Sunday, July 3, 2022

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் நினைவு நாள்

 இன்று மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் நினைவு நாள் ஜூலை 3, 2015 மது ஒழிப்புக்காக போராடி உயிர் விட்ட சசிபெருமாள் இறந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், அவர் எந்த நோக்கத்துக்காக உயிரிழந்தாரோ அந்த எண்ணம் நிறைவேறியதா என்றால், இல்லை என்பதே எல்லோருடைய பதிலாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார் சசி பெருமாள். 6 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரில் இருந்த அவர், ரத்தவாந்தி எடுத்து அங்கேயே உயிரிழந்தார். அதுவரை அவரின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக ஊடகங்களும், அரசியல்கட்சிகளும் அவருடைய இறப்புக்கு பிறகு அடுத்த சில தினங்களுக்கு மது விலக்கு பற்றிய விவாதங்களை தொலைக்காட்சிகளும், அரசியல் கட்சிகள் மதுவிலக்கு பற்றிய உறுதி மொழிகளையும் மறக்காமல் அளித்தனர். ஆனால், சில தினங்களிலேயே அந்த உறுதிமொழிகள் காற்றில் பறந்தது. ஒரு சசி பெருமாளோ அல்லது நந்தினியோ மதுவை எதிர்த்து போராடினால் மட்டுமே போதாது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் அந்த எண்ணம் வரும் போதே பூரண மதுவிலக்கு சாத்திய ப்படும். அதுவே சசிபெருமாளுக்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கும்.

திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறந்த நாள்

 இன்று திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறந்த நாள்: ஜூலை 3, 1942  இவர் கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.

இவருடைய கலைப் பணிகளுக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 லும் இவருக்கு வழங்கப்பட்டன.

நுரை ரப்பர் எனப்படும்ஃபோம் ரப்பர்

 : ஜூலை 3, வரலாற்றில் இன்று.

முதன் முதலாக நுரை ரப்பர் எனப்படும்ஃபோம் ரப்பர் 1929ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெர்மிங்காமில் உள்ள டன்லப் லேடக்ஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்ட நாள் இன்று

இது கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தே வருடங்களில் உலகம் முழுவதும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் படுக்கைகள், மெத்தைகள், இருக்கைகளின் உள்ளீட்டுப் பொருளாக இது பயன்படுகிறது . இது பாலியூரித்தின் அல்லது இயற்கை ரப்பரால் தயாரிக்கப்பட்டது.

பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரி, பிறந்த நாள்

 பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரி, பிறந்த நாள் இன்று  குத்தனுார் அய்யா சுவாமி ஐயர் - லலிதாங்கி தம்பதியின் மகளாக, 1928 ஜூலை, 3ல் பிறந்தார்.

வித்வான், ஜி.என்.பாலசுப்ரமணியனிடம் சங்கீதம் பயின்றார்.

1946 முதல் திரைப்படங்களில் பாடி வந்தாலும், 1951ல், மணமகள் என்ற படத்தில், இவர் பாடிய, 'எல்லாம் இன்பமயம்...' என்ற பாடலும்,

மகாகவி பாரதியாரின், 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாடலும், இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

சங்கீத கலாநிதி விருது பெற்றவர்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் இவரை நாடி வந்தது.

எம்.எல்.வசந்தகுமாரியின் குரல், வசந்தத்தைக் கூவி அழைக்கும் குயிலின் குரலைப் போன்றது 

இவர் இசைப்பிரியர்களின் உள்ளங்களை    தன் குரல் இனிமையால் ஆண்டார்.

நடிகர் எஸ் வி ரங்காராவ் பிறந்த நாள்

 

: இன்று ஜூலை 3 மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ் வி ரங்காராவ் பிறந்த நாள் இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் பிறந்தார். சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் தமிழை சுத்தமாக உச்சரித்ததாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனி இடம் பிடித்தவர்தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் பல படங்களில் பாசக்கார அப்பாவாகவே வந்து இருப்பார். எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்”நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது

செல்லப்பன் ராமநாதன் பிறந்த தினம்

 சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் பிறந்த தினம் இன்று.

இவர் 1924ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார்.

1955-ல் சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் இவர் பணியில் சேர்ந்தார். அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இவர் திறம்பட பணியாற்றினார். 1982இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

1999 ஆகஸ்ட் 18-ம் தேதி சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபர் பதவியேற்றபோது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை அவர் மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக வம்சாவளியிலிருந்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக உயர்ந்த எஸ்.ஆர் நாதன் 92வது வயதில் (2016) காலமானார்.

நடிகவேள் எம்ஆர் ராதா...!

 நடிகவேள் எம்ஆர் ராதா...!


இன்றைய பிள்ளைகள்,  இவரை பற்றி  ஓரளவாவது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!


"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்..!


யாருடனும் ஒப்பிட முடியாத, அதேசமயம், இந்தியாவின் தனித்துவம் மிக்க தைரிய கலைஞன் ராதா..!


ரொம்ப எளிமையானவர்.. ரொம்பவும் வித்தியாசமானவர்.. ரொம்பவும் துணிச்சலானவர்.. தப்பு என்று தெரிந்தால் போதும், அது யாராக இருந்தாலும் சரி, லெப்ட் & ரைட் வாங்கிவிடுவார்..!


அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!  


முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு "கலைஞர்" என்ற அடைமொழியை தந்ததும் சாட்சாத் நடிகவேள்தான்..!


இவருக்கு எழுத படிக்க தெரியாது.. யாராவது டயலாக் சொன்னால், அதை அப்படியே உள்வாங்கி கொண்டு திரும்ப சொல்லுவார்.. ஆனால், எம்ஆர் ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் ஏற்று நடித்த எல்லா கேரக்டர்களின் மீதும் பதிந்திருந்தது.


எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியால் நிரம்பியது.. பேரன்பால் விரிந்தது.. பெருங்கருணையால் நிறைந்தது..!


வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர் ராதா.. இவருக்கு அதிக அளவு உதவிகளை செய்தது கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. அதனால்தான், தான் வசதியாக இருந்தபோது, பலருக்கு பல உதவிகளை அள்ளி அள்ளி செய்தார் எம்ஆர் ராதா... அப்படி செய்யும் உதவிகளை யாரிடமும் வெளியே சொல்லியதும் கிடையாது.


எத்தனையோ பேருக்கு வாழ்வும், சோறும் போட்டவர்.. தோழர் ஜீவாவுக்கு அடைக்கலம் தந்தவர்.. இலவசமாக நாடகங்களை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலமுறை நிதியுதவியும் செய்தவர்...!


தொண்டர்கள், நண்பர்கள் யார் உதவி என்று கேட்டாலும் உடனே மணி ஆர்டரை அனுப்பி வைத்துவிடுவார். இப்படிப்பட்ட குணாளனா,  எம்ஜிஆரை சுட்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது..! "சுட்டான் சுட்டேன்" என்பது இன்னும் விளங்க முடியாததாகவே உள்ளது.


தந்தை பெரியாரின் ஆத்மார்த்தமான சீடர் எம் ஆர். ராதா.. கடைசி வரை நாத்திகமாக வாழ்ந்த கொள்கை வீரர்.. "பெரியாரின் போர்வாள்" என்ற பெயரை பெற்றவர்.. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பது இவரது நாடி நரம்புகளில் முறுக்கேறி இருந்தது..!


பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கிண்டல், கேலி, நக்கல், நையாண்டிகளை செய்து யதார்த்தை சீர்படுத்தியவர் எம்ஆர். ராதா..!


நாடகம் என்பது பிறருக்கு பிழைப்பு.. ஆனால் ராதாவுக்கோ "போர்க்களம்"..!  ஒவ்வொரு நாடகத்தையும் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் அரங்கேற்றினார்.


"உயிருக்கு பயப்படாதவர்கள் மட்டும் என் நாடகத்தை பார்க்க வாங்க" என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தவர்.. சினிமாவில் நடித்து கொண்டே, "சினிமா பார்க்காதீர்கள்" என்று பிரச்சாரம் செய்தவர்..


தந்தை பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன. மிசா சட்டத்தில் கைதான ஒரே நடிகர் இவர்தான்.


"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கினார்.


"பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்" என்றார்.


இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..  இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 


இவரது நாடகத்தை பார்க்க இலவச டிக்கெட்டுகளை வாங்கி கொண்டு, முன்வரிசையில் நிறைய விஐபிக்கள் உட்கார்ந்திருப்பார்களாம்.. ராதா மேடையில் நடித்து கொண்டே அவர்களை பார்த்து, "காசு கொடுத்தவன்லாம் தரையிலே உக்கார முடியாம தவிக்கிறான். ஆனால் ஓசியிலே வந்தவன்லாம் சேர்லே உட்கார்ந்திருக்கான்" என்று முகத்துக்கு நேராகவே சொல்லுவாராம்.


ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி ஐயர் என்பவர் தலைமை தாங்கியதுடன், முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தை பார்த்து கொண்டிருந்தார்.. அதில் ஒரு காட்சியில், "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, "பார்ப்பான் பார்ப்பான்" என்றாராம் அந்த "ஐயர்" காதில் விழும்படி சத்தமாக. 


ராதாவை ஒடுக்குவதற்காகவே தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தை தயாரிக்கும் அளவுக்கு நடுங்கி போனார்கள் என்பதே நிஜம்.. முதன்முதலாக நாடகத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது ராதாவிற்காகத்தான்... ஆனாலும், சட்டமன்ற வளாகத்திலேயே நேரடியாக போய், தனக்காக வாதாடிவர் ராதா...


பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன. மிசா சட்டத்தில் கைதான ஒரே நடிகர் இவர்தான். 


பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கிண்டல் செய்து, கேலி செய்த சீர்திருத்த செம்மல் நடிகவேள் எம்ஆர் ராதா...  அவரது நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின..!

 

அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து  சென்று விழுந்தன..!!


சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா.. திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது... அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!


ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

Featured Post

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் நினைவு நாள்

 இன்று மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் நினைவு நாள் ஜூலை 3, 2015 மது ஒழிப்புக்காக போராடி உயிர் விட்ட சசிபெருமாள் இறந்து இன்றோடு நான்கு ஆண்டுக...