உலகத் தாய்மொழி தினம் (அறுசீர் விருத்தம்)

  உலகத் தாய்மொழி தினம்

           (அறுசீர் விருத்தம்)


                    ******













1.உயிராய் மெய்யாய் உயிர்மெய்யாய்
       உலகம் போற்றும் தமிழானாய்
   அயிலாய் மக்கள் அனைவர்க்கும்
      அனைத்து மான அமிழ்தானாய்
  எயிலாய் நின்றே எளிதாக
       இதயம் சேர்ந்த எழிலானாய்
  கயிலை நாதன் தமிழ்ச்சங்கம்
      கனிவாய் காத்தாய் தமிழே நீ.

2. இயலாய் வந்தாய இசையானாய்
        இனிதா னநா டகமானாய்
   அயலார் வந்தும் அசையாமல்
       அரிதாம் தென்றல் சுகமானாய்
   நயமாய் உன்னை நவில்வோரை
      நனிதே காக்கும் நலமானாய்
  சுயமாய் ஆற்றல் சுரங்கமாய்
      சுகுணம் தாராய் தமிழே நீ.

3. எழுத்தாய் சொல்லாய் இயைவாவாய்
       இதத்தில் நன்றாம் பொருளாவாய்
    வழுத்தும் யாப்பின் வடிவாவாய்
    வனப்பில் வாழ்த்தும் பொருள்கோளாய்
    அழுத்தும் ஆய்வில் அருளாளர்
         அளக்க மாட்டாத் தமிழே நீ.  
    அழுக்கம் நீக்க அழகாக
         அளவில் ஆற்றல் தருவாயே.

4.  உலக மொழிகள் ஒன்றாக
        உவந்தே நோக்கும் மொழியானாய்
     அலகில் பெருமை அன்றாடம்
         அரிதாய் காட்டும் அழகானாய்
   கலகம் புரிவோர் களிப்பெல்லாம்
         கரியைப் பூசும் செழிப்பானாய்
   பலவின் சுவையாய் பயில்வோரின்
       பலமாய் ஆவாய் தமிழே நீ.

5. அன்னை தந்த அமுதப்பால்
       அனைத்தும் உந்தன் வனப்பாகும்
    உன்னை எண்ணும்  உளமெல்லாம்
      உவகை பொங்கும் நினைப்பாகும்
 கன்னல் தன்னின் சுவையெல்லாம்
     கன்றிப் போகும் கருத்தேநீ
  இன்னும் இன்னும் எனக்குள்ளே
     என்றும் தங்கி இருப்பாயே.

                     ........கவிஞர் ச.பொன்மணி.

Comments

தமிழ் அன்னையின் புகழ் போற்றும் அருமையான கவிதை.

அய்யா அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துகளும் சமர்ப்பணம். நன்றி

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,