ரமணமகரிஷி (5)

  ரமணமகரிஷி (5)

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :

பகுதி (5)





 திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபத்தில் அவர் தனக்கென ஒரு இடத்தை நிர்ணயம் செய்து கொண்டார். இரவும் பகலுமாய் நாட்கள் பல கழிந்தும் அவர் இந்த இடத்தை விட்டு அசையவில்லை உலகம் அற்றுப் போயிற்று. நிஜம் கிடைத்துவிட்டால் நிழல் ஏன் தேவைப்படுகிறது? சில வாரங்களுக்கு அதே நிலை நீடித்தது. அரிதாகவே அசைவுகள் :ஆனால் எப்போதும் மௌனம்.


 சுய அறிதலுக்கு  பிறகு வாழ்க்கையின்  இரண்டாவது கட்டமாக  அவ்விதம் ஆரம்பமானது.முதல் கட்டத்தில் பேரொளி மறைந்து கிடந்தது. ஆசிரியரிடம் பெரியோர்களிடம் முன்னெப்போதையும் போலவே பணிவு மிக்கதாக இருந்த வாழ்க்கை அது.


 இப்போது அவர் உள்முகமாய்  திரும்பியிருந்தார். புறவுலகம் முற்றாகப்  புறக்கணிக்கப்பட்டது.


 இதுவே மூன்றாவது கட்டத்தில்  கலந்து சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கு  நிலைப்பட்டது.  தனிமனிதரில்

 50 ஆண்டுகால  ஆன்மீகம் என்பது நெடிய அனுபவம் மகத்துவம் பொருந்தியது.


 ரமணரை அணுகியவர்கள் எல்லாம் அவரிடமிருந்து வெளிப்பட்ட பிரகாசத்தின் வீச்சை உணர்ந்தார்கள். நண்பகல் சூரிய ஒளி போன்ற பிரகாசம்!


 ரமணருக்கு சில ஆண்டுகள் முன்பாகவே திருவண்ணாமலை வந்து சேர்ந்தவர் சேஷாத்திரி சுவாமிகள்.புதிதாக வந்த பிராமண சுவாமியை  அவர் தாமாகவே கவனித்துக் கொண்டார். சிலை மாதிரி தியானித்திருந்த ரமணரைப் பார்த்து பள்ளிக்கூடச்  சிறுவர்கள் "சின்ன சேஷாத்ரி'' என்றார்கள்.


அவர் மீது கல்லெறிந்தார்கள். சிறு பிள்ளைகளுக்கே உரிய  குறும்பு. தங்கள் வயதொத்த ஒருவனாவது தவம் பண்ணுகிறதாவது என்ற கீழ்த்தரமான சிந்தனை.


 சேஷாத்திரி சுவாமிகள் அவர்களை விரட்டியடிக்கிற  முயற்சியில் முழுமையாக வெற்றி பெற்றார் என்று  சொல்வதற்கில்லை. ரமணர்  தொந்தரவுகளை தவிர்க்க எண்ணி பாதாள லிங்கம் என்கிற நிலவறை (ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள) க்குள் பாதுகாப்பாக அமர்ந்தார்.


 அந்த லிங்கத்தைப் பற்றி கொண்டு அப்பா நான் உன்னிடம் வந்து விட்டேன் என்றார்.


 பாதாள லிங்கம் இருந்த பகுதியானது  ஒரு இருட்டு நிறைந்த சூரிய வெளிச்சம் வராத இடம்.அங்கு அவருக்கு உறக்கம் இல்லை, உணவும் இல்லை.

 பூச்சியின் தொல்லை.  அதே சமயம் சரீரத்தைப் பற்றி அவருக்குப் பிரச்சனை ஏதுமில்லை.  பரம்பொருளைத் தேடுகிற தீவிரம் மட்டுமே. உலகத்தில் இவரைப்போல் பரமாத்மாவை தேடுபவர்கள், வேறு எவரேனும் இருப்பது ஆச்சரியமே.            ஏறக்குறைய 27 நாட்கள் அந்த நிலவறையில் இருந்துள்ளார் என சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் ரமணரின் வாழ்க்கை வரலாற்று சொற்பொழிவில்  மனம் உருகி தெரிவித்துள்ளார்.


 அந்தப் பாதாள லிங்கத்தில் எப்போதாவது மனிதர்கள் வந்து இருப்பார்களா என்பது சந்தேகம். பூச்சிகள் அவரது உடம்பை பதம் பார்த்தன. அவரது தொடைகள் ரணப்பட்டு ரத்தமும் சீழும் ஆனது. அந்திமக் காலம் வரை அந்தத் தழும்புகள் அவரது உடம்பிலேயே இருக்கவே செய்தது. அவரது உணர்வெல்லாம் பரம ஆனந்தத்தில் திளைத்திருந்தது.


 ஒரு நாள் மதிய நேரம் வெங்கடாசல முதலியார்  என்பவர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்தார்.  பையன்கள் செய்கிற அட்டகாசத்தை பார்த்தவர், கம்பு ஒன்றை எடுத்து அவர்களை விரட்டி அடித்தார்.'' என்ன சுவாமி உங்களுக்கு ஏதாவது காயமா" என்று சேஷாத்திரியிடம் கேட்டார்.


 அவர், 'இல்லை உள்ளே இருக்கிற சின்ன சுவாமியைப்  பார் என்று சொல்லி சென்றார்.


 பாதாள லிங்கத்தில் இருந்த ரமணரின் பரிதாப நிலையைக்  கண்டவர், சற்று தொலைவிலிருந்த நந்தவன சாதுவை யும் அவரது சீடர்களையும் அழைத்தார். எந்தவித இயக்கமும் பேச்சும் இல்லாமல்  நிட்டையிலிருந்த ரமணரைக்  கண்டு அவர்கள் வியந்தார்கள். அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சுப்பிரமணிய சுவாமி மண்டபத்தில் வைத்தார்கள் உணர்வற்ற நிலையில் இருந்த ரமணர்  எதுவும் அறியார். 


அவரது உடம்பில் இருந்த காயங்களை பார்த்து  மிகவும் ஆச்சர்யப்பட்டனர். எவ்வளவு வலியைத்  தங்கியிருப்பார்,  ரமணர் நிலையைக் கண்டு கண்கலங்கினர்.


 ரத்னம்மாள் என்ற பெண்மணி அவருக்கு உணவு கொண்டு வந்தாள்.  அவள் ஒரு சுத்தமான துணியை அங்கு வைத்து அதன் மீது அமர்ந்து தியானிக்கவோ  அல்லது உடம்பை மூடிக் கொள்ளவோ  செய்யலாமே  என்றார்.அவர் அதனை தீண்டவும் இல்லை.


 சுமார் இரண்டு மாத காலம்  சமாதி நிலையில் அசைவற்று இருந்த சுவாமிக்கு யாராவது உணவை வாயில் ஊட்டி விடுவார்கள் அதையெல்லாம் அவர் கண்டதில்லை கோவணத் துணி பற்றிய பிரச்சனை இல்லாதவராய் இருந்தார். கோயிலில் இருந்த மவுனசாமி ஒருவர் தான் அவரை கவனித்துக் கொண்டார்.


உமையாம்பிகை என்பவர் கோயிலில் தினமும் பால், மஞ்சள் பொடி, சர்க்கரை வாழைப்பழம் என்று  அபிஷேகிப்பார்கள்.  மவுனகுருசாமி அவர்கள் கொண்டு வந்ததிலிருந்து  பக்குவமாய்  ஒரு தம்ளர் பால் அவருக்கு தருவார். ரமணர் எந்தவித  புளிப்பும் இன்றி அதனை  விழுங்கி  விடுவார்.நாள் முழுக்குமான உணவு அது தான். ஒரு நாள் அதனைக் கண்ணுற்ற கோயில் தலைமை குருக்கள் அன்று முதல் நல்ல பால் ஒரு டம்ளர் அவருக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்.


 சில வாரங்களுக்குப் பிறகு, ரமணர் அப்பகுதியிலிருந்த நந்தவனத்திற்கு இடம் பெயர்ந்தார்.

இதன் தொடர்ச்சி நாளைய பதிவில்.



முருக.சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி