பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம்

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு மணியும் இறைவனுக்கு உகந்ததுதான் என்றாலும் புரட்டாசிக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம் என்று விரதங்கள் அணிவகுக்கும் மாதமும் இதுதான். வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.


புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் அல்லவை நீங்கி நல்லவை சேரும், வளமான வாழ்வு வசப்படும் என்பது ஐதீகம். தடைகள் அகன்று சர்வமங்களம் அமையப்பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே புரட்டாசி மாதம் 'பெருமாள் மாதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது


. ஏன் புரட்டாசி சனி?


புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாகக் கூறுகிறது அக்னி புராணம். எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகி நன்மைகள் கூடவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பார்கள். புரட்டாசி விரதத்துக்கும் வழிபாட்டுக்கும் இன்னுமொரு காரணமும் உண்டு


. சனி பகவான் புரட்டாசி மாதத்தில்தான் அவதரித்தார். சனி பகவானால் விளையும் கெடுபலன்களைக் குறைப்பதற்காகக் காக்கும் கடவுளுக்கு சனிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் தொடங்கியது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்ய தேசங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட்டாசி மாதத்தில்தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர். வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.


பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்


பெருமாள் கோயில்களில் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது திருப்பதி தலம். அத்திருத்தலத்துக்கு அருகில் முன்னொரு காலத்தில் பீமன் என்னும் குயவர் வாழ்ந்துவந்தார். அவர் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனியும் விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தொடர்ச்சியான வேலைகளால் விரதம் இருக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்றாலும் நின்று நிதானித்து வழிபட மாட்டார். சம்பிரதாய முறைப்படி வழிபடுவதும் அவருக்குத் தெரியாது. 'பெருமாளே நீயே எல்லாம்' என்பதை மட்டும் மந்திரம் போல உச்சரித்துவிட்டு வந்துவிடுவார். நாட்கள் செல்லச் செல்ல கோயிலுக்கும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை. அதனால் பெருமாளை வீட்டுக்கே அழைத்து வழிபடுவது என்று பீமன் முடிவு செய்தார். அவர் குயவர் என்பதால் களிமண்ணால் பெருமாள் சிலையை வடித்தார். பெருமாளுக்கு அலங்காரம் செய்யவோ, ஆபரணங்கள் வாங்கவோ அவரிடம் பொருள் இல்லை. அதனால் களிமண்ணையே சிறு சிறு உருண்டைகளாக்கி அவற்றை மாலைபோல் தொடுத்துப் பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அந்த ஊரின் அரசன் தொண்டைமானும் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் விரதமிருந்து பெருமாளுக்குத் தங்க மாலை அணிவித்து வழிபடுவார். ஒருநாள் காலை அவர் கோயிலுக்குச் சென்றபோது தங்க மாலை மறைந்து, மண் மாலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார். கனவில் தோன்றிய பெருமாள், பீமன் குறித்தும் அவருடைய பக்தியைக் குறித்தும் அரசனுக்கு அறிவித்தார். பீமனின் பக்தியைப் பெருமாள் வாயாலேயே கேட்டறிந்த மன்னன், பீமனின் குடிசைக்குச் சென்றார். அவருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். ஆனால் அந்தப் பொருட்களில் எல்லாம் மயங்காமல் இறுதிவரை பெருமாளையே துதித்து, முடிவில் வைகுண்டப் பதவி அடைந்தார்.


பீமன் என்னும் அந்தக் குயவனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.



  • மஞ்சுளா யுகேஷ்_



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி