Saturday, February 20, 2021

யோகி ராம்சுரத்குமார்

 எல்லாவற்றையும் கரையேற்றும் பெயர்! - யோகி ராம்சுரத்குமார்

‘‘என் தந்தை ஒருவரே, வேறொன்றும் இல்லை... வேறு ஒருவரும் இல்லை’’ திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரின் அருள்மொழி இது.
யோகி ராம்சுரத்குமார்
பகவான் யோகி ராம்சுரத்குமார் 1918-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி கங்கைக்கரையில் உள்ள நார்தரா எனும் சிறிய கிராமத்திலே அவதரித்தார். சின்னஞ்சிறு வயதிலிருந்தே கங்கையின் மீது விவரிக்க முடியாத பற்றுதலும் பாசமும் உண்டு பகவானுக்கு.
கங்கைக்கரைக்கு வரும் ஞானிகளுடனான சந்திப்பும், அவர்களுக்கு இடையே நிகழ்ந்த விவாதங்களைச் செவிமடுத்ததால் உண்டான ஞானமும் யோகி ராம்சுரத்குமாருக்குள் ஆன்மிகத் தேடலை விதைத்தன.
இயற்பெயர் ராம்சுரத்குன்வர். அவர்களது குடும்பம் விவசாயக் குடும்பம். ராம்சுரத்குன்வருக்கோ படித்துப் பட்டம் பெறுவதில் ஆர்வம் இருந்தது. திருமணத்துக்குப் பிறகும் காசி சர்வ கலாசாலையில் படிப்பைத் தொடர்ந்து பட்டப் படிப்பு முடித்தார்.
அவரது கிராமத்திலேயே மகான் ஒருவர் இருந்தார். உள்ளூர் மக்கள் அவரிடம் சென்று ஆசியும் அறிவுரையும் பெற்றுவருவது வழக்கம்.
ஒருநாள் அவரிடம் சென்ற ராம்சுரத் குன்வர், கடவுளைப் பற்றிக் கேட்டார். ‘காசி விசுவநாதரைத் தரிசித்து வா’ என்று பதில் தந்தார் அந்த மகான். அதன்படியே காசிக்குச் சென்று விஸ்வநாதரை ஸ்பரிசித்து வணங்கினார் ராம்சுரத்குன்வர். அவருக்குள் ஆன்மிகம் குறித்தப் பெரும் மாறுதல் நடந்தது அப்போதுதான்.
பட்டப் படிப்பு ஆசிரியர் வேலையைப் பெற்றுத் தந்தது. பணிக்குச் சேர்ந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் மிகவும் சிதிலமுற்றுக் கிடந்தது.
மராமத்து செய்வதற்கு நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை. பள்ளிக் கட்டடத்தை சீர்ப்படுத்தும் வரையிலும் விடுமுறை அறிவித்தார், ராம்சுரத்குன்வர். நிர்வாகம் ஆட்சேபித்தது. ஆனாலும், முடிவில் உறுதியாக இருந்தார் ராம்சுரத்குன்வர். நிறைவில் ஊர் மக்கள் சேர்ந்து முறையிட, மக்களும் நிர்வாகமும் சேர்ந்து ஒத்துழைக்க பள்ளிக்கூட கட்டடம் பொலிவுற்றது. குறிக்கோளில் வெற்றிபெற உண்மையும், உறுதியும், முனைப்பும் தேவை என்பதை அவருக்கு உணர்த்திய சம்பவம் இது.
ஆன்மிகத் தேடல் அதிகரித்த காலத்தில், விடுமுறை நாள்களில் தென்னகம் நோக்கிக் கிளம்பினார். அவரது இலக்கு திருவண்ணாமலை. ஆனால், பாதி வழியிலேயே பணமும் ரயில் பயணச் சீட்டும் தொலைந்து போயின. ரயிலிலிருந்து இறங்கியவர் அந்த ஊரிலிருந்த பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களிடம் தனது நிலையை விளக்கி, காசு சேகரித்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். திருவண்ணாமலையில் ரமண தரிசனம் கிடைத்தது. பாண்டிச்சேரியில் அரவிந்த தரிசனமும் சூட்சுமமாகக் கிடைத்தது.
அடுத்த விடுமுறைக்கு அவர் வடக்கே சென்றிருந்தபோதுதான், ரமணரும் அரவிந்தரும் முக்தியடைந்த தகவல் கிடைத்தது அவருக்கு.
ஒரு விடுமுறைப் பயணத்தின்போதுதான், மங்களூருக்கு அருகில், `கஞ்சன்காடு’ என்ற இடத்திலிருந்த மகான் பப்பா ராம்தாஸைத் தரிசித்தார். அவரது ஆசிரமத்தில் தங்கவும் செய்தார். அங்கே அவருக்கு பப்பா ராமதாஸ் மூலம் ராம நாம உபதேசம் கிடைத்தது. சிறிது காலம் கழித்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தங்கியிருந்தது ஒரு புன்னை மரத்தடியில். ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில், `யோகி ராம்சுரத்குமார்’ என்று மாறினார்.
புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்துவிட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதைக் கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார்.
பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தைச் செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தைத் தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒருமுறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள். ``இது எப்படி சாத்தியம்..?’’ என்று கேட்டார்கள். ‘`இந்தப் பெயரைச் சொன்னால் போதும்... எல்லாவற்றையும் கரையேற்றும்’’ என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகிறவராக அவர் அறியப்பட்டார்.
அவர் கையில் எப்போதும் வெப்பத்தைத் தணிக்க ஒரு விசிறி. உணவு வாங்க ஒரு கொட்டாங்கச்சி. கையிலே சிறு கோல். இவற்றைவைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று கூப்பிடுவதையே விரும்பினார்.
‘`கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயரை எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார்’’ என்பார்.
யோகி ராம்சுரத்குமார்... 20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். எனினும், இன்றைக்கும் அவர் உலகமெங்கிலுமுள்ள பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது நற்செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார். திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும் உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.
நன்றி: விகடன்
May be an image of 1 person and tree
Muruga Anand and 6 others

No comments:

Featured Post

தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு ||sumis channel/

  தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு | சமயபுரத்தாளின் சிறப்புகள்|Samayapuram Varalaru |sumis channel video link