திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினமின்று
திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினமின்று
வாரியார். இந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அழகான தமிழும், தமிழோடு இணைந்த பக்தியும் ஓர் உருவமாக உள்ளத்தில் தோன்றும். திரு செல்வம், முருக அழகு, கிருபா கருணை, ஆனந்தம் - மகிழ்ச்சி, வாரி பொழிபவர். தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு.
சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.
இவரது ஆன்மீக சொற்பொழிவில் ஒரு முறை சொன்ன நுட்பமான வாழ்வியல் செய்திகள் அடுத்த முறை இருக்காது.
சின்னச் சின்னத் துணுக்குகளாக நறுக்குச் செய்திகளை நயமாகச் சொல்லுவார்.
வீணையில் நல்ல பயிற்சி பெற்ற அவர் சில நேரங்களில் ஸ்வரம் பாடிக் கதை சொல்வார்.
அருமையான
தத்துவங்களை அனாயாசமாகப் பேசும் வாரியாரின் முதல் வரிசையில் எப்போதும் சிறுவர், சிறுமியர் அமர்ந்திருப்பார்கள். பஞ்ச பாண்டவர் எத்தனை பேர்? என்று திடீரென்று கேள்வி கேட்பார். சில குழந்தைகள் குதூகலமாக எழுந்து ஐந்து பேர் என்று சொல்லும். சரியான விடை கூறிய சிறுவர்களை உடனே மேடைக்கு அழைத்துப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுப்பார். வாரியார் கதை சொல்ல ஊருக்கு வந்தால் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடங்களில் கூப்பிடுவார்கள். மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் சின்னச் சின்னப் பாடல்களையும் கதைகளையும் கூறி மயக்குவார்.அவர் கூறிய மனதை விட்டு நீங்காத கதைகளில் ஒன்று இது.
ஓர் ஊரில் ஒரு பெரிய பணக்காரர். அவரிடம் ஓர் ஏழை வந்தான். தவித்துப்போன அவனுக்குச் சாப்பாடு போட்டார் பணக்காரர். தன்னிடம் இருந்த நிலத்தில் ஒரு ஏக்கர் கொடுத்தார். மாட்டைக் கொடுத்தார். கொஞ்சம் பணமும் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்து பணம் காசு சேர்ந்ததும் சுகம் அனுபவிக்க ஆரம்பித்து அதிலேயே மூழ்கிப் போனான் அந்த ஏழை. தனக்கு நிலமும் பணமும் தந்த பணக்காரனை மறந்தான். அவர் ஆள் அனுப்பியபோதும் எச்சரித்தபோதும், இது என் நிலம் என்று எதிர்த்துப் பேசினான்.
கொஞ்ச காலம் விட்டுப் பிடித்த பணக்காரர், ஓர் ஆளை அனுப்பித் தான் தந்த நிலத்தைப் பறித்து வரச்சொன்னார். அவன் சென்று எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு வந்தான்.
இது ஏதோ கதையல்ல. பணக்காரர்தான் எல்லாச் செல்வமும் மிகுந்த இறைவன். ஜீவாத்மாவுக்கு (ஏழைக்கு) பணம், நிலம் என உலக சந்தோஷங்கள் தந்து அனுப்பினான்.ஆனால் அவன் எல்லாவற்றையும் தனக்குரியதாக நினைத்துக்கொண்டான். இறைவனை மறந்தான் கடைசியில் வந்த வலியவன் யார் தெரியுமா? காலதேவன்! காலத்தில் உணர வேண்டிய இறைவனை மறந்து காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்?
வாரியார் அடிக்கடி சொல்லும் வாசகம் இது:
“இரை தேடுவதோடு இறையும் தேடு.”
வாரியார் சொன்ன இன்னொரு (கற்பூர) கதை!
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ''நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!'' என்றது. அடுத்து வாழைப்பழம், ''நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.
பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக
இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.
Comments