Sunday, July 31, 2022

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்

 : வரலாற்றில் இன்று - ஜூலை 31, 1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன்நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக்கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். 

தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.. கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31,

  .: இன்று திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31, 1954 - ஜூன் 15, 2013) மணிவண்ணன் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.

. சினிமாவில் தீவிரமாக இயங்கிக்கொண்டே அரசியல் இயக்கங்களிலும் பங்கேற்றுவந்தவர் மணிவண்ணன். தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தவர் பிறகு மார்க்சியம். தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு ஆகிய அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தார். 

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார். பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகக் கலை அம்சத்துடன் முற்போக்குக் கருத்துகளைக் கதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் பொருத்தினார். தான் எழுதிய, இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் நடிகராக நடித்த படங்களிலும் சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்களை முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவை வழியாக நுழைக்கும் திறமையும் சாதுரியமும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

செய்குத்தம்பி பாவலர் பிறந்த தினம் இன்று.

  ஜூலை 31, வரலாற்றில் இன்று.

செய்குத்தம்பி பாவலர் பிறந்த தினம் இன்று.

சதாவதானி செய்குத்தம்பி பாவலர்(ஜூலை31, 1874 - பெப்ரவரி 13, 1950) தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

1950 பிப்ரவரி 13-இல் பாவலர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். "

இந்திய அரசால் 31, டிசம்பர், 2008 அன்று இவரது நினைவாகச் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை

 :


ஜூலை 31, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட நாள் இன்று 

1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது.

1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன் முதல் செல்போன் மூலம் பேசி தொடங்கி வைத்தார். மோதி - டெல்ஸ்ரா என்கிற இந்திய ஆஸ்திரேலிய கூட்டு வர்த்தக நிறுவனம் இந்த சேவையை வழங்கியது. என்றாலும் அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது


மாவீரன் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்ட தினம்

 ஜூலை 31 - வரலாற்றில் இன்று - 1919ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயரை சுட்டுக் கொள்வதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காக காத்திருந்து 1940ம் ஆண்டு தனது லட்சியத்தை நிறைவேற்றிய மாவீரன் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று –ஜூலை 31, 1940.அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்."இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"

என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதரம் கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா கந்தசாமி

  சாகித்ய அகாடமி விருதுபெற்ற புகழ்பெற்ற  எழுத்தாளர் சா கந்தசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஜூலை 31,  2020.  சா.கந்தசாமி 1940 ஜூலை 23 அன்று பிறந்தவர். அவருடைய 15-வது வயதில் 1955-ல் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். பள்ளி நாட்களிலேயே வாசிப்பு வேட்கை அவரிடம் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறது. சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர் சா. கந்தசாமி. 1940-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர். சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது. சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். எப்போதும் சோராது துடிப்புடன் ஏதாவது ஒரு செயல் திட்டத்தை மேற்கொண்டிருப்பார்.உடல்நலம் குன்றியிருந்த கடைசி நாட்களிலும்கூட ரயில் கதைகளைத் தொகுக்கும் பணியை முடித்து சாகித்ய அகாடமி வசம் ஒப்படைத்திருக்கிறார். காலத்தைச் செதுக்கிய கலைஞன் சா.கந்தசாமிமுன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம் இந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம் இன்று (ஜூலை 31). உத்தரப் பிரதேச மாநிலத்தில் பனாரஸ் அருகே லம்ஹி கிராமத்தில் (1880) பிறந்தார். துனியா கா அன்மோல் ரதன்’ என்ற இவரது முதல் சிறுகதை 1907-ல் வெளியானது. தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன. உருதுவிலும், பிறகு இந்தியிலும் எழுதினார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசு வேலையைத் துறந்தார். முழு மூச்சாக இலக்கியப் பணியில் இறங்கினார்.பனிரெண்டுக்கும் மேற்பட்ட புதினங்கள், இருநூற்று ஐம்பது சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் என்று சாம்ராட் பட்டத்திற்கு தகுதியானவர்தான் பிரேம்சந்த். பிரேம்சந்தின் காலம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், கோகலே, திலகர் அதன்  காந்தி என்று பல்வேறு தலைவர்கள் நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய காலம். அது பிரேம்சந்தின் படைப்புகளிலும் காணலாம். சுதந்திர போராட்டம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமை என்ற கருத்துக்கள் இவர் படைப்புகளில் விரவி இருப்பதை நாம் காணலாம். தமிழகத்தில் பாரதி போன்று ஹிந்தி மற்றும் உருது மொழியில் ஒரு புது பாதையைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை முன்ஷி பிரேம்சந்த்

 அவர்களையே சாரும். சேவா சதன், நிர்மலா, கோதான், கர்மபூமி என்பவை இவரின் முக்கியமான சில படைப்புகள், இவரது பல புத்தகங்கள் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1936ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் பிரேம்சந்த் காலமானார்.


Friday, July 29, 2022

கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினம்

 


ஜூலை 29, 

கலைத் தந்தை என்று போற்றப்பட்டவரும், கல்வியாளருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினம் இன்று(1974).

l சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். குடும்பம் இலங்கையில் துணி வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. கொழும்பு புனித தாமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையில் தமிழர்களுக்கு அடையாள சூடு போடும் வழக்கத்தை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தவர். இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக ஒரு பத்திரிகை நடத்தினார்.

l இந்தியா திரும்பியவர், காங்கிரஸில் 1917-ல் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார். மதுரையில் 1925-ல் மீனாட்சி மில் நிறுவனத்தைத் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலையையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

l மீனாட்சி ஆலையின் ஆரம்பகால இயக்குநர்களாக தேசியத் தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வந்தபோது இவரது விருந்தினர்களாகத் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

l நலிந்த ஆலைகளை ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெற்றிகரமாக நடத்தியவர். இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தொழிலாளர்கள், இதர ஆலை முதலாளிகள் மத்தியில் பெருமதிப்பும் மரியாதையும் பெற்றவர். ஆலைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

l ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கி கல்விப் பணியாற்றினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழை பல ஆண்டுகள் நடத்தினார். இவர் கட்டிடக் கலைஞரும்கூட. இசை, ஓவியம், குதிரைச் சவாரியிலும் ஆர்வம் உள்ளவர். தினமும் திருவாசகம் ஓதும் வழக்கம் கொண்டவர்.

l மத்திய அரசின் கட்டாய இந்திக் கல்வி திட்டத்தை எதிர்த்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய சோமசுந்தர பாரதியார், பெரியார் போன்றோருக்கு உறுதுணையாக இருந்தார்.

l 14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81 வயதில் (1974) மறைந்தார்.பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம்

 ஜூலை 29,


தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று. ஜூலை 29, 1890

தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் , திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார்.

தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார். குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத் தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார். புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 40 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி. மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும் எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார்.

ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை,திருவையாறில் , தொடர்ந்து திருக்குறள் வகுப்பு நடத்தினார். எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாட்களைக் கடத்தினார்.ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவு நாள்

 


ஜூலை 29, 1891

இன்று ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவு நாள்

ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா என்கிற ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (Ishwar Chandra Vidyasagar, செப்டம்பர் 26, 1820 - சூலை 29, 1891) என்பவர் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மேட்னிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் செப்டம்பர் 26, 1820 ஆம் ஆண்டு பிறந்தார். 1839 ஆம் ஆண்டில் இந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841 ஆம் ஆண்டில் “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சமஸ்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமஸ்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது. இவர் வங்காள மொழியில் 30 நூல்களும், சமற்கிருதத்தில் 17 நூல்களும், ஆங்கிலத்தில் 5 நூல்களும் என மொத்தம் 52 நூல்களை எழுதியிருக்கிறார். “விதவா விவாஹ்”, “பிரந்தி விலாஸ்”, “அக்யான் மஞ்சரி”, “சிதார் பான்பாஸ்”, “பீட்டல் பஞ்ச்வின் சாடி”, “வியாக்ரன் கௌமுதி”, “ஹிஸ்டரி ஆஃப் பெங்கால்”, “ஜீவன் சரித்”, “போதோதயா” என்கிற நூல்கள் இவர் எழுதியவற்றுள் மிகவும் சிறப்பு பெற்றவை.

• 1864 ஆம் ஆண்டில் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் சிறப்பு உறுப்பினராக ஆனார்.

• 1880 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசியார் இவருக்கு சி. ஐ. ஈ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற இவரது முற்போக்கு எண்ணத்தினால் 35 பெண்கள் பள்ளிகளை நிறுவினார்.

இவர் மேற்கு வங்காள மாநிலம், கல்கத்தா நகரில் 29-07-1891 ஆம் நாளில் மரணமடைந்தார்.

உலக புலிகள் நாள்


 ஜூலை 29 - உலக புலிகள் நாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 3200 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 3 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1,706 புலிகள் உள்ளன. அடுத்ததாக, மலேசியாவில் 500 புலிகள் காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் காடுகளின் வளம் குறையும்..

தொழிற்துறை ஜாம்பவான் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம்

 ஜூலை 29, 


தொழிற்துறை ஜாம்பவான் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம் இன்று

ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா.

இளம் வயதில் பிரான்ஸ் தேசத்தில் இருந்த பொழுது விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். அவர் இந்தியாவின் முதல் விமானி ஆனார் . டாடா நிறுவனத்தில் தலைமைப்பொறுப்புக்கு வந்த பின்னர் அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது.

.

இன்றைக்கு தொழில்துறையில் கலக்கும் டி.சி.எஸ்.டைட்டன் ,டாடா மோட்டார்ஸ் எல்லாமும் இவரின் கனவுக்குழந்தைகளே. இன்றைய இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி டாடாவில் தான் வேலை பார்த்தார். அவர் டாட்டாவை விட்டுக்கிளம்பும் பொழுது ஜே.ஆர்.டி. அவரை அழைத்தார் ,"சுதா !சமூகம் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதனால் நாம் பலனடைந்து இருக்கிறோம் அதை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். " என்றார் அதன் தாக்கத்தில் தான் இன்போசிஸ் அறக்கட்டளை எழுந்தது.

தன்னுடைய பெயரில் ஒரு சொத்தைக்கொண்டு இறுதிவரை அவர் கொண்டிருக்கவில்லை. வீட்டைக்கூட தன்னுடைய பெயரில் பதிவு செய்து கொள்ளாத எளிமை அவரிடம் இருந்தது.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் தான் அவரின் சிந்தனை பாய்ந்த விண்ணை போல போல நம் தேசத்தின் எல்லாரின் சிந்தையிலும் வியாபித்து இருக்கவேண்டும் -அந்த வரிகள்

-”இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம் ;இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும் !”என்ற அவரின் பிறந்த தினம் இன்று.

சிற்பி பாலசுப்ரமணியம் பிறந்த தினம் இன்

 


இன்று ஜூலை 29, 1936  தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம்  பிறந்த தினம் இன்று 

சிற்பி பாலசுப்பிரமணியம்  கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர் ஆவார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய சிற்பி பாலசுப்ரமணியம், இன்று 86 வயதை நிறைவு செய்கிறார்.

அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ்

 அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ்மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட 

வேண்டும்.. 

அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை’ விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்?


இன்னும் அவரது முத்திரைப் பாடல்களான நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பால் வண்ணம் பருவம் கண்டு, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, பார்த்தேன் சிரித்தேன், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்…..எதைத் தான் விட முடியும்?


கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் மூவர் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.


இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை…இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற பாடலை

பி பி எஸ் வழங்கியது யாராலும்

மறக்க முடியாது. 


மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்….கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும்


தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.


அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக இருக்கும்….சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.


அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று  நினைக்கும்போது  இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது…..


வணக்கம் பி பி எஸ்…..எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் – தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என உங்கள் குரல் ஒலித்த அத்தனை மொழிகளிலும்….

ஒரே ஹெட்செட்டில் கேட்ட இசை/-அகதா-


 ஒரே ஹெட்செட்டில் கேட்ட இசை


ஒரே குடையுள் அன்பின் மழை
கோப உதடுகளில் முதல் முத்தம்
முதலில் பரிசளித்த புத்தகம்
ஒன்றாக உண்ட ஐஸ் கிரீம்
மாற்றி மாற்றி அருந்திய ஒற்றைத் தேநீர்
இப்படி ஏதேனும் ஒன்று உன் நினைவைத் திறக்கும் சாவியாகிப் போகிறது எனக்கு
நீ மட்டும் நினைவின் பேழையைப் பூட்டிவைத்துவிட்டு சாவியையும் தொலைத்துவிட்டதுபோலவே நடந்துகொள்கிறாய்-அகதா-

Sex இல்லாத ஆண் நட்பு

 


Sex இல்லாத ஆண் நட்பு கிடைக்குமா என ஒரு குழுவில் பெண் கேடிருந்தார். அதற்கு பலர் அப்படி வாய்ப்பில்லை என சொல்லி இருக்கின்றனர்.

என்னைப்பொறுத்தவரை சின்ன சின்ன சீண்டல், கேலி எல்லா ஆண்,பெண் நட்பிலும் இருக்கும்.
அட்கனக்ட் ஆகட்டும்,பொது வேலைகள் ஆகட்டும் பல நேரங்களில் நான் மட்டும் பெண்ணாக இருப்பேன். அப்போ எனக்கு எந்த ஜெண்டர் வித்தியாசமும் தெரிந்ததில்லை.
பெரும்பாலும் சின்ன வயதில் இருந்து என்னை சக மனுஷியாக அணுகியவர்தான் பலர். பெண்ணாக கவனித்தவர்கள் மிகச்சிலரே. அவர்களில் சிலர் நெருக்கமாய் வர நினைத்தாலும் அடுத்தக்கட்டம் செல்ல சமூகத்தடைகள், மனத்தடைகள் மீறி செல்வது கடினம்தான்.
அப்படி இருக்கும் பொழுது ஆண், பெண் நட்பை அசிங்கப்படுத்துவது என செக்ஸை நான் சொல்ல மாட்டேன். அது மகிழ்வான இருப்பட்டவரின் தனிப்பட்ட விஷயம். அதில் இன்னொரு துணையின் மனக்காயம் சேர்ந்து இருப்பதால் மிக மிக கவனமாய் இருக்க வேண்டிய விஷயம்.
எனக்கு குறைந்தப்பட்சம் ஆயிரமாவது தூரத்து ஃப்ரெண்ட் என சொல்லும் ஆண் நட்புகளாவது இருக்கலாம். இதில் 20 பேர் நல்ல தொடர்பில் இருக்கலாம். 10 பேர் வேலைகளில், பர்சனலில் தினம் பயணிக்கலாம்.
இப்போ நான் இவர்களிடம் பேசுவது எல்லாம் பூதக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால். என்னாகும் நிலைமை?
யாரும் மனைவி, குடும்பம் தவிர சக பெண்களிடம் பழகவே அச்சப்படுவர்.
பிசினஸ் உலகில் பெண்கள் இருந்தாலும் அவர்களின் முதலிட்டு அளவு 3% க்கு குறைவுதான். 97% ஆண்கள் இருக்கும் நிலை. அங்கு இருக்கும் பெண்களிடம் பழகினால் கெட்டப்பெயர் வருமெனில் ஆண்களும் ஒதுங்குவர்.
டைவர்ஸ் ஆனப்பிறகு பல கணவர்கள் எடுக்கும் ஆயுதம் இது..ஏன் வேலைக்கு செல்லும் மனைவியை முடக்கவும் இதை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.. அதனால் ஆண்கள் பெண்களுக்கு உதவி செய்யத்தயங்குகின்றனர்.
ஒரு ஆண் ஊரைவிட்டுப்போய் நண்பணோடு தங்கி வேலைத்தேடி முன்னேற முடியும். பெண் வேலைக்கிடைத்தால்தான் தெருவையே தாண்ட முடியும்.
அவளுக்கும் நெட் வொர்க்கிங் மிக அவசியம் இப்போ ஸ்டார்ட் அப் தமிழ் நாடு நிகழ்வில் ஐம்பது பெண்கள் கலந்துக்கொள்கிறோம். ஆண்களை நட்பு செய்து, நெட்வொர்க்கிங் செய்துதான் பிசினஸ் அடுத்தக்கட்டம் கொண்டு செல்ல வேண்டும் ஆண்களுக்கும் பிசினசில் நம்பிக்கையான, கூட வரும் பார்ட்னர்களாக பெண்கள் இருப்பார்கள். இடைவெளிகளை அவரவர் நிர்மாணிக்கட்டும். ஆண், பெண் பழகுதல் பிசினஸ் சமூகத்துக்கு கூடுதல் அவசியம்
இதல்லாம் படிக்கும் பொழுது இப்ப ஒரு எண்ணம் ஓடலாம். அதை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றும் பொழுதுதான் முன்னேறுவோம்.
தமிழ் நாடு, இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற பெண் முன்னேற்றம் அவசியம்
அதற்கு ஆண், பெண் நட்பை கொச்சைப்படுத்தவே கூடாது.
முக்கியமாய் பெண்கள்.
எதற்காகவும் இன்னொருப்பெண் பற்றி Gossip பேச மாட்டோம் என்று முடிவெடுங்கள்.
ஆண்களையும் சேர்த்தே நாம் இந்தப்பேச்சுகளால் முடக்குகிறோம். அவனும் எதற்கு வம்பு என நமக்கு வாய்ப்புகள் தருவதில்லை. ஏன் அவர்களுக்கும் வாய்ப்புகள் போகிறது
எனவே எக்காரணம் கொண்டும், ஆண் அப்படிதான், பெண்ணை காமக்கண்ணோடு பார்ப்பான் என்ற ஸ்ட்ரியோ டைப்பில் இருந்து வெளிவாருங்கள் .
உலக அழகியாக இருப்பினும் பிடிக்காவிடில் காமம் மூளையில் துளியும் சுரக்காது..காமம் என்பது தலைக்குள் இருக்கு..கால்களுக்கு இடையில் இல்லை.
எனவே பார்க்கும் பெண், பழகும் பெண் எல்லாம் ஆண்களுக்கு காமம் ஏற்படுத்துவள் எனச்சொன்னால் அதை விட ஆணுக்கு பெரும் அநிதி இல்லை.
பெண்ணுக்கு எப்பவும் நடப்பதுதான்.
குடும்பங்களும் இதனால் பல சிக்கல்களுக்கு உள்ளாகிறது.
ஆண் ,பெண் நட்பை நார்மலைஸ் ஆக்குவோம்.
நாம் அன்பை செலுத்தும் ஆண் இன்னொரு பெண்ணுடன் போக துணிந்தால் துணிந்து பை சொல்லுங்க. சந்தேகப்பட்டு வாழ்வை தொலைக்க வேண்டாம்.
நிம்மதியா இருப்போம்
அதான் வாழ்க்கை.

Kirthika Tharan (கீர்த்தி)Thursday, July 28, 2022

உலகையே வியக்கவைத்த தமிழன் லிடியன் நாதஸ்வரம்..?*

 


*இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?*

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கிறது


தொடக்க விழாவில் நடந்த கலைநிகழ்ச்சிகளில், தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், ஒரே சமயத்தில் இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து அரங்கில் குழுமியிருந்த வெளிநாட்டினரை வியப்பில் ஆழ்த்தினார். இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டும் இசையமைத்து அசத்தினார்.


இன்று உலகமே வியந்து பார்க்கும் லிடியன் நாதஸ்வரம், ஏற்கனவே உலகை வியக்கவைத்தவர். யார் இந்த லிடியன் நாதஸ்வரம் என்று பார்ப்போம்.


தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷ் என்பவரின் மகன் தான் லிடியன். இசை குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே அவருக்கு இசை வந்தது. தனது 2வது வயதிலேயே சைலஃபோனை வாசிக்க ஆரம்பித்த லிடியனின் இசை திறமையை பார்த்த அவரது தந்தை அவருக்கு இசை கருவிகளை வாங்கி கொடுத்து வாசிக்க வைத்துள்ளார்.


சென்னையில் பிரபல பியானோ இசை கலைஞர் அகஸ்டியனிடம் முறையாக பியானோ கற்ற லிடியன், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தார். The World's Best என்ற சர்வதேச அளவிலான போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்ததுடன், இரு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து அசத்தினார். ஒரு நிமிடத்தில் 325 பீட்களை வாசித்து சாதனை படைத்தார்.


உலகையே தனது இசையால் வியக்கவும் மகிழவும் வைத்துவரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையே வியக்கவைத்தார் இந்த சிறுவன் லிடியன். அவருக்கு சென்னையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கனவே உலகை வியக்கவைத்த லிடியன் நாதஸ்வரம், இப்போது மீண்டும் சர்வதேசத்தை வியக்கவைத்துள்ளார். 

*மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!*

 


*மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!*


சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 தொடங்கியுள்ள இந்த இனிய வேளையில், இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் என போற்றப்படும் மனுவேல் ஆரோன் குறித்து பார்ப்போம். சதுரங்க விளையாட்டில் அவரது அசாத்திய சாதனைகள் படைத்த அவர், மாடர்ன் டே சர்வதேச செஸ் விளையாட்டு நடைமுறைகளை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜாம்பவான் எனவும் அறியப்படுகிறார்.


இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் லேட்டஸ்ட் சென்சேஷனாக இருப்பவர் பிரக்ஞானந்தா. ஆனால், இவர்கள் அனைவருக்கும் முன்னவராக இந்தியா சார்பில் சர்வதேச அளவில் சாதித்தவர்தான் மனுவேல் ஆரோன். சர்வதேச மாஸ்டர் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) என்ற பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.


20-ம் நூற்றாண்டில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 64 கட்டங்களில் தனது ஆட்சியை நிறுவியவர் மனுவேல் ஆரோன். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் யூவே, ஹங்கேரி வீரர் லாஜோஸ் போர்டிஷ், ஜெர்மன் வீரர் வூல்ஃப்கேங் உல்மன் போன்ற பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இவர் விளையாடிய போட்டிகள் புகழ்பெற்றதாக அறியப்படுகிறது.


செஸ் விளையாட்டு அறிமுகம்: இன்றைய மியான்மரின் (அப்போது பர்மா) காலனி ஒன்றில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியர்களுக்கு மகனாக கடந்த 1935, டிசம்பர் 30 அன்று பிறந்தவர் ஆரோன். எட்டு வயதில் அவருக்கு செஸ் விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. இந்த விளையாட்டின் நுணுக்கங்களை தனது வீட்டில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து கற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது குடும்பம் தமிழகத்தில் குடியேறி உள்ளது. அவரது பள்ளிக்கல்வியை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பயின்றுள்ளார். அலகாபாத் கல்லூரியில் மேற்படிப்பு பயின்றுள்ளார். அங்குதான் முதன்முதலில் செஸ் டோர்னமென்டில் விளையாடி உள்ளார். ஆனால் இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக வெவ்வேறு தொடர்களில் பங்கேற்று அசத்தியுள்ளார்.


செஸ் விளையாட்டில் ஆதிக்கம்: 1950-களின் இடைப்பகுதியில் இருந்து 1970-களின் இறுதி வரையில் செஸ் விளையாட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். குறிப்பாக 1957 தொடங்கி 1982 வரையில் நடைபெற்ற தமிழ்நாடு செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதேபோல 1959 முதல் 1981 வரையில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதனால், தமிழகம் இந்த செஸ் விளையாட்டின் பவர் ஹவுஸாக உருவானது.


தேசிய அளவோடு நின்று விடாமல் சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார் ஆரோன். குறிப்பாக மேக்ஸ் யூவே, லாஜோஸ் போர்டிஷ், வூல்ஃப்கேங் உல்மன், பாபி பிஷ்ஷர், போட்வைனிக் போன்ற சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் விளையாடி உள்ளார். இதில் மேக்ஸ் யூவேவை தவிர மற்ற அனைவரும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக 1962 வாக்கில் அவர் அர்ஜுனா விருதை வென்றார். செஸ் விளையாட்டில் இந்த உயரிய விருதை பெற்ற முதல் நபர். இந்திய அணியை இரண்டு செஸ் ஒலிம்பியாடில் கேப்டனாக வழி நடத்தியுள்ளார். மொத்தம் மூன்று ஒலிம்பியாடில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.


இந்திய பங்களிப்பு: செஸ் விளையாடியதோடு நின்று விடாமல் இந்தியாவில் சர்வதே செஸ் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட ஆட்டத்தை பிரபலப்படுத்தியவர். அதற்காக நிறைய முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதற்காக நிறைய செஸ் குழுக்களை சர்வதேச தரத்தில் அவர் அமைத்துள்ளார். அது தவிர தமிழ்நாடு செஸ் சங்கத்தின் செயலாளர், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவராகவும் இயங்கியுள்ளார். சதுரங்கம் குறித்த செய்திகளை வழங்கும் ‘செஸ் மேட்’ எனும் இதழை நிறுவியவர்.செஸ் வீரர், பயிற்சியாளர் மற்றும் பத்திரிகையாளர் என மூன்று விதமான பரிமாணங்களை தான் சார்ந்த விளையாட்டில் இயங்கியவர். இந்திய செஸ் விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்த காரணமாக திகழ்ந்தவர். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இவருடைய மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


“தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது சிறப்பானது. இது சாத்தியமாகும் என நான் நினைக்கவில்லை. உலக அளவில் நடைபெறும் சூழல்கள் இது இந்தியாவில் நடக்க காரணமாக அமைந்துள்ளது” என செஸ் ஒலிம்பியாட் 2022 குறித்து தெரிவித்துள்ளார் 86 வயதான மனுவேல் ஆரோன். தன்னை துடிப்போடு இயங்க செய்வது சதுரங்கம் தான் என அவரே தெரிவித்துள்ளார்.

நினைவில் நிற்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’
நினைவில் நிற்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’
சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. 54 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலாகித்து ட்ரெண்டிங் உருவாக்கி மகிழ்கிறார்கள். இச்சூழலில் இந்த தில்லானா மோகனாம்பாள் குறித்து நம் கட்டிங் கண்ணையா ஆந்தை ரிப்போர்ட்டர்-ரில் வழங்கிய சிறப்புக் கட்டுரை இதோ:
1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக் கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். நிஜம்தானே.. இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
நாதசுர வித்துவான் சிக்கல் சண்முகவடிவேலுவாக சிவாஜி கணேசனும், நடன நங்கை மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டினர். தில்லானா மோகனாம்பாள் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இப்படம், ஆங்கில விளக்க உரையுடன் மேல் நாட்டில் திரையிடப்பட்டது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இந்தப் படத்தின் பிரதியை வாங்கிச்சென்று நாதஸ்வரம், பரதம் ஆகிய கலைகளைப்பற்றி தங்களது மாணவர்களுக்கு விளக்கப்படுத்தி வந்தது.
கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதாநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர். ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.
இப்பேர்ப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதி வந்தார்.ஆனந்த விகடனில், இரண்டு வருடங்கள் தொடராக வந்த கதை. அந்த இரண்டு வருடங்களும், புத்தகத்தை கையில் வாங்கியதும், இந்தத் தொடரைப் படித்துவிட்டுத்தான் அடுத்த பக்கங்களுக்குத் தாவுவார்கள் . வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்து விட்டுப் போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும் தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம்.சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.
தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்த நல்லூர் ஜெய லட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள். எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை.
அதே சமயம் தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார்.ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார். வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்து விட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவார் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார்.
உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.
ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது..
கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான்.
அடுத்து கதாநாயகி? ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதா நாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப் படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.
சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.
நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.அதேபோல மோகனாவுடன்மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே..
இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.
வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை.
சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.
நாதஸ்வர இசைக்காக அவர் மனதில் வைத்திருந்த நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர்.
நாட்டியப்பேரொளி பத்மினிக்கு நடன மங்கை மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்க தெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா? இதற்காக எம்பிஎன் சகோதரர்களே நேரடியாய் தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்குமாத ரிகர்சில் பங்கேற்றனர். நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன் விளக்கிக் காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு, ஆஹா மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள்.
தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழியை பார்த்து அப்படி உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான்.
நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியே சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய்மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது,தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’ பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள்.
நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம்.அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி, நலந்தானா பாடலை வரிக்குவரி அலசினால் அண்ணாவின் உடல்நலத்தை பற்றி கண்ணதாசன் உருகிஉருகி விசாரிப்பது தெரிய வரும்.
திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது.அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும் உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள். அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு.. கட்ட்
தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது..தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார்.
அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டு போனகாலமெல்லாம் உண்டு.பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார்.சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும்.. (ஆந்தை ரிப்போர்ட்டர்)
தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான். நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும்.ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர், படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்?
நாகேஷ் இப்படி என்றால் ஆச்சி மனோரமா சும்மாவிடுவாரா? ஜில் ஜில் ரமாமணி என்ற பாத்திரத்தை அவர் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாவே மாற்றிவிட்டார். இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிக்க முதலில் மறுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். புக் செய்தவற்காக டைரக்டர் ஏபிஎன் அணுகியபோது, சிவாஜி, பத்மினி பாலையா நாகேஷ், சிகே சரஸ்வதி அதற்கப்புறம் பெரிய பட்டாளமே இருக்கும்போது, படத்தில் எனக்கென்ன முக்கியத்துவம் வந்துவிடப்போகிறது என்று சொல்லி தவிர்த்தார்.
ஆனால் ஏபிஎன் விடவில்லை. ‘’மோகனாவுக்கு ஆடத்தெரியும், சண்முக சுந்தரத்திற்கு வாசிக்க தெரியும். ஆனால் படத்தில் நடனம், பாட்டு, நாடகம் என சகலமும் தெரிந்த கேரக்டர் என்றால், அது உன்னுடைய ஜில்ஜில் ரமாமணிமட்டுந்தான். இந்த கேரக்டர் உன்னை காலாகாலத்திற்கும் பேசவைக்கும் என்று சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டார்.
ஏபி நாகராஜன் சொன்னபடியே ஜில்ஜில் ரமாமணி கேரக்டர்.. அதை விவரிப்பது என்பது தங்கக்குடத்திற்கு பொட்டு வைத்துதான் அழகு பார்க்கவேண்டுமா என்பது மாதிரி.. நொந்துபோன பாத்திரமாய் சிரிக்கவைத்துக்கொண்டே வரும் மனோரமா, தவறான தகவல் அடிப்படையில் பிரிந்து நிற்கும் காதலர்களான மோகனாவையும் சண்முகசுந்தரத்தையும் சேர்த்துவைக்கும்போது, அவர்கள் இருவரையும் மட்டும் அல்ல ரசிகர்களையும் உருகவைத்துவிடுவார். அதுதான் ஆச்சி மனோரமா..
இப்படி அப்படத்தில் வரும் ஏவி எம் தொடங்கி ஒவ்வொருவரையும் பாராட்ட தனித் தனி தளமே வேண்டும்.. அச்சுழலில் 1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.

இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? ‘மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார் நீங்களே பாருங்களேன்
courtesy
 From The Desk of கட்டிங் கண்ணையா!

திமுகவின் முதல் தலைவராக 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி கலைஞர் கருணாநிதிபதவியேற்றார்

 


திமுகவின் முதல் தலைவராக 1969 ஆம் ஆண்டு இதே ஜூலை 27 ம் தேதிதான் பொறுப்பேற்றார் கலைஞர் கருணாநிதி.

ஆம்.. திமுகவை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
இதையடுத்து, கட்சிக்குள் நிலவி வந்த சில குழப்பங்கள் சரி செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கருணாநிதி, திமுக-வின் தலைவராக பதவியேற்றார்

ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார் பிறந்த நாள்

 


ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார் பிறந்த நாள் இன்று 28 ஜூலை

சில அரியமனிதர்கள் தாங்கள் தோற்றுவிக்கும் நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள்... ஆனால், நிறுவனமே அவர்தான்... அவர்தான் நிறுவனம்... அப்படிப்பட்ட புகழ் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது... அந்த அரிய மனிதர்தான் ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.

இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.

இக்குழுமம் சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் அவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்

 


உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.