Wednesday, December 1, 2021

கொத்தமல்லி சாதம்

 கொத்தமல்லி சாதம் இப்படி செஞ்சு பாருங்க. பச்சை நிறம் மாறாமல் கொத்தமல்லி வாசத்தோடு கமகமவென சூப்பராக இருக்கும்.




கொத்தமல்லி தழைகளை வைத்து ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி, கமகம வாசத்தோடு கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது. சின்ன சின்ன டிப்ஸ்களுடன் உங்களுக்கான ரெசிபி


முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை இளசான காம்புகளோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு பச்சை மிளகாய் 2, பூண்டு பல் தோல் உரித்து – 6, இஞ்சி – 1 சிறிய துண்டு, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

வடித்த உதிரி உதிரியான சாதம் 3 பேர் சாப்பிடும் அளவிற்கு நமக்கு தேவை. சாதத்தில் உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு குழையாமல் வேக வைத்து, ஆற வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாதமும் அப்படியே இருக்கட்டும்.

இப்போது கொத்தமல்லி சாதத்தை தாளித்து விடலாம்

. அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 – டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 1 – ஸ்பூன் நெய், ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு இந்தப் பொருட்களையெல்லாம் பொன்னிறமாக வறுத்த பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, 2 சிட்டிகை உப்பு போட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை கடாயில் இருக்கும் தாளிப்பில் சேர்த்து, இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட வேண்டும். அரைத்த கொத்தமல்லி விழுதை சேர்த்து கூடவே 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வழக்கினால் கொத்தமல்லியின் பச்சை நிறமும் பசுமையான வாசனையும் மாறாமல் இருக்கும்.

கடாயில் ஊற்றி இருக்கும் கொத்தமல்லித்தழை விழுதானது தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வந்தவுடன் வேக வைத்திருக்கும் சாதத்தை கடாயில் கொட்டி பக்குவமாக 5 நிமிடம் வரை கிளறி அடுப்பை அணைத்து விடுங்கள். (இந்த இடத்தில் உப்பை சரி பார்த்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சாதம் சூடாக இருக்கும்போது உப்புத்தூள் தூவி கலந்து கொள்ளலாம்.) மேலே ஒரு மூடி போட்டு மூடி, 10 நிமிடங்கள் கழித்து அதன் பின்பு பரிமாறுங்கள்.


பச்சை நிறத்தில் ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல் வடாம் உருளைக்கிழங்கு வறுவல் எதை வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம்



No comments:

Featured Post

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில்மாணவி சிந்துக்கு பரீட்சை எழுத ஆம்புலன்ஸ் வசதி

  மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் சிந்து. தனது 12-ம் வ...