பாசிப்பருப்பு அல்வா!

 பாசிப்பருப்பு அல்வா!


இன்று மார்கழி முதல் நாள். விடியலில், வாசலில் வண்ணக் கோலமிட்டு, பூஜை அறையெங்கும் தூப தீபங்கள் கமழ, திருப்பாவை ஒலிக்க அந்த மாதவனை வரவேற்கும் மறக்கமுடியாத இன்பத்திருநாள். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்தக் கண்ணனே விரும்பிச் சொன்ன காலமானதால் அந்த நாளில் சுவையும் அநேக சத்துகளும் கொண்ட இந்த வித்தியாசமான பாசிப்பருப்பு அல்வாவைச் செய்து கண்ணனுக்குப் படைத்து, சுவைத்து மகிழ்வோம். தேவையான பொருள்கள்:- தோல் நீக்கி உடைத்த பாசிப்பருப்பு - ஒரு கப் நெய் - அரை கப் சர்க்கரை - ஒன்றரை கப் கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் - 2 கப் முந்திரி, திராட்சை, பாதாம் போன்ற உலர் பழங்கள் அல்லது விதைகள் - தலா 10 செய்முறை:- முதலில் பாசிப்பருப்பைச் சுத்தம் செய்து இரண்டு கப் நீரில் வேகவைத்து எடுக்கவும். நீரை வடித்துவிட்டு மீண்டும் நீரில் அலசி சுத்தமாக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் பருப்பைச் சேர்த்துக் கிளறவும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டுக் கிளறவும். நெய்யை வேண்டிய அளவுக்குப் பார்த்து ஊற்றவும். நன்கு சுருளக் கிளறினால் பருப்பும் நெய்யும் பிரியும் பதத்துக்கு வரும். இப்போது சர்க்கரையைச் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து பாகாக வரும்வேளையில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பக்குவத்தில் இந்த அல்வா திரண்டு வரும். நல்ல மணமும் சுவையும் பெருகிய இந்தத் தருணத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் கொண்டு இந்த அல்வாவை அலங்கரித்து ஆண்டவனுக்கு படைத்து அருள் பெறலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி