ ஆரம்பித்தது. அவை தேக, மனோநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு பரவச உணர்வே என கண்டறிந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் அத்தகைய விழிப்புணர்வை வ
வேங்கடராமன் பெற்றார். நான் அப்போது அதனை ஜுரம் போன்றதாக எண்ணியிருந்தேன். ஆனாலும் வெகு இனிதான ஜுரம் என்று பகவான் பின்னாளில் அதைக் குறிப்பிட்டதுண்டு.
இந்த அறநிலை (awareness) இடைவிடாத முயற்சியில் பெறுவதாகும். இதன் முடிவாக சுயம் ( தன்னை அறிதல்) வெளிப்படும். இதில் கிடைக்கிற பேரின்ப உணர்வு இகவாழ்வில் சிலருக்கு மட்டும் அரிதாக கிடைக்கிற அனுபவம். இது பின்னாளில் பகவான் என்று போற்றப்பட்ட வேங்கடராமருக்கு வாய்த்தது.
மதுரையை விட்டு அவர் புறப்படுவதற்கு ஒரு மாதம் முன்பாக அந்த அனுபவம் அவருக்குக் கிட்டியது. திடீரென்று தான் அந்த செயல் ஏற்பட்டது. அப்போது அவருடைய மாமா வீட்டில் முதல் தளத்திலுள்ள ஒரு அறையில் அவர் அமர்ந்திருந்தார். எப்போதுமே ஆரோக்கியமான உடம்பு அவருக்கு. இருந்தாற் போலிருந்தது மரண பயம் அவரை ஆக்கிரமித்துக் கொண்டது.அந்த பயத்துக்கு என்ன காரணம் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் அவருடைய மனது உள் நோக்கி தன்னிலையில் கரைந்து அம்மரண பயத்தை வென்றது. அப்போது வேங்கடராமன் அந்த குறுகிய நேர மரண அனுபவத்துக்கு சாட்சியாய் நின்று மரணம் கடந்த உண்மை நிலையும் அவர் உணர்ந்தார்.
பகவானே அது பற்றி விவரித்திருக்கிறார் கேளுங்கள் :
நான் இறக்கப் போவதாக உணர்ந்தேன். அது பற்றி என்ன செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு மருத்துவரையோ, பெரியவர்களையோ நண்பர்களையோ அணுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்த பிரச்னையை நாமே தீர்த்துக் கொண்டாலென்ன என்பதை உணர்ந்தேன். "இதோ உடம்பு மரணிக்கிகிறது. மரணம் என்பது என்ன? என நான் கேட்டுக் கொண்டேன். என்னுடைய உடலுறுப்புகள் விரைத்து போயின. என்னுடைய மூச்சை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். உதடுகள் இறுகி இருந்தன. " நான்....." என்றோ, வேறு எந்த வார்த்தையையோ உச்சரிக்க என்னால் முடியவில்லை.
உடம்பு அமைதியாக அசைவற்றுக் கிடந்தது. அதன் பின்னர் நான்.... என்கிற குரல் மட்டும் உள்ளுக்குள் ஒலித்தது.
என் ஆளுமையின் முழு வீச்சையும் என்னால் உணர முடிந்தது. ஆக, உடம்பை கடந்து ஆன்மாவே நான். உடம்பு மரிக்கிறது. ஆனால், அதற்கும் அப்பாலுள்ள ஆன்மாவை மரணம் தொடுவதில்லை. அதன் அர்த்தம் என்ன?
மரணமற்ற ஆத்மாவே நான். அந்தக் கணத்திலிருந்து மரண பயம் என்னை விட்டு அகன்றது. இது வெறும் சிந்தனை அல்ல :அனுபவம் என்கிறார் வேங்கடராமன்.
வேங்கடராமனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அடுத்த மாறுதல் நாளைய பதிவில்.
--முருக.சண்முகம்
Comments