Thursday, October 31, 2019

பிரதமர் மோடி நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து பயணம் ‘


 


பிரதமர் மோடி சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


     இந்நிலையில் , தாய்லாந்தில் நடைபெற உள்ள 3 முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.


இதனையடுத்து செயலாளர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு நடைபெற உள்ள, 16-வது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்)- இந்தியா மாநாடு, 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 2-ம் தேதி முதல் 4 ம் தேதி வரை பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கூறினார்.


 


அரசு மருத்துவர்கள் நாளை(1/11/2019) காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை(1/11/2019 காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் .சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம்


'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்.  


புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. 


வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டனர்.  


மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனை உகந்த இடம் இல்லை. பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். '


இவ்வாறு அவர் கூறினார்.


 


2024 ஆம் ஆண்டுக்குள், நிலவில் 4 விஞ்ஞானிகள் ஆய்வு


 


2024 ஆம் ஆண்டுக்குள், நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்.


 


     2024ஆம் ஆண்டில் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா முடிவு செய்து  இதுதொடர்பாக புதன் கிழமை நடந்த ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிலவு ஆராய்ச்சி பகுப்பாய்வுக் குழுவை சேர்ந்த  ஜான் கொனொல்லி மற்றும் நிகி வெர்கீசர் ஆகியோர் பேசும்போது,  2024ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் படி 2 வீரர்கள், ஆறரை நாட்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும்போது


நிலவில் தண்ணீர் தொடர்பாகவும், இதர அறிவியல் ஆராய்ச்சிகளையும் அந்த வீரர்கள் மேற்கொள்வர் என குழுவினர் கூறியுள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் 4 வீரர்களை நிலவுக்கு அனுப்பி 14 நாட்கள் வரை அவர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் அந்தக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்


காஷ்மீர்   வானொலி நிலைய பெயர் மாற்றம்

ரேடியோ காஷ்மீர்  பெயர் மாற்றம்


 


 


காஷ்மீர் மாநிலம் இன்று முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்ததையடுத்து  வானொலி நிலையங்களுக்கு பெயர் மாற்றம்


      இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்து.  அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. 


இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களாக இன்று பதவியேற்றனர்.இதனை தொடர்ந்து ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே  ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே 'ஆல் இந்தியா ரேடியோ-ஜம்மு', 'ஆல் இந்தியா ரேடியோ- ஸ்ரீநகர்' மற்றும் 'ஆல் இந்தியா ரேடியோ- லே' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் 'ரேடியோ காஷ்மீர்' என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


 


லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர்

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்பு


 


    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்து.  அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.


 


     இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.


 


      இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.  இவர்களில் லடாக் யூனியன் பிரதச துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவியேற்றுக்கொண்டார். காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


 


Wednesday, October 30, 2019

வடகிழக்கு பருவமழை தீவிரம்

அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.    தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரி , குளங்களில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


 


சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியில் திருமுடிவாக்கம் சாலையில் 2 கோடியே 63 லட்சம் செலவில் அடையார் ஆற்றில்  பாலம்  கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக தரைப்பாலம் ஒன்று போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் தரைப்பாலத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும், மாற்றுப்பாதையை மக்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பி வருகிறது. இதனையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 67.5 அடியை எட்டியது. இதனையடுத்து ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் மருதாநிதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 324 ஏரிகளில் 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேலும் பல ஏரிகள் நிரம்பவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


 


இந்நிலையில்,  தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று  மாவட்ட செயற்பொறியாளர்களுக்கு, பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


.


Tuesday, October 29, 2019

குரு பெயர்ச்சி

         


 ஆலங்குடி குரு பகவானுக்கு நடைபெறும் அலங்கார தீபாராதனை தரிசனம்.29-10-19. இன்று அதிகாலை மணி 03:49 க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்து ள்ளார்.குருவருள் அனைவருக்கும் கிடைப்பதாக!


 


 


மின்சார சேவை கட்டணம் உயர்வு
 


         நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வந்த பல சேவைகளுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சேவை இணைப்பு கட்டணம், மீட்டர் வாடகை, மீட்டர் எச்சரிக்கை வைப்புத்தொகை, மறுஇணைப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணங்களும் அடங்கும். அரசியல் பரிந்துரைகள் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாது.


 


    இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வேண்டுகோளை ஏற்று, இந்த அறிவிப்பினை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில் பிற ஆதாரங்கள் மூலமாக வருவாயை பெருக்கவேண்டிய நிலைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தள்ளப்பட்டுள்ளது.


 


 


முன்பு 'சிங்கிள் பேஸ்' (ஒரு முனை கட்டணம்) மீட்டரை சேதப்படுத்தினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இலவசமாக மாற்றி கொடுத்து வந்தது. இனிமேல் அதனை மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.500 மற்றும் மீட்டர் கட்டணத்தையும் சேர்த்து செலுத்தவேண்டும். இதேபோல 'திரீ பேஸ்' (மும்முனை கட்டணம்) மீட்டரை மாற்றுவதற்கு மீட்டர் கட்டணத்தோடு, ரூ.750 சேர்த்து செலுத்தவேண்டும்.


 


முன்னதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மீட்டரை மாற்றுவதற்கு, மீட்டர் கட்டணத்தோடு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் வேறு இடத்துக்கு மீட்டரை மாற்றுவதற்காக ரூ.500, மீட்டர் கட்டணத்தோடு வசூலிக்கப்பட உள்ளது. மீட்டரின் திறனை பொறுத்து கட்டணம் வேறுபடும். ஒருவேளை உயர் அழுத்த மீட்டராக இருக்கும் பட்சத்தில் மீட்டர் கட்டணத்தோடு சேர்த்து ரூ.2 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 


 


மின்சார இணைப்பை தற்காலிகமாக துண்டிப்பதற்கு 'சிங்கிள் பேஸ்'-க்கு ரூ.500-ம், 'திரீ பேஸ்'-க்கு ரூ.750-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல மின்சார ஊழியர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் முடிவு எடுத்துள்ளது


 


அரசுப் பேருந்தில் பெண்கள் இலவச பயணம்

டெல்லி அரசுப் பேருந்தில் பெண்கள் இலவச பயணம் 


    டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்.29 ம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி,  பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. 


 


இந்நிலையில் பேருந்துகளில் இந்தத் திட்டம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் இன்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அரசின் முடிவுக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த சுவேதா என்ற பெண் பயணி ஒருவர் இது பற்றி கூறுகையில், “ இது சிறப்பான நடவடிக்கை. டிக்கெட் வாங்க முடியாதவர்கள் இனி பேருந்துகளில் இலவச பயணம் செய்ய முடியும்” என்றார். 


Monday, October 28, 2019

ஒட்டேரி மூலிகை பூங்காவில் பிரார்த்தனை

  


சென்னை ஒட்டேரி மூலிகை பூங்கா நடைபயிற்சியினர் மற்றும் யோகா குழுவினர் 27.10.2019 அன்று ஒட்டேரி மூலிகை பூங்காவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையான சுஜித் உயிருடன்  மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்


 திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை

சென்னை வானிலை மையம் .


 


நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


 


மணப்பாறை பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை  குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகிறோம்.


 


மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.


 


தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது என கூறப்பட்டு உள்ளது


 


 


சென்னை வானிலை ஆய்வு மையம் இவ்வாறு தெரிவிக்கிறது:


குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை

குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை  பிரதமர் மோடியிடம்  முதல்வர்


தெரிவிப்பு.     திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.பள்ளம் தோண்டும் ரிக் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.


 


குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வரும் நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்து வருகிறது. 


 


2 வயது குழந்தையை மீட்கும் பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-


 


குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன். தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருடன் 3 அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 


என்.எல்.சி.- ஓ.என்.ஜி.சி மற்றும் எல்.அண்ட்.டி, என்.ஐ.டி. நிபுணர்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு உள்ளனர். அதிநவீன துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணி தொடர்கிறது. தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும் என கூறி உள்ளார். 


 


Sunday, October 27, 2019

முதியோர் இல்லத்தில் தீபாவளி

    தமிழ் நாடு மூத்த குடிமக்கள் சங்கம்  கொண்டாடிய தீபாவளி பண்டிகை 


         சென்னை ஜெய்நகரிலுள்ள   தமிழ் நாடு மூத்த குடிமக்கள் சங்கம் ஒரு மிக நல்ல தொண்டு சங்கமாக செயல்பட்டு வருகிறது, இச்சங்கத்தில் தற்போது 3000த்துக்கும் மேல் உறுப்பினர்களாக உள்ளனர்.


      இந்த சங்கம் மூத்த குடிமகன்களுக்கு  செய்து வரும் சேவை போற்றுவதற்குரியது, அவர்களுடைய தேவைகளை அறிந்து அவ்வப்போது மாநில, மைய்ய அரசுகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்து உத்தரவுகளை பெற்று  நடைமுறைபடுத்தி


அவர்களுக்கு சேவை செய்து வருகிறது.


 


 
 


   இ ந்த சங்க உறுப்பினர்கள் சொந்த பந்தங்களின் எந்த உதவியும் வேண்டாமல் தாங்களாகவே மூத்த குடிமகன்களுக்கு பல சேவை உதாரணமாக மருத்துவ முகாம் மற்றும் இதர சேவைகளை செய்து வருகிறார்கள்.      இதற்காக  அவர்கள்  உள் நாடு மற்றும் அயல் நாடுகளுக்கும் சென்று  அங்குள்ள மூத்தகுடிகன்களின் இல்லங்களுக்கு சென்று சேவை செய்து வருகின்றார்கள் .அந்த சங்கம் ELDERS என்ற மாதந்திர பத்திரிகை ஒன்றை  நடத்தி வருகிறது அந்த பத்திரிகை மூலம் உலகுக்கு இந்த சங்கத்தின் சேவையும் மற்றும் முத்த குடிமகன்களின் நிலை பற்றி தெரிவித்து உதவியும்  பொதுமகக்களிடம் பெற்று வருகிறது


        இந்த சங்கத்தின் தலைவராக தற்போது திரு  Thiru.P.Kalimuthu.IPS(Rrtired)former DGP அவர்கள் செயல்பட்டு வருகிறார். Thiru.D.Rajasekaran.IRS(Retired ) Former Jt Commissioner.Income Tax Dept. அவர்கள் பொதுச்செயலாளராகவும் and Thiru  P.S.Thirugnanam Additional Registrar of Coop Societies (Retired )சங்கத்தின்  மற்றொரு செயலராவும் செயல்பட்டு வருகிறார்கள் .இந்த சங்கத்தை நிர்வகிக்க ஒரு உயர் மட்ட குழுவும் உள்ளது


     இந்த சங்க உறுப்பினர்கள் இந்த வருட தீபவாளியை சென்னை அம்பத்துர் திருமுல்லைவாயில் சாய் ராம் முதியோர் இல்லம் சென்று அங்கு ஆதரவற்ற  முதியோர் களுக்கு  உணவு  உடை முதலியன வழங்கி தீபாவளிப்ண்டிகையை அவர்களுடன் கொண்டாடினார்கள்


வாழ்க அவர்களது தொண்டு!


வளர்க இச்சங்கத்தின் சேவை!தீபாவளி மலர் -கட்டுரை

வாசிப்பு


      புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. மாக்சிம் கார்க்கி


வாசிப்பு என்ன செய்யப் போகிறது என்றக்  கேள்விக்கு


பதிலளிக்கிறார்கள் பெண்கள்...


    பள்ளி பக்கமே எட்டிப்பார்க்காத ஒரு தாயின் பதில் ஆச்சரியமாக இருக்கிறது...நம்முள் பலர் கல்வி மட்டுமே ஒருத்தரை மேன்மை படுத்தும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்பதற்கு ஒரு சாட்டையடி தான் இது..


    நீ வாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதையோ கற்றுக் கொண்டிருக்கிறாய் என்கிறாள் அந்த தாய் ...நான் முதன்முதலில் அடுப்புங்கரை ஓரமாக அமரந்து சட்னி அரைக்க வாங்கிட்டு வந்த மடித்த பொறி கடலை பொட்டலத்தில் தான் என் வாசிப்பை தொடங்கினேன்...வாசிப்பு என்பது மனித வாழ்வை செம்மைப்படுத்தும் ஒரு பொக்கிஷம் என்றாள் அந்த தாய்...


    நானெல்லாம் மழைக்கு கூட பள்ளி பக்கமே ஒதுங்கினது இல்லை என்கிற துப்புரவுப் பணியாளர் ஒருவரின் வாசிப்பின் தொடக்க கால அறிமுகம் வண்ணதாசன் அவர்களின் கவிதைகள் என்கிறார் ...


     "நிர்ணயித்தபடி வேலை எல்லாம் முடிகிற நேரத்தில் பெய்கிற மழை ஒரு அலாதியான அழகும் கிளர்ச்சியும் கொடுக்கும்."


- வண்ணதாசன்


 


‌      இது தான் அந்த முதல் வாசிப்பு நேசிப்பு காதல் எல்லாம் என்று கூறுகிறார் மாரியம்மாள் ...


   குழந்தைகளிடம் புத்தகத்தைச் சேர்ப்பது மட்டுமின்றி புத்தக வாசிப்பால் கிடைக்கும் நன்மை தீமைகளை எடுத்துரைக்கவும் வேண்டும்  அது நம் ஒவ்வொருவரின் கடமை என்கிறார் நாடோடி வாழ்க்கையை வாழும் மூதாட்டி ஒருவர்...


 


     வாசிப்பு பாமர மக்களைக்  கவர்ந்த அளவு படித்தவர்களை கவரவில்லை என்பது உண்மையாகிறது ... அதனால் தான் படித்தவர்கள் வீட்டில் பல பிரச்சனைகளும் பாமர மக்கள் வீட்டில் எதையும் பொறுமையுடன் கையாள வேண்டும் என்ற பக்குவத்தையும் பெறுகிறார்கள்..படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் இன்று விவாகரத்து பட்டத்தையும் விரைவில் வாங்குகிறார்கள்.. குடும்பம் வாழ்வியல் குழந்தைகள் சமுதாயம் இப்படி அடிப்படை சிந்தனை எதை பற்றியும் சிந்திக்காமல் பணம் வேலை தங்களுடைய தேவை இப்படியே ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு புத்தகத்தின் வாசனை நுகரக் கற்றுக் கொடுக்கவேண்டும்..மன அழுத்தத்திற்கு புத்தக வாசிப்பு மருந்து என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள் ...இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும் நம்முள் இருந்தே மாற்றத்தை தேடுவோம்...


ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!


- ஜூலியஸ் சீசர்


 


குழந்தைகளுக்கான சில எழுத்தாளர்கள்:


       பி.டி.ஈஸ்ட்மேன், ராபர்ட் மெக்லோஸ்கே,லாரி லியர்ஸ் , ஜேம்ஸ் ரும்போர்ட் ,தோசி யாருகிட்ட,டரோ யஷிமா ,யுகியோ சுசியோ இப்படி பல வேற்று மொழி எழுத்தாளர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்...தற்போது இவையனைத்தும் இணையத்திலே கிடைக்கின்றன.. ஆரம்பத்தில் குழந்தைகள் அட்டை பக்கத்தை தான் தொட்டு பார்ப்பார்கள் பின்னர் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை ரசிப்பார்கள் மெல்ல மெல்லமாக தான் வாசிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளவார்கள் ... வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள் குழந்தைகளுக்கு இனி ஒவ்வொரு வீட்டிலும் அன்பாலும் புத்தக்த்தாலும் குழந்தைகள் சந்தோஷமாகட்டும்...


 


 


 


--கீர்த்தனா


===================================================================================


 

திரு* வுக்கு


*திரு* விழா  • *∞∞∞∞∞∞∞∞*


ஒரு எழுத்தாளர்    எப்படி எழுத வேண்டும் என்று   பிரபல எழுத்தாளர்


கல்கி சொன்னதாக…  சென்னை வானொலியில், *இன்று ஒரு தகவல்* என்ற


நிகழ்ச்சியை அளித்ததின் மூலம்   மிகவும் பிரசித்தி பெற்ற  தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்


ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது :


ஒருநாள்,   காஞ்சிபுரம் உபய வேதாந்த    தேசிக சுவாமிகள்,  தன் வீட்டு வேலைக்காரன்


குப்பனைக் கூப்பிட்டு :-   


அடேய் குப்பா…


நீ உடனே


*திரு* பெரும்புதூர் ஓடிப்போய்,


*திரு* வேங்கடாச்சாரியாரைச்     சந்தித்து,


*திரு* க்குடந்தையிலேயிருந்து      இங்கே வந்திருக்கிற,


*திரு* நாராயண ஐய்யங்கார்      சுவாமிகள்,


*திரு* க்கோயில் ஆராதனைக்கு


*திரு* த்துழாய் எடுத்துத்


*திரு* ம்புகையில்,


*திரு* க்குளத்தில்


*திரு* ப்பாசி வழுக்கவே


*திரு* வடி தவறி விழுந்தார்… என்று சொல்லிவிட்டு வா… என்றாராம்...


பிறகு குப்பனைப்பார்த்து,


என்னப்பா…  சொல்லிடுவாயில்ல… அப்படீன்னு கேட்க,


நான் சொல்லிடுவேன் சாமி     என்றானாம் குப்பன்.


 


உடனே,     வேதாந்த தேசிக சுவாமிகள்,    குப்பனிடம்…


எப்படி சொல்லப்போறேன்றத  ஒருதடவை சொல்லிக்காட்டு…


அப்படீன்னு கேட்க,


குப்பனோ,  அதென்ன சாமி;


கும்பகோணத்து ஆசாமி 


குட்டையில விழுந்தார்ன்னு


சொல்லுவேன்…


அப்படீன்னானாம்… 


சொல்றத எப்படிச் சுவாரசியமா சொல்லனும்ன்னா…


தேவைக்கு அதிகமா வளர்த்தக் கூடாது…என்று கல்கி சொன்னதை  


அந்த நிகழ்ச்சியில்   நினைவுபடுத்தினார் தென்கச்சி சுவாமிநாதன்...


 


சமீபத்தில்,


ஒரு காணொளியில்,   தென்கச்சி அவர்கள்   மேலே சொன்னதை காணும் 


வாய்ப்பு கிட்டியது. 


உடனே,


எனக்குள்,   ஒரு எழுத்தாளன்   தேவைக்கு அதிகமாக


வளர்த்தக்கூடாது  என்பதைவிட


*திரு* … *திரு* … என்று 


*திரு* ம்பத் *திரு* ம்ப வந்த சொல் மிகவும் கவர்ந்தது.


அதன் விளைவாக,


என்னுள் தோன்றிய 


*திரு* பற்றிய


ஒரு தொகுப்பு.


------------------------------


*திரு* க்குறள்


     உலகப் பொதுமறை


     என்பதில் மாற்றுக்


     கருத்து இல்லை…


 


*திரு* வாசகத்திற்கு


     உருகாதார் 


     ஒரு வாசகத்திற்கும் 


     உருகார்…


*திரு* ப்பரங் குன்றத்தில்


     நீ சிரித்தால்


*திரு* த்தணி மலைமீது


     எதிரொலிக்கும்…


*திரு* ப் புகழைப் 


     பாடப் பாட


     வாய் மணக்கும்…


     


     என்ற பாடல் வரிகள்,


     மிகவும் பிரபலம்...


 


*திரு* அருட் பிரகாச 


  வள்ளல் வடலூரார்,


*திரு* வாய் மலர்ந்து


  அருளியது


*திரு* அருட்பா…


 


*திரு* மந்திரமாலையை


     அருளிய


*திரு* மூலர்


     சேக்கிழாரால் புகழப்பட்ட


     63-வரில் ஒருவர்…


     பதினெண் சித்தர்களில்


     ஒருவர்…


*திரு* மூலர் வரலாற்றை 


     நம்பியாண்டார் நம்பிகள் 


*திரு* த்தொண்டர்,


*திரு* வந்தாதியில்


     கூறியுள்ளார்...


 


*திரு* முறை ஓதுபவர்கள் 


     ஆரம்பத்திலும் முடிவிலும் 


*திரு* ச்சிற்றம்பலம்


     என சொல்வார்கள்...


 


*திரு* முறைகள்


     பன்னிரண்டு…


 


*திரு* நீறு சைவர்களால்


     நெற்றியில் இடப்படும்


     புனித அடையாளம்…


 


*திரு* வையாற்றில்,


     ஆண்டுதோறும்


     தியாகராஜ ஆராதனை விழா,


     என்ற இசை நிகழ்ச்சி


     ஐந்து நாட்கள்


     நடைபெற்று வருகிறது. 


 


*திரு* டாதே படத்தில்


     ஒருபாடலின் வரிகளான


*திரு* டானாய்ப் பார்த்து


*திரு* ந்தா விட்டால்


*திரு* ட்டை ஒழிக்க முடியாது,


     என்ற வரிகள்


     என்றும் பொருந்தும்…


 


*திரு* விளையாடல்


     படத்தில் வந்த


     *தருமி, ஹேமநாதர்*


     பாத்திரங்களை என்றுமே,


     மறக்க முடியாது…


 


*திரு* வண்ணாமலை


     தலத்தினை நினைத்தாலே


     முக்தி தருமாம்.


 


*திரு* வாரூர் தேர்


     ஆசியாவிலேயே


     மிகப்பெரிய தேர்…


*திரு* வாரூர் தேர்


     96-அடி உயரமும்


     360-டன் எடையும் கொண்டது...


*திரு* வாரூர் தேரோட்டம்


     உலகப்புகழ் வாய்ந்தது…


 


*திரு* ப்பதிக்கே லட்டா


*திரு* நெல்வேலிக்கே அல்வாவா


     என,     நையாண்டியாக


     சொல்வதுண்டு…


 


*திரு* க்கடையூரில்


     வேள்வி செய்தால்


     ஆயுள் நீடிக்குமாம்...


 


*திரு*.வி.க. என்பதன்


     விரிவாக்கம்


*திரு* வாரூர் விருத்தாசலம்


     கலியாண சுந்தரனார்…


 


*திரு* *முருக* 


     என்ற அடைமொழியுடன்


     கிருபானந்த வாரியாரை


     அழைப்பதுண்டு…


 


*திரு* ட்டு முழி


*திரு* திருன்னு முழி


     என      சிலரை சொல்வதுண்டு…


 


*திரு* ம்பத் *திரு* ம்ப


*திரு* ப்பித் *திரு* ப்பி


     என சொல்வது      வழக்கத்திலுண்டு…


 


*திரு* டா 


*திரு* டி


     என்ற படத்தில்


     இடம்பெற்ற பாடலான


     *மன்மத ராசா,*


     மிகவும் பிரபலமான


     பாடல்களில் ஒன்று…


  


*திரு* நங்கை என


     மூன்றாம் பாலினத்திற்கு


     அழகு சேர்த்தது தமிழ்…


 


*திரு* மணம் 


     காலம் காலமாக 


     மகசூல் அளிக்கக்


     கூடியது என்பதால்


*திரு* மணம் என்பது 


     ஆயிரம் காலத்து பயிர்


     எனக் கூறுகிறார்கள்..


 


*திரு* வாளர்


     என ஆண்களையும்,


*திரு* மணமான பெண்களை


*திருமதி* யெனவும்


     அழைப்பதுண்டு…


 


*திரு* மணம்


     காலத்தே நடைபெற


*திரு* மணஞ்சேரி…


*திரு* விடந்தை…


     என்ற இடங்களிலுள்ள


     கோவில்களுக்குச் சென்று


     வேண்டிக் கொள்வர்…


 


*திரு* வாய் 


     மலராதோ வென,


     அமைதி காப்பவரிடம்


     கேட்பதுண்டு…


 


*திரு* விழா


     நடைபெறும் இடங்களில்


*திரு* டுக்கு


     பஞ்சமிருக்காது…


*திரு* டர்களின் கைவரிசை


     சர்வ சாதாரணமாயிருக்கும்


*திரு* டர்கள் ஜாக்கிரதை


  என்ற காவல் துறையின்


  அறிவிப்பை கேட்கலாம்…


 


*திரு* டன் என்பதை


*திரு* டர் என்று


*திரு* த்தம் கொண்டுவர


*திரு* டர்கள் சங்கம்


  முடிவு செய்துள்ளது…


 


*திரு* ச்சிக்கு அருகிலுள்ள


*திரு* வானைக்காவல், 


  அல்லது 


*திரு* ஆனைக்காவல்,


  எனப்படும் 


*திரு* வானைக்கோவில்,


  ஆனை தொழுத


*திரு* க்கோவிலென


  சொல்வதுண்டு…


 


*திரு* ச்சி மாவட்டத்திலுள்ள


*திரு* வெறும்பூர் என்று 


  தற்போது அழைக்கப்படும்


*திரு* எறும்பியூர்,


*திரு* ச்சியிலிருந்து


  தஞ்சை செல்லும் பாதையில்


  13 கிலோமீட்டர்கள் 


  தொலைவில் உள்ளது.


*திரு* வெறும்பூரிலுள்ள


  எறும்பீஸ்வரர் கோயில் 


*திரு* நாவுக்கரசரால் பாடல் பெற்ற


  சிவாலயமாகும்.


 


*திரு* ப்பாம்பரம்


  என்ற ஊரில் உள்ள


*திரு* ப்பாம்பரம் 


  சேஷபுரீஸ்வரர் கோயில்,


  பாம்பு தொழுததால்,


*திரு* ப்பாம்புரம்


*திரு* க்கோவில்…


  எனப் பெயர் கொண்டதாம்…


*திரு* ப்பாம்பரம் 


  தலத்தினை தரிசித்தாலே


  நாக தோஷ பரிகார தலங்கள்


  அனைத்தையும் தரிசித்த


  பலன் கிட்டுமாம்…


*திரு* ஞானசம்பந்தர் 


  தன் தேவாரப் பாடல்களிலும்…


*திரு* நாவுக்கரசர் தனது


*திரு* த்தாண்டகத்திலும்……


*திரு* ப்புகழில்


  அருணகிரிநாதரும்…


  இத்தலத்தைப் பற்றிக்


  குறிப்பிட்டுள்ளனர்…


 


*திரு* நள்ளாரிலுள்ள


*திரு* த்தலம்…


  சனிபகவானுக்குரிய 


  பரிகாரத் தலமாகும்…


 


*திரு* நாகேசுவரத்திலுள்ள


*திரு* க்கோவில்…


  நவக்கிரகங்களில் ஒன்றான


  ராகுவுக்கான தனிக்கோவில்…


 


*திரு* ப்பதிக்கு


  ஆண்டுக்கு ஒருமுறை


  சென்னையிலிருந்து


  குடை கொண்டு 


  செல்லப்படுவதை


*திரு* ப்பதி குடை,


  கவுனி தாண்டுகிறதென்பர்…


 


*திரு* ப்பதியிலிருக்கும்


*திரு* மலைக் கோவிலின்


  ஆண்டு வருமானம்


  உலகத்திலுள்ள கோவில்களில்


  இரண்டாம் நிலையிலுள்ளது…

  

 

சங்கநூல்கள் தொகுப்பில் 


பத்து, பாட்டு நூல்களும், 


எட்டு, தொகை நூல்களும் 


இடம்பெற்றுள்ளன. 


இந்த 18 நூல்களையும் 


மேல்கணக்கு எனவும்


கீழ்க்கணக்கு என்றும்


வழங்கப்படுகின்றன.


 


*திரு* முருகாற்றுப்படை 


     பாட்டுநூல்கள் பத்தில் 


     முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. 


     இதனைப் பாடிய புலவர் நக்கீரர்.


 


*திரு* என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. தற்காலத்தில் 


ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர்


முற்கால வைணவ இலக்கியங்களிலேயே


*திரு* வரங்கம் என்று குறிக்கப்பட்டுள்ளது.


 


மேலும்,


 


*திரு* மால்,


*திரு* மகள்.


*திரு* வடி, 


*திரு* நாமம், 


*திரு* வோடு, 


*திரு* வருள், 


*திரு* ப்பணி, 


*திரு* த் தந்தை, 


*திரு* ச் சபை,


*திரு* முறை, 


*திரு* மந்திரம், 


*திரு* உளச்சீட்டு,


     ( *திரு* மணப் 


     பொருத்தம் பார்க்க)


*திரு* ச்சரடு (தாலி), சொற்களும் புழக்கத்திலுண்டு.


 


சிலைகளுக்கு *திரு*உருவச்சிலை எனவும் அழைப்பதுண்டு.


 


1937-ஆம் ஆண்டு,


சென்னையில்,   (அப்போதைய மெட்ராஸ் ஸ்டேட்), காங்கிரசு ஆட்சி அமைந்ததும்,


அரசின் அஞ்சல்களில்,  அனைவருக்கும் *'ஸ்ரீ'* என்ற   அடைமொழிச் சொல்லைப்


பயன்படுத்தக் கூறி  அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு மிகவும் எதிர்ப்பு கிளம்பியது.


1940-ஆம் ஆண்டு 


ஆகஸ்டு மாதம் நான்காம் நாள், 


திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு, 


*'ஸ்ரீ'* எனும் சொல்லுக்குப் பதில் 


*'திரு'* எனும் தமிழ் வார்த்தையையே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக்கொண்டது.


நிறைவாக,


 


*திரு* வாரூரிலிருந்து


  10 கி.மீ. தூரத்திலிருக்கும்


*திரு* க்குவளை


  என்ற ஊரில் பிறந்து,


  தமிழகத்தின் முதல்வராக


  ஐந்து முறை இருந்து,


  தற்பொழுது ஓய்விலுள்ளவர்


  கலைஞர் மு. கருணாநிதி…


 


 


    *ஏ. இளவரசு*


 


Saturday, October 26, 2019

தீபாவளி மலர் --ஓவியம்

தீபாவளி மலர்


ஓவியங்கள்


 


1,


 


  ----ஜெயவீரபாண்டியன்


2.


.


---M.R.Rayappan


000000000000000000000000000000000000000000000000000000000000000000


3.


.


 


-----------Artist ArjunKalai


தீபாவளி மலர் --ஆன்மிகம்

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை


 கந்த சஷ்டி விரதம் 28.10.2019 தொடங்குகிறது (28.10.2019 முதல் 1-11-2019 வரை விரதம் கடைப்பிடித்து, 2-11-2019 பாரணையுடன பூர்த்தி செய்வர்) ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும்.


       இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள். கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா? ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும். தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும். அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.


             சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.


                  தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.


சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-  • சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது. இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது. 


 


 


---மஞ்சுளா யுகேஷ்


 


 


  


பகீரதனின் சாபம் நீக்கியருளிய கங்காதீஸ்வரப் பெருமான்!அயோத்தி நகரைத் தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரிய குலத்து மன்னன் சகரன் ஒரு பெரிய அஸ்வமேத யாகம் நடத்தினான். இந்த யாகத்திற்குத் தடையை ஏற்படுத்த நினைத்தான் தேவா்களின் தலைவனான தேவேந்திரன்.


தன் ஏவலா்களை அனுப்பிய இந்திரன் வேள்விக்குரிய குதிரையைக் கவா்ந்து சென்று பாதாள உலகில் மறைத்து வைத்தான். வேள்வி தடைப்பட்டதை நினைத்து வருந்திய சகரன், தனது அறுபதினாயிரம் புதல்வா்களையும் அழைத்து குதிரையை உடன் கண்டுபிடித்துக் கொண்டுவர ஆணையிட்டான்.


 


தந்தையின் ஆணையைச் சிரமேற்ற புதல்வா்கள் காற்றின் வேகத்தில் சிட்டாகப் பறந்து சென்று பாதாள உலகில் தங்களது குதிரை இருப்பதைக் கண்டுபிடித்தனா். குதிரையின் அருகில் ஆழ்ந்த தவத்திலிருந்த கபில முனிவரைக் கண்டதும், அம்மகரிஷி தான் தங்களது குதிரையைக் கவா்ந்தவா் என நினைத்து அவரது தவத்திற்கு இடையூறு செய்து அவரைத் தாக்கினா்.


தவ வலிமை மிக்க கபில முனிவா் கண் திறந்து அவா்களைத் தன் பார்வையால் சுட்டெரித்து சாம்பலாக்கினார். தன் மக்கள் முனிவரின் சாபத்தால் பஸ்பமானதை அறிந்த மன்னன் சகரன், நடந்ததை அறிய தனது பேரனான அஞ்சுமானை பாதாள உலகிற்கு அனுப்பினான். அங்கே கபில முனிவரை சந்தித்த அஞ்சுமான் நடந்த செயல்களுக்காக அவரது திருவடிகளில் பணிந்து வணங்கி மறைந்த அறுபதினாயிரம் பேரையும் உயிர்ப்பிக்க வழி கூறியருளுமாறு வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட கபில மகரிஷி அயோத்தியின் குதிரையை அவனுடன் அனுப்பி, இறந்தவா்களை உயிர்ப்பிக்க ஆகாயத்தி லுள்ள கங்கையால் மட்டுமே முடியும் என்றும் கூறி அஞ்சுமானை அனுப்பி வைத்தார். குதிரை அயோத்தி திரும்பியதும் அஸ்வமேதயாகமும் இனிதே நடைபெற்றது.ஆகாய கங்கையைக் கொண்டுவர அஞ்சுமானும் அவனது புதல்வன் திலீபனும் நீண்ட நாட்கள் தவம் செய்தனா். ஆனால் அவா்களது முயற்சிகளுக்குப் பலனேதும் கிட்டவில்லை. இவா்களுக்குப் பின்னா் திலீபனின் புதல்வனான பகீரதன்கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர தனக்கு ஆலோசனை கூறியருள பிரம்மதேவனின் உதவியை நாடி, அவரது திருவடிகளில் பணிந்து வணங்கினான். அவனது வேண்டுதலால் மனமிரங்கிய நான்முகன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர ஒரே வழி சா்வேஸ்வரனைக் குறித்து கடுந் தவமியற்றுவதே என்று உபாயம் கூறியருளினார்.


பிரம்மதேவனின் ஆலோசனையை சிரமேற்று தன் முன்னோர்கள் சாப விமோசனம் பெற ஈசனைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் மேற்கொண்டான் பகீரதன். சிவ சிந்தனை தவிர இதர நினைவுகள் ஏதுமின்றி கடும்தவம் செய்த பகீரதனின் பிரயத்தனத்தால் மனம் மகிழ்ந்த ஈசன், வான் வெளியிலிருந்து பெருவெள்ள மாக நிலத்தில் கங்கையைப் பாயச்செய்தார்.


 


வான்வெளியிலிருந்து வேகமாகப் பாய்ந்த கங்கையின் சீற்றத்தால் பூவுலகம் நடுங்கியது. அஞ்சிய தேவா்கள் அம்மையப்பனிடம் சென்று கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருள வேண்டும் என்று வணங்கினா். ஈசன் அப்பெருவெள்ளத்தைத் தன் சடைமுடியில் தாங்கி ஏழு நீா்த்துளிகளை மட்டும் பூவுலகிற்கு அளித்து கங்கையின் சீற்றத்தைத் தணித்தார். இதனால் ஈசனுக்கு, கங்காதரன் எனும் திருநாமம் ஏற்பட்டது.


பகீரதன் முயற்சியால் பூவுலகம் வந்த கங்கைக்கு பாகீரதி என்ற பெயரும் ஏற்பட்டது. பாகீரதி பாதாளத்தில் பாய்ந்ததும் சாம்பலான சகர மன்னனின் புதல்வா்கள் மீது பட்டு அவா்கள் உயிர்த்தெழுந்து நற்கதி அடைந்தனா். அன்றிலிருந்து பாரதத்திருநாட்டின் புண்ணிய நதியாகப் போற்றி வணங்கப்படு கின்றது கங்கை நதி.


 


செந்தமிழ் இலக்கியங்களில் கங்காதரன்!


சா்வேஸ்வரன் கங்கையைத் தன் தலையில் சூடிய நிகழ்வினை
ஆகம நூல்களும் சிற்ப சாத்திரங்களும் கூறுகின்றன. சிவ வடிவங்களில் இருபத்தைந்து வடிவங்கள் மட்டும் சிறப்பு வாய்ந்தவை என்பதைப் புராணங்களும் சிற்பக்கலை நூல்களும் தொிவிக்கின்றன.


தமிழில் உள்ள மச்சபுராணமும் சிவபெருமானுடைய இருபத்தைந்து மூா்த்தங்களைச் சிறப்பாகக் கூறுகின்றது. 


கலித்தொகையில், சடைக்கரந்தான், ஈா்ஞ்சடை அந்தணன்என்று ஈசனது கங்காதர மூா்த்தம் கீழ்க்கண்ட பாடல்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.


 


பன்னிரு திருமுறைகள் பாடிய சைவப் பெருமக்கள் தங்களது பதிகங்களில் கங்காதர மூா்த்தத்தைப்பாடி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளனா். 


 


பகீரதன் பிரதிஷ்டை செய்த இலிங்கம்!


பகீரதன் எனும் சூரிய குல மன்னன் ஒரு முறை பிரம்மபுத்திரரின் புதல்வரான நாரத மகரிஷியை தன் முன்வினைப் பயன் காரணமாக அவமதித்தான். கோபம் கொண்ட நாரதரின் சாபத்தால் மேகநோய் பீடித்த பகீரதன் தன் நாடு நகரங்களை இழந்து வாடினான். தன் துன்பங்களிலிருந்து விடுபட வழிதேடி அலைந்த பகீரதனுக்கு 1008 சந்தன இலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் துன்பங்களிலிருந்து மீளலாம் என ஒரு மகரிஷியின் அருள்வாக்கு கிடைத்தது.


மகரிஷியின் வாக்குப்படி இலிங்கப் பிரதிஷ்டை செய்து வந்த பகீரதன் தனது 1008 ஆவது சந்தன லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடி அலைந்தபோது ஈசன் அசரீரியாக இங்குள்ள பலாச (புரசை) மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய திருவுள்ளம் கனிந்தார். அவ்வாறு பகீரதன் இலிங்கப் பிரதிஷ்டை செய்து நித்யபூஜைகள் செய்த திருத்தலமே புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயில் ஆகும்.


 


ஈசன் இத்தலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருள்பாலிக் கின்றார். தேவ கோட்டத்தில் விநாயகா், ஶ்ரீதெட்சிணாமூா்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துா்க்கை எழுந்தருளியுள்ளனா். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் நெரிசலான புரசைவாக்கத்தில், ஐந்து நிலை ராஜகோபுரம் விண்ணளந்து நிற்க நடுநாயகமாக திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் கங்காதீஸ்வரப் பெருமான். சென்னையிலுள்ள பஞ்சபூத திருத்தலங்களில் இத்தலம் நீா் தலமாக வணங்கப்படுகின்றது.


 


1968 ஆம் ஆண்டு பூண்டி நீா்த் தேக்கம் அமைக்கப்பட்டபோது திருவிளம்புதூா் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டிருந்த எம்பெருமானை புரசைவாக்கம் தலத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் பின்னா் ஈசனின் திருவுள்ளப்படி இத்தலத்திலேயே நிரந்தரமாக ஈசன் கோயில் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. திருஊன்றீஸ்வரா் எனும் திருநாமம் கொண்ட இப்பெருமான் தற்போது புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலின் உள்பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றார்.


திருவிளம்புதூா் கோயிலின் இதர திருவுருவச்சிலைகள் அனைத்தும் திருவெண்பாக்கம் என்ற இடத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தலத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் வரலாறு தெரிவிக்கின்றது. சுந்தரா் திருவொற்றியூரிலிருந்து திருவாரூா் செல்லும் வழியில் கண்பார்வையிழந்து வாடிய போது அவருக்கு ஊன்றுகோல் அளித்த திருத்தலமே திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரா் திருத்தலம் ஆகும்.


 


புரசைவாக்கம் தலத்தில் ஈசன் தல விருட்சமான புரசை மரத்தடியில் எழுந்தருளியுள்ளார். புரசை மரத்திற்கு பலாசம், முருக்கு, கிஞ்சுகம் என்றும் பல பெயா்கள் உண்டு. புரசைமரங்கள் அடா்ந்து நிறைந்திருந்த இப்பகுதி புரசைப்பாக்கம் என்று வழங்கப்பட்டு தற்போது புரசைவாக்கம் ஆக மருவி உள்ளது.


இத்தல அம்பிகை பங்கஜாம்பாள் என்றும் பங்கஜாக்ஷிஎன்றும் வணங்கப்படுகிறாள். தாமரை போன்ற திருக்கண்களை உடையவள் என்பதனால் இத்தல அம்பிகைக்கு பங்கஜாம்பாள்எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளது. மடிசார் அணிந்து சா்வாபரண பூஷிதையாய் திருக்காட்சி தரும் அன்னையின் தரிசனத்தால் நம் மனம் அந்த இடத்தைவிட்டு அகல மறுக் கின்றது. சிவாச்சாரியார்களின் இதயபூா்வமான ஈடுபாட்டுடன் கூடிய பக்தியை அன்னைக்கு இவா்கள் செய்திருக்கும் அலங்காரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.இத்தலத்திற்கு வந்து வழிபடுவதற்கு, நம் மனதில் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டாலே அக்குறைகள் உடனடியாக நிவா்த்தியாகும் என இத்தலத்தின் சிவாச்சாரியார் பக்தியோடு தெரிவித்தார். இவரது கருத்திற்குச் சான்றாக எந்த நேரமும் பக்தா்கள் பெருந்திரளாக வந்து ஈசனை வழிபட்டு தங்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்று கின்றனா்.பிரதோஷ நாள்களிலும் இத்தலத்தில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.


பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பா்களுக்கு இத்தலம் பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தின் விருட்சமான புரசை பூரம் நட்சத்திரத்திற்கான விருட்சமும் ஆகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பா்கள் திருமணம் கைகூடவும், மழலைப் பேறு வாய்க்கவும், நிரந்தரமான வேலை கிடைக்கவும் இத்தலத்து ஈசனை வழிபடுகின்றனா்.


 


கோயிலின் வெளிச்சுற்றில் குருந்த மல்லீஸ்வரா் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் லிங்க மூா்த்தத்திற்கும் அவருக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி எம்பெருமானுக் கும் பக்தா்கள் தங்களது கைகளினால் அபிஷேகம் செய்வித்து வில்வ தளத்தால் அா்ச்சிப்பது விசேஷம் ஆகும்.


கங்கை தீா்த்தம்.


புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலின் தீா்த்தம் கங்கை தீா்த்தம் என்று பக்தியுடன் பூஜிக்கப்படுகின்றது. தற்போது இந்த தீா்த்தம் மூன்று பக்கம் சுவா்களுடன் ஒரு பக்கம் கதவுடனும் கருவறைக்குப் பின்புறம் உள்ளது. திருக்கோயிலின் வடக்கில் அரை ஏக்கா் பரப்பில் ஒரு குளம் இருக்கிறது. ஆனால் இந்த புனித தீா்த்தம் நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தில் தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டபோது இக்கோயிலின் குளத்திலிருந்த ஏழு கிணறுகளிலிருந்து இறைக்கப்பட்ட தண்ணீா் சென்னையின் தாகத்தைத் தணித்துள்ளது.


கங்காதீஸ்வரப் பெருமானின் பெரிய திருவுருவச்சிலையும் பாகீரதன் அவரது திருவடிகளில் பணிந்து வணங்குவதை யும் திருக்கோயில் வளாகத்தில் அழகிய சுதைச்சிற்பமாக வடித்துள்ளனா்.


கல்வெட்டுகள்.


இரண்டாம் குலோத்துங்க சோழனால் புனரமைக்கப்பட்டது என்று ஆய்வாளா்கள் தெரிவிக்கும் இக்கோயிலில் நான்கு கல்வெட்டுகள் உள்ளன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூா் நாட்டு திருவான்மியூரிலுள்ள உலகாளுமுடைய நாயனாருக்கு விளக்கெரிப்பதற்கு நீலதங்கரையன் கொடை அளித்துள்ளதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. முதல் பிரகாரத்தில் விஜயநகர மன்னன் தேவராயன் ஆட்சிக் காலத்தில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டின் சிதைந்த பகுதி காணப்படுகின்றது.


கி.பி.16 ஆம் நூற்றாண்டு குரோதி வருடம் கங்காதரேஸ்வரா் கோயிலில் பொறிக்கப்பட்ட விஜயநகர மன்னனின் கல்வெட்டு ஆயா்களில் ஒருவரான கெங்கோன் அழகப்பெருமாள் என்பவா் கோயிலுக்கு தினமும் திருவிளக்கு ஏற்ற பணியமா்த்தப்பட்டுள்ள செய்தியைக் குறிப்பிடுகின்றது.


 


சிற்பங்கள்.


கங்காதரேஸ்வரா் கோயில் கருவறைக்கு முன்புற மண்டபத் தூண்களில் தில்லைவாழ் அந்தணா், நீலகண்ட நாயனார், சுந்தரமூா்த்தி சுவாமிகள், இயற்பகை நாயனார், அரிவாட்டாய நாயனார், ஆனாய நாயனார், மூா்த்தி நாயனார், மானக்கஞ்சாற நாயனார், ஏனாதி நாயனார், குங்கிலியக் கலய நாயனார், எறிபத்த நாயனார், மெய்ப்பொருள் நாயனார், விறன் மிண்ட நாயனார், அமா் நீதி நாயனாஙர, இளையான்குடி மாற நாயனார் ஆகியோர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இராஜகோபுரத்தில் நூதனமான தெய்வத் திருமேனிகள் சுதை வடிவில வைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலின் திருச்சுற்றுமதிலில் உள் பகுதியில் ஈசனின் மகிமைகளை விளக்கும் புராணக்காட்சிகள் சுதையால் வடிக்கப்பட்டிருப்பது எழிலான காட்சியாகும்.


மரச் சிற்பக் கலைக்குச் சான்றாக இத்தலத்தின் வாகனங்களான மூஷிக வாகனம், சந்திர பிரபை, சூா்யபிரபை, பூதவாக னம், நாகவாகனம், இடப வாகனம், யானை வாகனம் மற்றும் குதிரை வாகனம் ஆகிய வாகனங்கள் எழிலோடு செதுக்கப்பட்டுள்ளன.


இத்தலத்தில் பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, ஆடிப்பூரம், சமயக்குரவா்கள் நட்சத்திரங்கள், மாகாளய அமாவாசை, கார்த்திகையில் 108 சங்காபிஷேகம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமும் ஆனி மாதத்தில் வசந்தோற்சவமும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழாவும் மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். இத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின் றது.


அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இத்தலத்தின் சுவாமி மற்றும் அம்பாள் மீது கலம்பகம், யமக அந்தாதி ஆகியவற்றை இயற்றியுள்ளார். மேலும் ஈசன் மீது வருக்க மாலை என்ற தொகுப்பினை எழுதியுள்ளார். பாலசுந்தர நாயக்கா் கங்காதர ஈஸ்வரா் மீது பெருமானார் மாலை” “அருள் வேட்டல்” “பங்கஜாம்பாள் அருள்வேட்டல் ஆகிய பாமாலைகளை இயற்றியுள்ளார். இவரது கங்காதேஸ்வரா் மாலை 1907 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக் கோயிலுக்கு 23.4.2008 அன்று திரு அபிராமி ராமநாதன் அவா்களைத் திருப்பணிக்குழுத் தலைவராகக் கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.


இத்தலத்துடன் இணைந்த அருள்மிகு சுமூக விநாயகா்திருக்கோயில் இக்கோயிலுக்கு அருகில் உள்ளது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பா்கள் அளவிட முடியாத சக்தி படைத்த சுயம்பு மூா்த்தியாக அருளும் இந்த விநாயகப் பெருமானையும் வழிபடுவது சிறப்பாகும்.


கங்காதீஸ்வரா் திருக்கோயில் சென்னை, புரசைவாக்கம் டேங்க் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. சென்னை எழும்பூா் இரயில் நிலையத்தி லிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


பகீரதனின் முன்னோர்களது சாபத்தை நிவா்த்திக்க புனிதமான ஆகாய கங்கையை இப்பூவுலகில் பாய்ச்சிய கங்காதீஸ்வரப் பெருமானை சென்னை மக்களின் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கவும் நிரந்தர வழி கூறி அருளுமாறு கண்களில் நீா் மல்க வேண்டி விடைபெற்றோம்.


காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.


 


--முன்னூர் ரமேஷ்


தீபாவளி வாழ்த்துகள்


 


அனைத்து வாசகர்களுக்கும் பீப்பிள் டுடே பத்திரிகை குழுமத்திற்க்கும்


எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள்


 
அனைத்து வாசகர்களுக்கும் பீப்பிள் டுடே பத்திரிகை குழுமத்திற்க்கும்


எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள் 


\


விஜய் ரசிகர்கள் கைது

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது


            நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் நேற்று ரிலீசானது. நேற்று மாலை முதலே பிகில் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிந்து ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.


     கள்ளக்குறிச்சி பகுதியிலும் 3 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால்  காலை சிறப்பு காட்சிகள் நடத்தப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து. சிறப்பு காட்சிகள் நடத்தக்கோரி போராட்டம் செய்தனர்.அப்போது தியேட்டர் முன்பு கோ‌ஷமிட்டு ரகளை செய்து. ரவுண்டானாவில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கற்களை வீசி வெறித்தனமாக  தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். 


  விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு கூடிநின்ற விஜய் ரசிகர்கள் நாலாபுறமும் பயந்து சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை உருவானது.  இந்த நிலையில், ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 


 


Friday, October 25, 2019

தீபாவளி மலர் --சினிமா

இரண்டு  படங்கள் ஒரே பார்வை 


  


கே பாலசந்தர் இயக்குனர் சிகரம், தமிழ் சினிமாவிற்கு புது குருதிப்பாய்ச்சியவர்!  பெண்களுக்கு அவரை ஒரு படி கூடவே பிடிக்கக்காரணம் அவரது ஹீரோயின்களை புரட்சி நாயகியாக,நாம் செய்யமுடியாததை திரையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் செய்யும் போது பெண்களை தாங்களே அதை செய்வதாக உணர்ந்ததுடுண்டு !  


 


குறிப்பாக மனதில் உறுதி வேண்டும் , அவள் ஒரு தொடர்கதை சொல்லலாம்.


 


கே.பி சார் படைத்த பல முத்துக்களில் எதை எடுக்க..கோர்க்க எனும் நிலை தான்.


 


கமல்ஹாசனையும் , ரஜினி காந்த் ஐயும் திரையில்,ரசிகர்களின் மன சிம்மானத்தில் அமர்த்தி உலவச்செய்த  அவர்களின் ஆசானாகிய கேபி ஏனோ .. சூப்பர் ஸ்டார் என தனக்கென ஒரு இமேஜ் வளையத்துக்குள் சென்றபோது அவரை வைத்து கமர்ஷியலாக இயக்கவில்லை.ஆனால்..அவர் நடித்த கமர்சியல் படங்களுக்கு கவிதாலயா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.


 


 எஸ் பி முத்துராமன் அவர்கள் பல திரைப்படங்களில் சூப்பர்ஸ்டாராகக்காண்பித்திருக்கிறார்.


அதில் கேபி அவர்களின் தயாரிப்பில்..எஸ்பிஎம் இயக்கத்தில் வந்த புதுக்கவிதை. 1982 ஜூனில் வெளியான இக்கவிதை கன்னடத்தில் ராஜ்குமார், லஷ்மி நடித்து ஹிட்டான "நா நின்ன மரேயாலரே"   படத்தின் ரீமேக்! 


 


மோட்டர் சைக்கிள் சேம்பியன் கம் மெக்கானிக்  ரஜினிகாந்த் இவர் சேம்பியன்ஷிப் போட்டியில் ஜெயிக்க..அதைப்பார்த்து ஜோதி( நம் பக்கத்துவீட்டுப்பெண்ணின் லுக்கில் இருப்பார் இவர்) காதலில் விழ, இவர் அம்மா கோடீஸ்வரி சுகுமாரி..காதலுக்கு வில்லியாக,சுபமாக சேர்ந்தார்களா..எனில்..அதான் இல்லை.


 


சாதுர்யமாக ஏமாற்றி மகளை தனக்குப்பிடித்த மாப்பிள்ளை க்கு கல்யாணம் செய்விக்க , உருகி உருகிக்காதலித்த ரஜினி ஜோதியின் நினைவிலேயே..இருக்கிறார். இவர்கள் பல வருடங்கள் கழித்து சந்திக்க , பரஸ்பரம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் காட்சிகள் , அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சீன்ஸ் ரசனை காட்சிகள்.


படபட சரிதா இடைவேளைக்குப்பிறகு அறிமுகமாகி.. சஸ்பென்ஸாக, அவர், இவர் என ரஜினியைக்குறிப்பிட ஒரு குழந்தையும் காட்டப்பட (அக்குழந்தைக்கும் பேர் உமா..தன் காதலி.. ஜோதியின் பெயரை வைத்து அதே பீல்ல..நம்ம ஹீரோ )


அக்குழந்தையின் டீச்சராக ஜோதி கண்ணில் ரீ எண் ட்ரி !! . காதல் மலருமா…திருமணமான ஜோதி எப்படி ரியாக்ட் செய்வார்..?! அத்தனைக்கும் பதிலாக இடைவெளி க்கு பிறகு வரும் காட்சிகள் பதில் சொல்கின்றன ! 


ரஜினி அவரைத்தெரிந்துக்கொள்ள ஆர்வமாக..பல யூ டர்ன்களை கடந்து.. ஒருவரையொருவர் உணர்ந்துக்கொள்கின்றனர்.


திருமணமானப்பெண்ணுடன் காதலன் மீண்டும் சேர்வது கொஞ்சம் புதுமையான களம் தானே ! நான்கே பாடல்கள்,இசை இளையராஜா.கதை, திரைக்கதை விசு .நன்றாக முடிச்சுக்களை அவிழ்க்கிறார்.


 


திருமணமாகி விதவையானப்பெண்ணுடன் சேரும் அதே காதலுடன் ஹீரோ சேர்வது புதுமைதானே ! வழக்கமான..ஸ்டைல்,கோபம்..ஆக்‌ஷன் என ரஜினி கலக்கியிருப்பார்..


 


மெக்கானிக், பொருந்தாத ஸ்டேட்ஸ் என்றக் காரணங்களால் ஒன்று சேர முடியாவிட்டாலும் , கணவனை இழந்து ஹீரோயினும் , கல்யாணம் செய்துக்கொள்ளாமல் ஹீரோவும் சேர்வது ஒரு புரட்சிதான் ! (பல படங்களில், வழக்கமாக திருமணத்தன்று ..முதலிரவிற்கு முன்பே கணவரை பறிகொடுக்கும் கன்னிக்கழியாத நாயகி என்றெல்லாம் கதையை இழுத்துப்பிடிப்பார்கள்..அது இங்கு இல்லை)


 


இதுபோலவே அடுத்தடுத்து ரிஸ்க் எடுக்க எந்த இயக்குனரும் முன் வரவில்லையா என்று யோசித்தப்போது.கேபி சாரின் ஸ்கூலில் இருந்து வந்த அவர் அஸிஸ்டெண்ட் சரணின் டைரக்‌ஷனில் வந்தப்படம்இதற்கான பதிலை டிக் அடித்து…யெஸ் என்கிறது !


 


உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனால் என்ன ? நான் லவ் செய்வேன் என்ற ஆட்டியூடுடன் ஹீரோ அஜீத் துரத்தி துரத்திக்காதலிக்கிறார் :)காதல் என்றாலே தற்கொலை செய்துக்கொள்ளும் மோட்க்கு போய் பயமுறுத்தும் பாசக்கார பணக்கார அப்பா க்ரீஷ் கர்னாட் அவர் ரெண்டாவது அடக்கமானப்பெண்ணாக மானு 


(அஸ்ஸாமிய நடிகை..பாவம் கலாஷேத்ராக்கு டான்ஸ் கத்துக்கவந்து.. தல நாயகி ) கண் மான் போலவே இருப்பதால் மானுவோ !!


 


நிச்சயதார்த்தம் முடிஞ்சப்பெண்ணுக்காக ரிஸ்க் எடுத்து அவ விரும்பின அவள் அக்காவை பார்க்க வைப்பதும்.. உன்னைப்பார்த்தப்பின்பு நான் நானாக இல்லையே எனப்பாடுவதும்..டைரக்டரும் எடுத்த பெரும் ரிஸ்க் தான் !


 


காதலை வெளிப்படுத்தாமல் துடிக்கும் ஹீரோயின்..முரட்டுத்தனமான மெக்கானிக் ஹீரோ (நோட் தி பாயிண்ட்..இவரும் தலைவர் மாதிரியே மெக்கானிங் !) அஜீத் கடைசிக்காட்சியில் அப்பாவைத்தாண்டி ஒரு உலகம் இருக்கு எனவும் ஒரு கத்தல் கத்தியவாறே (அப்பவே அப்படியா தல ந்னு கேக்கத்தோணுது).. வழக்கமான சினிமாத்தனத்தை தந்து ரசிகர்களை ஏமாற்றாமல் கைக்கோர்க்கிறார்கள் !  


இசையமைப்பாளர் பரத்வாஜ் அறிமுகமானதும் , இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நடிகர் விவேக் சொல்லி..மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டர் ஆர்டிஸ்டா அறிமுகமானதும் இந்தப்படத்தில் தான்!


 


ஒரே மெக்கானிக்..கதையில் புரட்சி என.. காதல் மன்னன் , பலருக்கு தூக்கம் கலைத்த மன்னனாக இருந்திருக்கிறான்.


 


ஒரு படத்தில் இன்ஸ்பையர் ஆகி..இன்னொரு படம் எடுக்கறது சகஜம் தானே ! 


என்ன..இப்போதெல்லாம்..கொரியன்.. ஈரானியன் பட காட்சிகள்..அந்த தீனியை தருகின்றன.!


---- சுமிதா ரமேஷ்.


 


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள்அந்தநாள் திரைப்படம்


தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளைக் கணக்கெடுத்தால், அதிலே எஸ்.பாலசந்தரும் அடங்குவார்.


பின்னாட்களில், எஸ்.பாலசந்தர் ஒரு வீணை வித்துவானாகப் புகழ் அடைந்திருந்தாலும், அவ்ர் தன்னுடைய கலைப் பயணத்தைத் துவக்கியது திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் தான். சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதற்குப் பின் சில திரைப்படங்களில், துணைப்பாத்திரங்களில் நடித்தார். ” பெண்' என்ற திரைப்படத்தில், நாயகன் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்திருந்தார். “என் கணவர், இது நிஜமா?. அவனா இவன், அவன் அமரன், நடு இரவில், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்கினார்.


இது நிஜமா என்ற திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார். [ கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்]


 


திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது இதிரைப்படங்கள், மேனாட்டுக் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தாலும். அவற்றை, தமிழ்நாட்டு  சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஒட்டி மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். இவரின்  படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், போலித்தனமான  பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல தயாரிப்பு திறனுடன்  கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.


பல படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும், அவர் இயக்கிய திரைப்படங்களில், அந்த நாள் மிக முக்கியமானது.


 


முதல் முறையாக, உலக திரைப்பட விழா, 1952ல், சென்னையில் நடந்தபோது திரைப்பட அரங்குகளிலும், தினமும் நான்கு காட்சிகள் என, பல மொழி படங்கள் திரையிடப்பட்டன. முதல் முறையாக உலக திரைப்பட விழா நடந்ததால், சென்னையில் நடந்ததால் அனைத்து தியேட்டர்களிலும், திரை உலகினர் அலை மோதினர். அந்த விழாவில்  மிகவும் பேசப்பட்ட  படங்களாக  பைசைக்கிள் திவீஸ் என்ற இத்தாலி மொழி படம், ரஷோமான் மற்றும் யாகிவாரிஷோ ஆகிய ஜப்பான் மொழி படங்கள் இரண்டும் தான் இருந்தது
ரஷோமான் படம் , இந்திய திரை உலகமே வியந்து பாராட்டிய படமாகும். இதை இயக்கியவர், உலக அளவில் பேசப்பட்ட, 'அகிரா குரஸோவா...''


 அந்த நாள் படமும் இந்த படத்தின் பாதிப்பில் உருவானது, வீணை எஸ்.பாலசந்தர். AV.மெய்யப்பச்செட்டியாரை பார்க்க வந்தார், ஏற்கனவே, பொம்மை மற்றும் கைதி திரைப்படங்களை இயக்கிவர். ரஷோமான் படத்தை, எஏ வி எம் , ஏற்கனவே ஜப்பானில் பார்த்திருந்தார், 'ரஷோமான் கதை பாணியிலேயே, நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால், ஏவி.எம்., பேனரில் எடுக்கலாம்...' என்றார், பாலசந்தர்.
கதையை கேட்டதும், ஏ வி எம்க்கும் பிடித்து போகவே, சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, சில நாட்களிலேயே, 1,000 அடி, 'பிலிம்'களில் காட்சிகளை எடுத்திருந்தார், பாலசந்தர்.
எப்போதுமே சில படங்களின் காட்சிகளை எடுத்த வரை போட்டு பார்த்து, அதில் ஏதாவது குறை இருந்தால், சரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர் ஏ வி எம்
தான் எடுத்த காட்சிகள் வரை போட்டு காட்டினார், பாலசந்தர். காட்சிகளை பார்த்தவர், 'நீங்கள் எடுத்த காட்சிகள் முழுவதையும் மீண்டும் படம் பிடிக்க வேண்டும். ஏனென்றால், என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, இப்போது பார்த்த காட்சிகளில் இல்லை. மேலும், நீங்கள் மிகவும் நம்பிய நடிகர், கல்கத்தா விஸ்வநாதனின் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை...' என்றார், தந்தை.
'ஒரு சிறந்த வங்காள நடிகர். மேடையிலும், திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உண்டு...' என்று வாதிட்டார், பாலசந்தர்.


(இவர்தான்   பாலு மகேந்திராவின் மூடு பனி  படத்தில் பிரதாப்போத்தனுக்கு மாமாவாக நடித்தவர்)
என் தந்தை யோசித்து சொல்வதாக கூறி, இரண்டு நாட்கள் கழித்து, 'சிவாஜி கணேசனை நாயகனாக போட்டு எடுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் சொன்ன கதை போல, படம் நன்றாக அமையும்... மேலும், ஜாவர் சீதாராமனை வைத்து கதையில் சிறிய மாற்றத்தை செய்யுங்கள்...' என்றார்.
அவ்வாறே வேண்டிய மாற்றங்களை உடனே செய்து படமாக்கினார், பாலசந்தர். முதலில் அந்த படத்துக்கு, ஒருநாள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின், ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, சிவாஜிகணேசன் நடித்தபோது, அந்த நாள் என்று பெயர் சூட்டப்பட்டது.
அன்றைய சினிமாவில் பாடல்கள் இல்லாமல், திரைப்படம் எடுப்பது மிகவும் அரிது. பாடல்களே இல்லாமல் உருவான, அந்த நாள் ஒளி அமைப்பிலும், கேமரா நகர்வுகளிலும் புதிய பாதையை வகுத்தது. வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.


.படத்தைப்பற்றி


அந்த நாள் திரைப்படத்தில், மொத்தப் படமும், இரண்டு துப்பறியும்  இன்ஸ்பெக்டர்கள், நடந்த கொலையை விசாரிப்பதாகத்தான் அமைந்திருக்கும். அந்த விசாரணையின் போது, விசாரிக்கப் படும் ஒவ்வொருவர் மூலமாகவும், கதை மெல்ல மெல்ல அவிழும். கதை, முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும், குழப்பமே ஏற்படாது என்பது, திரைக்கதையின் அம்சமாகும. கதையின் பின்புலமும் சுவாரஸ்யமானது. இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், எதிரி நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. வில்லன பாத்திரம் போல தோன்றினாலும் சிவாஜிகணேசன் மிகஅனயாசமாக நடித்திருந்தார்  ஒரு க்ளாசிக் படம் என்றாலும், இத்திரைப்படம் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது.


சி.ஐ.டியாக வரும், ஜாவர் சீதாராமன், அழுத்தமான குரல் உச்சரிப்பு இந்த படத்திற்கு மிக பிளஸ் பாயிண்ட் என சொல்லாம் லாஜிக்காக வசனம் பேசி, துப்புத் துலக்குவது, பார்க்க சுவாரசியமாக இருக்கும்.


திரைப்படக்குறிப்புகள்


1954 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நாள்  திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 


 


மற்றும் பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.


இன்னொரு முக்கிய நடிகர் ஜாவர் சீதாராமன் ஆவார்


 


இவரைப்பற்றி அனைவரும் அறிவார்கள் தமிழ் நாவலாசிரியர்


அவர் எழுதிய திகில் கதைகளான  மின்னல் மழை ,மோகினி மற்றும உடல், பொருள் ஆனந்தி குமுதம் வார இதழில தொடராக வந்து திகிலுட்டி சக்கைப்போடு போட்டன.


ஜாக்சன் துரைனா இவர் ஞாபகம் வரமால் போகாது


வீரபாண்டய கட்ட பொம்மன் படத்தில் நடிகர் திலகத்துடன் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் மறக்க இயலாது


பட்டினத்தில் பூதத்தில் இவர் தான் கதாநாயகன் என சொல்லலாம் ஜீ பூம்பா இவர்தான்


இவர்களைத்தவிர பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.. .


இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு என சொல்வார்கள் . இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை


தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள் நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது, சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம் `அந்த நாள்.' சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட `பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு' என்று மட்டும்தான் காட்டப்படும். மேலும், `அந்த நாள்'தான் நோயிர் (noir) என்று அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்இயக்குனர்சுந்தரம் பாலச்சந்தர்தயாரிப்பாளர்ஏ வி எம்கதைஜாவர் சீதாராமன்இசையமைப்புஏ வி எம் இசைக்குழுநடிப்புசிவாஜி கணேசன்
பண்டரிபாய்ஒளிப்பதிவுமாருதி ராவ்படத்தொகுப்புஎஸ். சூரியாவெளியீடு1954கால நீளம்130 நிமிடங்கள்நாடுஇந்தியாமொழிதமிழ்படத்தைப்பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்


https://youtu.be/6XHWa7vfTl4


உங்களுக்கு நேரமிருந்தால் திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம்


-------umakanthFeatured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...