ராணி அகல்யா பாய் ஹோல்கர்

 இன்று ராணி அகல்யா பாய் ஹோல்கர் அவர்களின் நினைவு தினம். இன்றைய காசி விஸ்வநாதர் கோவில் கட்டியவர் ஆவார்.





😢
பல திறமைமிக்க மன்னர்களை இந்த பாரத நாடு கண்டிருக்கிறது. அதில் அரசர்களும் இருக்கின்றனர். மாபெரும் அரசிகளும் இருக்கின்றனர். ஆளப் பிறந்தவன் ஆண்மகன்தான் என்று இருந்ததை முறியடித்து ஆண்களுக்கு இணையாகவும், அவர்களைவிட ஒருபடி மேலாகவும் இந்திய நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று சில பெண்ணரசிகளும் தங்கள் முழுத் திறமைகளையும் காட்டி சில முத்திரைகளைப் பதித்து விட்டுப் போய் இருக்கிறார்கள். அசுர வேகத்தில் போர் புரிந்திருக்கிறார்கள். அழகிய கோட்டைகளை கட்டி இருக்கிறார்கள். அந்தக் கோட்டைக்குள் இறைவனுக்காக பல கோயில்களையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.இவர்களில் இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் மராட்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். இவர் மராட்டிய சாம்ராஜ்யத்தை விழிப்பூட்டி முகலாயர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு எழுச்சி தந்தவர். இவர் கொடுத்த ஆதரவில் தான் மகாஜி ஷிண்டே முன் நின்று மராட்டிய சாம்ராஜ்யத்தை சூழ்ச்சிக்காரர்களின் பிடியிலிருந்து காத்தார். இவர் சிவபெருமானின் தீவிர பக்தர்.
இவர் ஆட்சி காலத்தில் நகர மக்கள் இன்றும் போற்றும் வண்ணம் நல்ல சாலைகளும் கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் இவர் செய்த பணிகளாக நிற்கின்றன. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இவரது அரண்மனை மிகவும் வித்தியாசமான, மேற்கத்திய கட்டடக் கலை அம்சங்களுடன் ஒரு ஐரோப்பிய நாட்டு அரண்மனையைப் போன்று விளங்குகிறது.
ஒரு காலத்தில் இந்த நகரம் ஒரு பெரிய வணிக விற்பனைக் கூடமாக அமைந்திருந்தது. மகாபாரத காலத்தில் அர்ஜூனன் தீர்த்த யாத்திரை சென்ற பொழுது இங்கு வந்து போயிருக்கிறான். முசுகுந்தன் இங்கு பல பெரிய மாளிகைகளையும், கோயில்களையும் நர்மதை நதிக்கரையில் மிக அழகாக அமைத்திருக்கிறான். இங்கு ராவணன் பூஜித்த சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. இந்த சிவலிங்கத்தை ‘ராவணேஸ்வரர்’ என்று மக்கள் இன்றும் வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட இறையருள் பெற்ற இந்நகரை ‘அகல்யாபாய்’ ஆண்டபொழுது பல அற்புத ஆலயங்களையும், ஏற்கனவே இருந்த பழைய கோயில்களை புதுப்பித்தும், தனக்கென்ற ஒரு வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டுப்போய் இருக்கிறார்.
நாற்பத்தி மூன்று தீர்த்தக் குளங்களை ஏற்படுத்தியிருக்கிறாள். துவாதசலிங்க க்ஷேத்திரங்கள் என்று 97 வகைப்பட்ட ஆலயங்களை கட்டிய பெருமை இவரையே சாரும். இந்த ஆலயங்களை பராமரிக்கவும், அன்றாட வழிபாடுகள் நடைபெறவும் இவரால் பல லட்ச ரூபாய் வாரி வழங்கப்பட்டிருக்கின்றது. ராமநாதன் சுவாமிக்கும், காசி விஸ்வநாதருக்கும் அன்றாடம் காசி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் அபிஷேகங்களுக்கு கொண்டு சேர்ப்பித்த மாபெரும் புண்ணியவதி இவர்.
தீவிர சிவபக்தையான இவள் அன்றாடம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணிக்கு நர்மதை நதியிலிருந்து மண் எடுத்து வந்து ஒரு கோடி லிங்கத்தைப் பிடித்து, பலவகையில் வேதத்தில் தேர்வு பெற்ற வேத சாஸ்திர நிபுணர்களான அந்தணர்களை கொண்டு ருத்ர ஜபம் ஜபித்து, வழிபாடுகள் செய்து, பகல் நேர உச்சி வேளையில் நர்மதை நதியில் கரைத்து விடுவாராம். இந்த புனிதக் கைங்கரியம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை ‘கோடிலிங்கார்கனம்’ என்று அழைக்கின்றனர்.
இந்த அரசியினுடைய தர்பார் மண்டபம் 108 ருத்ராட்ச லிங்கம், நவமணிகளின் ஒவ்வொரு ரத்னத்திலும் கட்டை விரல் அளவு சிவலிங்கங்கள், நர்மதை நதியில் இருக்கும் ‘மார்பிள்’ கல்லைக் கொண்டு செய்யப்பட்ட பாண லிங்கங்கள் என்று அந்த மண்டபத்தை அப்படியே ஈஸ்வர லோகமாக, அற்புத கைலாசமாக தெய்வீக அம்சங்களோடு அலங்கரிக்கின்றன. இங்குள்ள ‘பொன் ஊஞ்சல்’ காணக் கண்கோடி வேண்டும். சொக்கத் தங்கத்தால் பல வேலைப் பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த பொன் ஊஞ்சலில் நவரத்ன லிங்கங்களை ருத்ராபிஷேகம் முடிந்த பின்பு கொண்டு வந்து அமர்த்தி அருமையான அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். அப்போது நம்மையறியாமலேயே ‘‘மகேஸ்வரா! பரமேஸ்வரா! எங்களை ரட்சிப்பாய்’’ என்று கூவி ஈசனை அழைக்கத் தோன்றும்.
இதேபோல் .இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் 8 ஜோதிர்லிங்க கோவில்கள் (1- காசி விஸ்வநாதர் கோவில், 2- குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில், 3- ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர், 4- உஜ்ஜயினியில் ஓம்காரேஷ்வர், 5- கேதார்நாத் கேதாரேஸ்வர் , 6- மகாராஷ்ட்ராவிலுள்ள பீம் சங்கர் கோவில், 7- மகாராஷ்ட்ராவிலுள்ள திரியம்புகேஷ்வர் கோவில், 8- எல்லோரா அருகிலுள்ள கிருஷ்ணேஷ்வர் கோவில்) இவரால் தன் சொந்த செலவில் புனர் அமைக்க பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .
வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய இவள் வரலாறு, எத்தனை வரலாறு ஆசிரியர்களுக்கு தெரியும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்... எது எப்படியோ இவரால் புணரமைக்கப்பட்ட இன்றைய காசி விஸ்வநாதர் கோவில், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ஆயிர கணக்கான கோயில்கலுள்ளவரை இவர் புகழ் அழியாது என்பது திண்ணம்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி