இந்திய போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
Friday, July 30, 2021
#பழங்கதை_பேசுவோம்_ தொடர் /ஜவ்வுமிட்டாய்
#பழங்கதை_பேசுவோம்_ தொடர்
இதை வழங்குபவர்
--சங்கீதா ராமசாமி
குதித்து ஆடும் பொம்மை ஒன்றே போதும் முன்செல்லுபவரை பின்தொடர ஜரிகை போட்ட பாவாடை சட்டையோ, லேஸ் வைத்த கவுனோ நம்மை வாவென அழைத்துபடியே செல்லும்.
டாக்டர் முத்துலட்சுமி
டாக்டர் முத்துலட்சுமி பிறந்த தினம் இன்று ஜூலை, 30.
மனிதகுலத்துக்குச் சேவை செய்ய கட்சி நடத்த வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி எந்தக் கட்சியும் நடத்தவில்லை. ஊருக்கு உழைக்க உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளானவர். நான்கு பேருக்கு நல்லது செய்ய பணபலம் படைத்தவராக இருக்க வேண்டுமா? தனக்கும் தனது கணவருக்கும் கிடைத்த சொற்ப ஊதியத்தை வைத்தே சிறுசிறு காரியங்களைத் தொடர்ந்தார். சமூகத்துக்காக உழைக்க நினைப்பவர்கள் சொந்த பந்தங்களை உதறிவிட்டு குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டுமா? தன்னுடைய பெற்றோர், கணவன், இரண்டு குழந்தைகள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, உறவுத் தங்கையின் குடும்பம்... மொத்தப் பேருக்கும் மையமாக இருந்துகொண்டே சமூக சேவையிலும் இறங்கினார். தான் வேலை பார்த்துக்கொண்டே தங்கை நல்லமுத்துவை படிக்க வைத்தார். அவர்தான் பிற்காலத்தில் ராணிமேரிக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் முதல்வர் ஆனார். அரசியலுக்கு வந்தால் தனது தொழிலை மறந்துவிடவேண்டுமா? ‘மாட்டேன், அரசியலுக்காக எனது மருத்துவத் தொழிலையும் மருத்துவ ஆராய்ச்சியையும் விட்டுவிட மாட்டேன்’ என்று சொன்னவர் அவர்.
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர் பிறந்த நாள் இன்று ஜூலை, 30
வெகுஜன எழுத்திலும் தரமான படைப்புகளைத் தர முடியும் என்று நிரூபித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர். தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டையில் ராதாகிருஷ்ணன், சந்திரா தம்பதியினருக்கு ஜூலை 30, 1958 அன்று மகனாகப் பிறந்தார். அங்கே பள்ளிப்படிப்பை முடித்தபின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். தாயார் இலக்கிய ஆர்வலர். அதனால் பள்ளியில் நாட்களிலேயே கல்கி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சாண்டில்யன் நூல்கள் அறிமுகமாயிருந்தன. கல்லூரி எழுத்தார்வத்தை வளர்த்தது. நண்பர்களோடு சேர்ந்து ஒரு குழு அமைத்து கல்லூரி நாடக விழா, ஆண்டுவிழா, விடுதி தினம் போன்றவற்றிற்கு நாடகங்களை நடத்தினார். மாணவர்களது ஆதரவும், பேராசிரியர்களது ஊக்கமும் எழுத்தார்வத்தைத் தூண்டின. நிறைய வாசித்தார். நகைச்சுவை நாடகங்களை கதை, வசனம் எழுதி அரங்கேற்றியதுடன் நடிக்கவும் செய்தார். படிப்பை முடித்தபின் குடும்பத் தொழிலை மேற்கொண்டார். அஞ்சல்வழியில் எம்.ஏ. பொருளாதாரப் படித்துக்கொண்டே, சிறுகதைகள் எழுதினார்.
Thursday, July 29, 2021
வெந்தய கீரை கோழி குழம்பு
குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள்.
கோழி கறி – 1/2 கிலோ
வெந்தய கீரை – 1 கட்டு
வெங்காயம் – 2
தயிர் – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பிஸ்கட் சாப்பிடுவதால் சத்து கிடைப்பது குறைவே!
பிஸ்கட்
சாப்பிடுவதால் வயிறு நிறையும்.
ஆனால், சத்து கிடைப்பது குறைவே!
பள்ளிக்கூட வாசலில் இலந்தை வடையும், பொரி உருண்டையும் வாங்கித் தின்றது ஒரு காலம். இன்று பள்ளி செல்லும் பிள்ளைகளின் பைகளில் தவறாமல் இடம்பிடிக்கிறது 'ஸ்நாக்ஸ் பாக்ஸ்’. பெரும்பாலும் பிஸ்கட்களாலும் சிப்ஸ்களாலும் நிரம்பியிருக்கும் அந்த ஸ்நாக்ஸ் பாக்ஸில் உண்மையிலேயே என்ன இருக்க வேண்டும்... எது இருந்தால் குழந்தையின் உடல்நலத்துக்கு நல்லது?
குழந்தைகளுக்கு ஜீரண உறுப்புகள் வளரும் நிலையில் இருக்கும். பெரியவர்களுக்கு அவை ஓய்வுபெறும் நிலையில் இருக்கும். எனவேதான் குழந்தைகளும் பெரியவர்களும் அடிக்கடி அஜீரணக் கோளாறால் அவதியுறுகின்றனர். இதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு உணவைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொடுக்கலாம். நாம் என்ன பிரித்துக் கொடுப்பது? அவர்களே அப்படித்தான் கோழி கொத்துவதைப்போல கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றனர். அதிலும், இன்று பள்ளிக்கூடங்கள் காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகின்றன.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து 6 மணிக்கு எழுந்து, தூங்கிக்கொண்டே குளித்து, அழுதுகொண்டே சீருடை அணியும் குழந்தைகள் காலை உணவாகச் சாப்பிடுவது கொஞ்சமே கொஞ்சம்தான். எனவே, அவர்களுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 90 சதவிகித மூளை செல்கள் ஆறு வயதுக்குள்தான் வளர்ச்சி அடைகின்றன. அந்த வயதில் அதற்குரிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுவது அவசியம்.
குழந்தைகளின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலைத் தரும் மாவுச்சத்து, செல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும் புரதச்சத்து, எலும்புகளின் உறுதிக்கு உதவும் கால்சியச்சத்து... என சரிவிகித சத்துக்கள் கொடுக்கப்பட வேண்டும். இவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் கிடைக்காது. நுரையீரல் மற்றும் சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய க்ரீம் பிஸ்கட்களிலும், எண்ணெயில் பொரித்த உணவுகளிலும், மைதாவில் செய்த இனிப்புகளிலும் என்ன ஆரோக்கியம் கிடைக்கும்?
கடைகளில் கிடைக்கும் உணவுகளின் முதன்மை நோக்கம், நமது உடல் ஆரோக்கியம் அல்ல; நம்மை மீண்டும் மீண்டும் வாங்கத் தூண்டும் சுவை சேர்ப்பதுதான். இதற்காகப் பல செயற்கை சுவையூட்டிகளையும் மணமூட்டிகளையும் சேர்க்கின்றனர். நிறத்துக்காக செயற்கை நிறமூட்டிகளைச் சேர்க்கிறார்கள். இவை அனைத்துமே உடல்நலத்துக்குக் கேடானவை. அதுவே நம் கைகளால், நாம் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஸ்நாக்ஸ்களில் சத்துக்கள் நிறைவாகவோ குறைவாகவோ இருந்தாலும், அதில் கெடுதல் என எதுவும் இருக்காது. நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுத்து முறையாகச் செய்தால் ஸ்நாக்ஸ் பாக்ஸை ஆரோக்கிய பாக்ஸாக மாற்றுவது ஒன்றும் பெரிய சாகசம் அல்ல!
ஒருநாள், கீரை ஜாம் தடவிய கோதுமை ரொட்டித் துண்டுகளுடன் இரண்டு துண்டு பழங்களைச் சேர்த்துக் கொடுங்கள். இன்னொரு நாள், பேரீச்சம்பழம் சேர்த்து செய்த கட்லட் கொடுத்துவிடுங்கள். நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஒரே உணவுப்பொருள் வைக்காமல் இரு வேறு சுவைகொண்ட இரண்டு உணவுப்பொருட்களை வைத்துக் கொடுங்கள். அது அவர்களுக்கு உண்ணும் இன்பத்தை இரட்டிப்பாக்கும். பாதி வேகவைத்த உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி, மரச் செக்கு கடலை எண்ணையில் வறுத்து எடுத்து, புளி, உப்பு, வெல்லம், மிளகு சேர்த்து அரைத்த புளி சாஸுடன் இணைத்துக் கொடுத்தால், அது குழந்தைகளின் இஷ்ட ஸ்நாக்ஸாக மாறும். கூடவே மாவுச்சத்தும் இரும்புச்சத்தும் கிடைக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புக் கொட்டை வகைகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். ஆனால், பருப்பு மற்றும் கொட்டை வகைகளை ஆண் குழந்தைகளுக்கு அளவாகக் கொடுக்க வேண்டும். இது அதிகமாகும்பட்சத்தில் ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு வரக்கூடும். பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளின் மாலை நேரப் பசியைப் போக்க, கேழ்வரகு, கம்பு, சோளம் இவற்றில் செய்த ஏதேனும் ஒரு கூழுடன், கருப்பட்டிப் பாகு, நிலக்கடலைப் பால், தேங்காய்ப் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து, வாசனைக்கு ஒரு ஏலக்காயைத் தட்டிப்போட்டு, மிக்ஸியில் இரண்டு சுற்றுவிட்டால் 'கூழ் ஷேக்’ தயார். ஆரோக்கியமும் சுவையும் நிரம்பிய இந்தப் பானம், சுவையும் சத்தும் நிரம்பிய அற்புதம். பப்பாளி, கேரட், பீட்ரூட், மாம்பழம் ஆகியவற்றை நறுக்கி, அதில் கருப்பட்டிப் பாகு சேர்த்துச் சாப்பிடுவது, உடல் வளர்ச்சியைத் தூண்டும்; சுண்ணாம்புச்சத்தைக் கொடுக்கும்.
நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி பிஸ்கட் கொடுக்கிறோம். பிஸ்கட் சாப்பிடுவதால் வயிறு நிறையும். ஆனால், சத்து கிடைப்பது குறைவே. நாம் கொடுக்கும் உணவு அந்த நேரத்துப் பசியைத் தீர்ப்பதுடன், ஆற்றலும் சத்தும் அளிப்பதாக இருக்க வேண்டும். பழங்கள் தரும்போது அவற்றில் ஏராளமான நார்ச்சத்து இருக்கிறது. அது குழந்தைகளின் ஜீரணத்துக்கு உதவுகிறது; மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. பழங்களைத் தேனில் கலந்து தரும்போது விட்டமின்களுடன் சேர்த்து தேனில் நிரம்பியிருக்கும் இரும்புச்சத்தும் கிடைக்கும். இது, குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. அவல், பொரி, நிலக்கடலை போன்றவற்றைச் சாப்பிடும்போது அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் காரணமாக, ஆரோக்கிய ஆற்றல் கிடைக்கும். ஓடியாடி விளையாடும் பருவத்தில் அந்த ஆற்றல், குழந்தைகளுக்கு அவசியமானது.
அவலுடன் வெல்லத்தைச் சேர்க்கும்போது, வெல்லத்தில் இருந்து விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும். நிலக்கடலை, எள், அத்திப்பழம் இவற்றை உருண்டைகளாகத் தரும்போது, நிறைய புரதச்சத்து கிடைக்கும். இது, வளர்சிதை மாற்றத்தை சுலபமாக்கி உடல் வளர்ச்சியை சீராகப் பராமரிக்கும்.
சுண்டல், பொரிவிளங்கா உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை இவை எல்லாவற்றிலும் புரோட்டீன் சத்து நிறைந்திருக்கிறது. நிலக்கடலை, எள்ளு, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளில் கொழுப்புச்சத்து அதிகம்.
கேழ்வரகு, சுண்டல் ஆகியவற்றில் கால்சியம் அதிகம். இவற்றை நேரடியாகத் தராமல் ஆவியில் வேகவைத்து கொழுக்கட்டையாகக் கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த எந்தப் பண்டமும் உடலுக்கு நன்மையே அளிக்கும். அதனால் எந்தத் தீங்கும் இல்லை. அப்படி இந்தக் கொழுக்கட்டைகளைத் தயார்செய்து அதையும் அப்படியே தராமல், பாலக்கீரை போன்ற கீரைகளில் சுற்றிவைத்து எடுத்துத் தரலாம். இதன் மூலம் கீரையில் இருக்கும் சத்துக்களும் கொழுக்கட்டையில் சேர்த்து உடலுக்குப் போகும். குழந்தைகள் அதை வித்தியாசமாகவும் பார்ப்பார்கள்.
தேபோல எல்லா உணவுகளையும் உருண்டைகளாகத்தான் தர வேண்டும் என்பது இல்லை. சதுரம், நீளம், ஸ்டார் என பல வடிவங்களில் நறுக்குவதற்கு சிறு கருவிகள் வந்துவிட்டன. அவற்றை வாங்கி நறுக்கித் தரலாம். பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளை வித்தியாசமான வடிவங்களில் நறுக்கி, அவற்றுடன் எலுமிச்சைச் சாறு, மிளக்குத்தூள் உப்பு தூவி தரலாம். வெறும் உப்புக்குப் பதிலாக இந்துப்பு சேர்த்தால், சாட் மசாலாவின் தூண்டும் சுவை கிடைத்துவிடும்.
முளைகட்டும் தானியங்களை அப்படியே தராமல் அரைத்து, கேப்ஸிகம், வெங்காயம் சேர்த்து ஆம்லேட் போல அடித்துத் தரலாம். மினி தோசை, மினி அடை, மினி கட்லட்... என சின்னச் சின்னதாக இருப்பதை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஒருமுறை, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தன் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது தோசையை 'அ’, 'ஆ’ வடிவிலும், கி, ஙி வடிவிலும் வார்த்துக் கொடுத்ததைப் பற்றி கூறியிருந்தார். 'தோசை நாணாம்’ என அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட, 'இப்போ சி தோசை சாப்பிடுவோமா?’ என்றதும் அந்த வடிவத்தில் ஈர்க்கப்பட்டு நாலு வாய் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். சிறுதானியங்களையும் பழங்களையும் பயன்படுத்தி, சுவை, மணம், வடிவம் ஆகியவற்றில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்து குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்விதமாக ஸ்நாக்ஸ் பாக்ஸை மாற்றி அமைக்க முடியும். அது அவர்களின் ஆயுளின் பெரும் ஆரோக்கியம் சேர்க்கும்!
ஸ்நாக்ஸ் ப்ளீஸ்!
குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக என்ன அடுக்கலாம்?
ஓர் ஆரோக்கியப் பட்டியல் இங்கே...
திங்கள்: நறுக்கியப் பழத்துண்டுகள், தேனில் ஊறிய பலாப்பழம், பேரீச்சை, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், மாதுளை முத்துக்கள், சப்போட்டாபழம், நெல்லி, சிவப்புக் கொய்யா, சீத்தாபழம், தேன் கலந்த நறுக்கிய பப்பாளி.
செவ்வாய்: அவல் லட்டு, பொரி உருண்டை, நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, தினை உருண்டை, அத்திப்பழ உருண்டை, சத்துமாவு உருண்டை, கேழ்வரகு அல்வா.
புதன்: புட்டு, இலை கொழுக்கட்டை, சுண்டல், சப்பாத்தி ரோல்,
பால் கொழுக்கட்டை, உப்பு உருண்டை, பொரிவிளாங்காய் உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை.
வியாழன்: காய்கறி சாலட் வகைகளை, எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து தரலாம். முளைகட்டிய தானியங்களின் கலவை.
வெள்ளி: மினி இட்லி, மினி அடை, மினி தோசை, கட்லட், மாப்பிள்ளைச் சம்பா முறுக்கு, தினை ரிப்பன் பக்கோடா, கவுனி அரிசி சீடை, அவல் உப்புமா, இனிப்பு அவல்...
Wednesday, July 28, 2021
அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ்
அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க
அடிக்கடி கடைக்கு சென்று வர முடியாத காரணத்தால் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய நீங்கள் சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது.
தினமும் சமைக்கும் அரிசி அல்லது பச்சரிசி, இட்லி அரிசி , சிகப்பு அரிசி என எந்த அரியாக இருந்தாலும் அதில் வண்டு, புழு வருகிறது எனில் அதில் நான்கு அந்து பிரிஞ்சு இலைகளை போட்டு வையுங்கள். அவ்வாறு போட்டால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
நெய் கெட்டுப் போகக் கூடாது அதேசமயம் அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்க வேண்டும் எனில் அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து வையுங்கள்.
கோதுமை மாவு, சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு என ரெடிமேட் மாவு வகைகளை வாங்கி வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு வைத்துவிடும் அல்லது புழு வைத்துவிடும். அப்படி இல்லாமல் ஃபிரெஷாக நீண்ட நாட்கள் இருக்க உப்பு கொஞ்சம் கலந்து வையுங்கள்.
பச்சை பயிறு போன்ற எப்போதாவது பயன்படுத்தக் கூடிய பயறு வகைகள், பருப்பு வகைகள் இருந்தால் அவற்றை வாணலியில் சூடேறும் பதத்தில் வறுத்து ஆற வைத்து மூடி வையுங்கள். இதனால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
புளியில் வண்டு பிடிக்கிறது எனில் அதில் கொட்டைகள் இருக்கலாம். எனவே கொட்டைகளை எடுத்துவிட்டு ஓடுகளை நீக்கி வைத்தால் வண்டு பிடிக்காது.
அதேபோல் புளியை ஜாடியில் வைக்கும்போது ஒவ்வொரு அடுக்காக வையுங்கள். அதன் ஒவ்வொரு அடுக்கின் இடையிலும் கல் உப்பு சிறிதளவு வையுங்கள். இதனால் நீண்ட நட்களுக்கு புளி ஃபிரெஷாக இருக்கும்.
பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்
அன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்!
தமிழ்ச்செல்வன் எனும் பெயர் கொண்ட அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அம்மா இறந்துவிடுகிறார். மனைவியின் மறைவு தந்த துக்கத்திற்குள் மூழ்கிய அவன் அப்பா, இறுதியில் மதுவிற்குள் மூழ்கிவிடுகிறார். பின், தன் அம்மாவின் அக்கா கவனிப்பில் வளர்க்கப்படுகிறான் தமிழ்ச்செல்வன். பெரியம்மா குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்பிற்குமேல் தொடர முடியவில்லை. பின், உள்ளூரில் இருந்த ஒரு டீக்கடைக்கு வேலைக்குச் செல்கிறான். டீ கிளாஸ் கழுவும் வேலை செய்து வந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய உறவினர்கள் முன் அந்த வேலையைச் செய்வதற்குக் கூச்சமாக இருந்தது. டீக்கடை இருந்த தெருவில் உறவினர்கள் யாராவது வருவது தெரிந்தால் உடனே ஓடிச்சென்று கடைக்குள் ஒளிந்துகொள்கிறான்
ஒளிந்து ஒளிந்து வேலை பார்த்த அந்தச் சிறுவன், இதற்கு மேலும் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என 13 வயதில் தீர்மானமாக முடிவெடுத்து சென்னை நோக்கி கிளம்புகிறான். கூலிக்கு மூட்டை தூக்கி பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அந்தச் சிறுவனை 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பிரியாணி ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தின் உரிமையாளராக்கி அழகு பார்த்தது சென்னை. வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று சொந்த ஊரிலிருந்து வெளியேறி வந்த தமிழ்ச்செல்வனுக்கு சரியான களம் ஏற்படுத்திக்கொடுத்தது சென்னையாக இருந்தாலும் அந்தக் களம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. பல ஆண்டுகால போராட்டம்... நம்பிக்கை கலந்த கடின உழைப்பு... பல வலிகள் ஆகியவற்றிற்குப் பிறகே இந்த வெற்றி தமிழ்ச்செல்வனுக்கு வசப்பட்டது.
"நான் சிறுவனாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். என்னுடைய பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்தேன். வறுமையான சூழல்களுக்கு இடையேதான் அவர் எங்களை வளர்த்தார். படிப்பு மீது ஆர்வம் இருந்ததால் நிறைய படிக்க வேண்டும் என ஆசை இருந்தது. நான் நன்றாகவும் படிப்பேன். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் குறைவாக இருந்தால் என் பெரியம்மா இரவு சீக்கிரமே விளக்கை அணைத்துவிடுவார். மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டால் அதை வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்காது. அத்தகைய நாட்களில் தெருவிளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படிப்பேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் உடைந்த சிலேடுதான் இருந்தது. புது சிலேடு வாங்கச் சொல்லி ஆசிரியர் கூறினார். என்னிடம் பணமில்லாதக் காரணத்தால் புது சிலேடு வாங்கமுடியவில்லை. அதற்காக ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட்டார். அன்றோடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். எங்கள் ஊரில் இருந்த ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவும் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு 10 வயதுதான் என்பதால் அந்த மேசை எட்டாது. ஆற்றில் இருந்து ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு வந்து அது மேல் ஏறி நின்று டீ கிளாஸ் கழுவியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் சொந்தக்காரர்கள் முன் டீ கிளாஸ் கழுவ எனக்குக் கூச்சமாக இருந்தது. இனி இந்த ஊரில் இருக்கவேண்டாம் என முடிவெடுத்து, சென்னை வந்தேன். சென்னையில் கூலிக்கு மூட்டை தூக்கினேன். அதற்கு கிடைத்த சம்பளத்தை வைத்து என் வயிற்றைக்கூட நிரப்ப முடியவில்லை.
ஏதாவது ஓட்டலில் வேலை பார்த்தால் மூன்று வேளை உணவு கிடைக்கும் என நினைக்கையில், ஓட்டலில் தட்டு கழுவும் வேலை கிடைத்தது. அந்தக் காலகட்டத்தை என் வாழ்க்கையில் மறக்கமுடியாது. நாள் முழுக்க பாத்திரம் கழுவிக்கொண்டே இருந்ததால் கையெல்லாம் புண்ணாகி, கையிலிருந்த நகமெல்லாம் கொட்டிவிட்டது; காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது. கையில் ஏதாவது பேப்பரைச் சுற்றிக்கொண்டுதான் உணவு சாப்பிடவே முடியும். பின், அந்த ஓட்டலில் சர்வரானேன். சர்வராக வேலை பார்த்த நான், சில ஆண்டுகள் கழித்து என் நண்பனுடன் இணைந்து தள்ளுவண்டிக் கடைபோட்டேன். முதன்முதலில் தள்ளுவண்டிக் கடையில் பாசுமதி அரிசி பிரியாணியை நான்தான் அறிமுகம் செய்தேன். எங்கள் சுவை பிடித்து நிறைய பேர் தேடிவர ஆரம்பித்தார்கள். எம்.எல்.ஏ, அரசியல் பிரமுகர்கள் என நிறைய விஐபிக்கள் எங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். ரோட்டில் நின்று கொண்டு சாப்பிட அவர்களுக்கு கூச்சமாக இருப்பதாகக் கூறி அவர்கள்தான் கடைபோடும்படி என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஓர் இடத்தில் சீட்டு போட்டு பணத்தைச் சேர்த்து என்னுடைய முதல் கடையைச் சென்னை தாம்பரத்தில் தொடங்கினேன்".
அங்கிருந்து தமிழ்ச்செல்வனின் லட்சியப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது. கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நல்ல பெயரும் புகழும் அவரது கடையை வந்தடைகின்றன. இன்று 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் ஓர் உணவகத்தின் அதிபதியாக உயர்ந்துள்ள தமிழ்ச்செல்வன் தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து கூறுகையில், "கடவுளுக்கு நான் பயப்பட்டதில்லை; ஆனால், வாடிக்கையாளர்களைப் பார்த்து பயப்படுவேன். நம்முடைய கடை உணவை சாப்பிட்டுவிட்டு உணவு சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு அதிகம். அதனால், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வேன். நான் வாழ்க்கையில் வெற்றிபெற்றேன் என்றால் என் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான். என் கடையில் முதலீடுகளை விட என்னுடைய உழைப்பைத்தான் அதிகம் போட்டுள்ளேன். அந்த உழைப்புதான் இந்த இடத்திற்கு என்னை உயர்த்தியுள்ளது" என்றார்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியான லட்சியமும், ஆயிரம் தடைகள் வந்தாலும் அதைப் புறந்தள்ளிவிட்டு அந்த லட்சியத்தை நோக்கி பயணிப்பதற்கான உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் எவரும் வெற்றிபெறலாம் என்பதற்கு தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை உதாரணம்.
https://www.nakkheeran.in/360-new
news couresy:
டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா? அறிவியல் ரீதியாக வெளியான உண்மை!
பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது.
உங்கள் உடலின் இயற்கையான செயல்முறையை பாதிக்கலாம்:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீயை பொறுத்து, கஃபின் உட்கொள்ளல் மாறுபடும். பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது. இது 96 மில்லிகிராம் கஃபின் கொண்ட ஒரு கப் காபியுடன் ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், தினசரி டீ குடிக்கும் போது அதில் உள்ள கஃபின் நம் உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நாம் விழித்திருக்கும் மற்றும் தூங்கும் நேரம் உட்பட 24 மணி நேர காலப்பகுதியில் நம் உடல்கள் பின்பற்றும் வழிமுறைகளை நமது சர்க்காடியன் அமைப்பு சமநிலைபடுத்துகிறது. ஒளி, மன அழுத்தம், வேலை மற்றும் காஃபின் போன்றவை நம் சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும்.
நமது இயற்கையான ரித்ததை பராமரிப்பது மிக முக்கியம். ஏனென்றால் இது பகலில் அதிக எச்சரிக்கையை உணரவும், இரவில் நன்றாக தூங்கவும், ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் நாம் அதிகப்படியான கஃபின் கொண்ட தேநீரை அருந்தினால், அது நம் தூக்கத்தை சீர்குலைக்கும். இது நமது சர்க்காடியன் ரிதத்தையும் சீர்குலைக்கும். தொடர்ச்சியாக சீர்குலைந்த சர்க்காடியன் அமைப்பு இருதய பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் இரவுநேர தேநீர் குடிக்கும்போது கிரீன் டீ க்கு பதிலாக மூலகை டீயை பருகலாம்.
உணவுக்குழாயில் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம்:
சூடான தேநீர் குடிப்பது உண்மையில் உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வடக்கு ஈரானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக அளவு சூடான பிளாக் டீ குடிப்பது என கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன. சூடான காபி மற்றும் சூடான தேநீர் இரண்டும் உணவுக்குழாயில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
Must Read | நீங்கள் ஒரு காஃபி பிரியரா? உங்களுக்கு ஓர் ஆச்சர்யமான செய்தி இங்கே!
இதற்கான சரியான விளக்கத்தை பெற ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள் இது நமது உணவுக்குழாயின் உள் வெப்பநிலையுடன் தொடர்புடையது என்று நம்புகின்றன. உதாரணமாக, ஒரு கப் டீ 150 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால், நமது உணவுக்குழாய் 127 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கோடையில் ஐஸ் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
உடலில் இரும்புச்சத்து அளவை குறைக்கலாம்:
டீ ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரத்த சோகை அல்லது வேறு எந்த வகையான இரும்பு தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் டீ குடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என சில ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளது. புட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிசன் நடத்திய ஆய்வில், பிளாக் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் இரும்பு சத்து கிடைப்பதை 94% வரை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் உட்கொள்ளும் ஒரு பொருளின் உயிர் கிடைக்கும் தன்மை முக்கியமானது. ஏனெனில் இது நம் உடலால் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு உறிஞ்சப்படுகிறது என்பதற்கான அளவீடாகும்.
தேயிலையில் காணப்படும் டானின்கள் உடலில் இரும்பு உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று நியூட்ரிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானின்கள் தேயிலை, ஒயின் மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் காணப்படும் ஒரு இயற்கை கலவை ஆகும். மேலும் அவை நிலையான நுகர்வுக்குப் பிறகு இரும்பின் உயிர் கிடைக்கும் தன்மையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, நீங்கள் சோர்வு, அமைதியின்மை, வறண்ட சருமம், தலைவலி போன்றவற்றை அனுபவிக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம்:
பிளாக் மற்றும் கிரீன் டீ இரண்டும் டையூரிடிக்ஸ் என்று கருதப்படுகிறது. இவை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். டையூரிடிக்ஸ் இயற்கையாகவே சிறுநீரகங்களில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் சோடியம் இயற்கையாகவே தண்ணீருடன் வெளியேறும். டீ சில நேரங்களில் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், இது பெரும்பாலும் நீரைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படாத ஒருவரில் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். தி பார்மா இன்னோவேஷன் இதழில் வெளியான அறிக்கையின்படி, கிரீன் மற்றும் பிளாக் டீ-யில் உள்ள டையூரிடிக் தன்மை, உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இது சோம்பல், அதிகரித்த அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கடுமையான தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஹெபடைடிஸ் உடலோடு சேர்த்து எவ்வாறு பாதிக்கிறது
world hepatitis day: ஹெபடைடிஸ் உடலோடு சேர்த்து எவ்வாறு பாதிக்கிறது
28.7.2021
ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் தீவிரமான நோய் அறிகுறியாகும். இதன் காரணமாக கல்லீரல் வீக்கமடைகிறது. கல்லீரல் வீக்கமடைவதால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்த உற்பத்தி, செரிமான பிரச்சனையில் துவங்கி உடலுக்கு ஆற்றல் கிடைப்பதில் இது தடைகளை உண்டாக்குகிறது.
நமது உடலின் அனைத்து உறுப்புகளும் ஆற்றலை கொண்டே இயங்குகிறது. ஆனால் அந்த ஆற்றல் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலானது பல ஊட்டச்சத்து பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே முழு உடலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இப்படியான பெரிய உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய ஹெபடைடிஸ் பற்றி நாம் தெரிந்துக்கொள்வது முக்கியமாகும்.
ஹெபடைடிஸ்
ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது கல்லீரலை அழிக்கும் செயல்முறைகளை செய்கிறது. மேலும் இவற்றில் ஏ, பி, சி, டி மற்றும் ஈ என்று வகைகள் உள்ளன. ஹெபடைடிஸ் ஏ கடுமையானதாக இருக்கிறது. ஆனால் பி, சி, டி, மற்றும் ஈ வகைகள் நாள்பட்ட நோயாக இருக்கின்றன. இப்படி ஹெபடைடிஸ் வகையை பொறுத்து பண்புகள் மாறுகின்றன.
ஹெபடைடிஸ் ஏ
பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலம் இது பரவுகிறது. நுண்ணிய அளவில் பாதிக்கப்பட்ட நபரின் மலத்துடன் ஏற்படும் தொடர்பு ஹெபடைடிஸ் ஏ பரவலுக்கு காரணமாகிறது. இந்த தொடர்பு பொதுவான பொருட்கள் அல்லது உணவு வழியாக நிகழ்கிறது.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி, டி
இது பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், விந்து அல்லது பிற உடல் திரவங்களால் பரவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதன் மூலம் பெண்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
இது ஒரு கடுமையான கல்லீரல் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்துடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இது பரவுகிறது.
ஹெபடைடிஸ் ஈ
இது நீரினால் பரவும் தன்மை கொண்டது. முக்கியமாக மோசமான சுகாதாரம் மற்றும் அசுத்தமான நீர் காரணமாக இது ஏற்படுகிறது. இது மலம் தொடர்பான பொருள் செரிமான மண்டலத்திற்குள் செல்வதால் ஏற்படுகிறது.
சோர்வு, காய்ச்சல், அடர்த்தியான சிறுநீர், வெளிர் நிறத்தில் மலம், வயிற்று வலி ஆகியவை இதன் பொதுவான அறிகுறியாக உள்ளது. மேலும் சிலர் இதனால் பசியின்மை, உடல் பலவீனம், எடை இழப்பு, தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் ஆகிய அறிகுறிகளையும் பெறுகின்றனர்.
ஹெபடைடிஸ் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்
ஹெபடைடிஸ் கல்லீரலில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அது பின்வரும் பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தலாம். இதனால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
தூங்குவதில் சிக்கல்
நமது நோயெதிர்ப்பு அமைப்பானது அதிகமாக பணிப்புரியும் போது அது தைராய்டு சுரப்பியில் தாக்கத்தை உண்டாக்கும். இதனால் பலவீனம், சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான நாட்களில் நாம் தூங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
கல்லீரல் வீக்கமடைதல்
ஹெபடைடிஸ் பாதிப்பு காரணமாக கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் வயிற்று வலி ஏற்படுகிறது. மேலும் இதனால் கல்லீரலின் வீக்கம் மோசமடையக்கூடும்.
நச்சு இரத்தம்
ஹெபடைடிஸ் காரணமாக கல்லீரல் செயல்பாடு பலவீனமடைகிறது. இதனால் உடலில் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் திறனானது பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சோகை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்
கல்லீரல் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால் நமது தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். உடலில் அதிக அளவில் பிலிரூபின் இருப்பதால் இது ஏற்படுகிறது.
பித்த உறுபத்தியில் இடையூறு
கல்லீரலில் ஏற்படும் அழற்சியானது பித்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய குடலின் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நமது உணவில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதங்களை உறிஞ்சுவதில் பித்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்த உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு உடலுக்கு சத்து கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் நீங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை அடையலாம்.
எனவே அனைவரும் ஹெபடைடிஸ் குறித்து விழிப்புணர்வாக இருப்பது முக்கியமாகும். ஹெபடைடிஸ் குறித்த மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் எனில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவர் உங்களுக்கு ஹெபடைடிஸ் இருக்கிறதா இல்லையா என பரிசோதித்து கூறுவார்.
ரசம் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல்
ரசம் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல்
சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும்
சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் என்றால் உருளைக்கிழங்கு வறுவலை குறிப்பிடலாம். அதிலும் ரசம் சாதத்திற்கு அருமையாக இருக்கும். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும். ரசம் சாதம் தவிர புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும்.
இந்த டேஸ்டியான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உருளை கிழங்கு – 4 (பெரியது – 3/4 பதத்தில் வேக வைத்தது)
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
கருவேப்பிலை
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டீ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
வெந்தய இலை போடி – 1 ஸ்பூன்,
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த உருளை கிழங்கை 5 நிமிடத்திற்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் பிரை பன்னாமல் கூட நாம் தயார் செய்யலாம்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகிவற்றை இட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு 3-4 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
அதன்பின்னர், கரம் மசாலா, வெந்தய இலை போடி சேர்த்து கிளறவும். தொடர்ந்து முன்னர் வேகவைத்துள்ள உருளை கிழங்கை அதில் இட்டு மசாலா நன்கு சேரும் வரை கிளறி வேக வைத்து கீழே இறக்கவும். இவற்றை ரசம் மற்றும் அனைத்து வித சாதத்தோடும் சேர்த்து சுவைத்து மகிழவும்.
Tuesday, July 27, 2021
அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் அன்னதான சேவை
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்
தொடர் சேவையாக தொடர்ந்து இன்று 28 .07.2021 செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் சங்கத்தின் மூலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் சாதம், வத்தல் போடப்பட்டது. இந்த அன்னதானத்தை தனது செலவிலேயே செய்து 240+ கூலித் தொழிலாளர்களின் பசியை தீர்த்த
தலைவர் MJF Ln. தன பாலகிருஷ்ணன். அவருக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது
இந்த நிகழ்வில் சங்கத்தின் கிளப்பின் தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் Lion. S.பாலச்சந்தர்மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
தினமும் சாப்பிட வேண்டிய சாப்பிடக்கூடாத உணவு எது?
பிரானிக் உணவுகள்: தினமும் சாப்பிட வேண்டிய உணவு எது?... தினமும் சாப்பிடக்கூடாத உணவு எது?
தற்போது பலரும் உணவு குறித்த அறிவை பெற துவங்கிவிட்டனர். அதிமான மக்கள் ஆயுர்வேத வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். ஆயுர்வேதம் ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மருத்துவ முறையாக இது பார்க்கப்படுகிறது. ஆயுர்வேத உணவானது ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. மேலும் மனதை தெளிவாகவும், உடலை நச்சுத்தன்மையற்றதாகவும் மேலும் நல்ல ஊட்டச்சத்தை பெறவும் உதவும் உணவுகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
ஆயுர்வேத சிகிச்சை முறையானது பிரானா என்ற கருத்தை நம்புகிறது. இது நமது உடலில் மாற்றங்களை செய்யக்கூடிய ஆற்றலை குறிக்கிறது. பிரானா அல்லது பிரானிக் உணவுகளை பொறுத்தவரை இரு வகையான உணவுகள் உள்ளன. நேர்மறை மற்றும் எதிர்மறை உணவுகள். நேர்மறை உணவுகள் உடலுக்கு நன்மை பயப்பதாகவும் எதிர்மறை உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது.
பிரானிக் உணவுகள்
ஆயுர்வேத கோட்பாடுகளின்படி நாம் எப்போதும் உடலுக்கு நன்மை பயக்க கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அவை உங்கள் உணவு ஆசையை நிறைவேற்றுவதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை அதிகமாக உண்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் உணவுகள் நமது உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகின்றன.
ஆயுர்வேதம்
இயற்கையில் உள்ள எதிர்மறையான உணவுகள் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பங்களிப்பதில்லை. மாறாக அவை உடல் மற்றும் மன ரீதியாக எதிர்மறையாக செயலாற்றுகிறது. இவை பிரானா என்னும் செயல்முறையை உயிரற்றதாகவும் பயனற்றதாகவும் ஆக்குகிறது. பிரானா என்பது என்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் முறை என ஆயுர்வேதம் நம்புகிறது. ஆனால் பிரானாவில் எதிர்மறையான செயலாற்றும் தாவரங்களும் உள்ளன.
ஆயுர்வேத கொள்கைகளின்படி பூண்டு, வெங்காயம் இரண்டும் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகும். இவை இரண்டும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், ஆயுர்வேதத்தில் இவற்றை தவிர்க்க சொல்கிறது.
வெங்காயம்
உண்மையில் நமது உணவில் வெங்காயத்தை நீக்குவது என்பது சாத்தியமில்லாத விஷயமாகும். ஆனால் ஆயுர்வேத கொள்கைகளின்படி உடலுக்கு ஆற்றல் அளிக்கும் பிரானா என்னும் உணவு முறைக்கு எதிரானது வெங்காயம். அதாவது ஆயுர்வேத கூற்றுப்படி அவை உடலுக்கு பயனுள்ள ஆற்றலை வழங்காது. மேலும் அவை குறைவான அளவில் ஊட்டச்சத்தை கொண்டுள்ளன. ஆனால் இவை உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகின்றன.
வெங்காயத்தில் சில என்சைம்கள் உள்ளன. அவை கவனம் செலுத்தக்கூடிய நமது திறனை பாதிக்கின்றன. அவை வாசனை திறனை பாதிக்கும். மேலும் கடுமையான துர்நாற்றத்தை நம்மில் இருந்து வெளியிடும். மேலும் இது தலைவலியையும் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் வெங்காயம் இன்றியமையாத உணவு என்பதால் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கலாம்.
பூண்டு
வெங்காயத்தை போலவே பூண்டும் எதிர்மறையான பிரானிக் மதிப்பை கொண்ட தாவரமாகும். அன்றாடம் பூண்டை எடுத்துக்கொள்வது நல்ல பழக்கம் அல்ல. இது மிகவும் கடுமையான உணவாகும். இது உடலில் வெப்பம் மற்றும் பித்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது. குடலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. மேலும் மூளையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிகப்படியாக பூண்டு உட்கொள்வது நம் உடலில் எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டும்.
நேர்மறையான பிரானிக் உணவுகள்
ஆயுர்வேத கூற்றுப்படி நேரமறையான பிரானிக் உணவுகள் உங்கள் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்துகின்றன. இவை உங்கள் உடல் நல தேவைகளை பூர்த்தி செய்கின்றன. மேலும் இவை நமது உடலில் நேர்மறை ஆற்றலை தக்க வைத்து கொள்ள உதவுகின்றன. உடலில் உள்ள பல சிக்கல்களையும் குணப்படுத்த இவை உதவுகின்றன. மேலும் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் நோய்களை குணப்படுத்தவும் இவை உதவுகின்றன. எனவே உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய மூன்று நேர்மறையான உணவுகளை இப்போது பார்ப்போம்.
சாம்பல் பூசணிக்காய்
சாம்பல் பூசணிக்காய் ஒரு சுவையான உணவாகும். நல்ல சுவையை தருவதோடு இது பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. ஆயுர்வேத முறைப்படி அனைத்து பிரானிக் உணவுகளை விடவும் சாம்பல் பூசணிக்காய் அல்லது வெள்ளை பூசணிக்காயில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. காலையில் இதை சாறு செய்து குடிக்கலாம். அப்படி செய்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது. மேலும் உங்கள் அறிவு திறனை மேம்படுத்தவும் மோசமான குளிரை எதிர்த்து போராடவும் இது உடலை ஊக்குவிக்கிறது.
மிளகு மற்றும் தேனை சாம்பல் பூசணியுடன் கலந்து உண்ணும்போது அது உடலில் உள்ள சளியை நீக்குகிறது.
தேன்
மேற்கத்திய நாடுகளில் தேன் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது என நம்பப்படுகிறது. ஆயுர்வேத கூற்றுப்படி தேனில் உள்ள மூலக்கூறு கலவையானது இரத்தத்தை போலவே தூய்மையானது. இது இரத்த சோகை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் காலையில் தேனை தண்ணீரில் கலந்து உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.
மசாலா
சுவைக்காக நாம் உணவில் அதிகமான மசாலா பொருட்களை சேர்ப்பதுண்டு. மசாலா பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவை என்கிற கருத்து பரவலாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தினால் அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உடலை சீரமைப்பதற்கும் உதவலாம்.
மிளகு, பெருங்காய தூள், மிளகாய் மற்றும் மஞ்சள் இவையெல்லாம் பிரானிக் ஆற்றல் அதிகம் கொண்ட மசாலா பொருட்களாக உள்ளன. ஆனால் இவற்றை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். அதிகப்படியாக இவற்றை எடுத்துக்கொள்வது செரிமான அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
அக்னி சிறகுகள் முளைத்து வானத்தை வசப்படுத்தினாய்..
அக்னி சிறகுகள் முளைத்து வானத்தை வசப்படுத்தினாய்..
அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள்/கவிதாஞ்சலி
அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் இன்று( 27.7.2021)
இந்தியாவின் முதல் குடிமகனாய் வாழ்ந்து, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும்,தன து எளிமையால், அறிவார்ந்த சிந்தனையால் கவர்ந்தவர், டாக்டர் ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதின் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு
கவிதாஞ்சலி
இராமேஸ்வரம் மணலிலே பதித்த பாதங்கள்
இயல்பாய் ஏழ்மையில் இளமைக் காலங்கள்
படிப்பிலும் துடிப்புடன் எதிர்கொண்ட போராட்டம்
பக்குவத்திற்கு கிடைத்த பலன்தான் பாராட்டும்
நாடு முன்னேற வேண்டுமென்று மனதுக்குள்ளே குறிக்கோள்
நாமெல்லாம் உழைத்தாலே பெறலாம் அவ்வளவுகோல்
இளைஞர்களே சிந்தியுங்கள் விடியல் உங்கள் கையில்
இந்தியா வல்லரசாய் உருவாகும் நம்பிக்கையில்
அக்னிச் சிறகுகள் உணர்த்துவதெல்லாம் ஓயாத உழைப்பை
அனைவரும் அறியணும் கலாம் ஐயாவின் தன்முனைப்பை
பெரும் பதவி பெற்றாலும் வாழ்ந்ததெல்லாம் எளிமையே
பேராசிரியரின் பேச்சாற்றல் கவர்ந்ததெல்லாம் நம்மையே
வாழ்ந்த காலம் முழுவதும் அறிவார்ந்த சிந்தனை
இவ் வையகம் போற்றும் விஞ்ஞானி யின் தனித்தன்மையினை
உயர்ந்த உள்ளம் உறங்குது இம்மண்ணிலே
உலகறியும்......நாம் பயணிப்போம் அப்துல்கலாம் வழியிலே.......
முருக.சண்முகம்
Featured Post
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...

-
கோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...
-
ஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்
-
‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...