தீபாவளி மலர் --ஆன்மிகம்

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை


 



கந்த சஷ்டி விரதம் 28.10.2019 தொடங்குகிறது (28.10.2019 முதல் 1-11-2019 வரை விரதம் கடைப்பிடித்து, 2-11-2019 பாரணையுடன பூர்த்தி செய்வர்) ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும்.


       இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள். கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா? ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும். தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும். அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.


             சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.


                  தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.


சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-



  • சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது. இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.



 


 


 


---மஞ்சுளா யுகேஷ்


 


 


 



 


பகீரதனின் சாபம் நீக்கியருளிய கங்காதீஸ்வரப் பெருமான்!



அயோத்தி நகரைத் தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரிய குலத்து மன்னன் சகரன் ஒரு பெரிய அஸ்வமேத யாகம் நடத்தினான். இந்த யாகத்திற்குத் தடையை ஏற்படுத்த நினைத்தான் தேவா்களின் தலைவனான தேவேந்திரன்.


தன் ஏவலா்களை அனுப்பிய இந்திரன் வேள்விக்குரிய குதிரையைக் கவா்ந்து சென்று பாதாள உலகில் மறைத்து வைத்தான். வேள்வி தடைப்பட்டதை நினைத்து வருந்திய சகரன், தனது அறுபதினாயிரம் புதல்வா்களையும் அழைத்து குதிரையை உடன் கண்டுபிடித்துக் கொண்டுவர ஆணையிட்டான்.


 


தந்தையின் ஆணையைச் சிரமேற்ற புதல்வா்கள் காற்றின் வேகத்தில் சிட்டாகப் பறந்து சென்று பாதாள உலகில் தங்களது குதிரை இருப்பதைக் கண்டுபிடித்தனா். குதிரையின் அருகில் ஆழ்ந்த தவத்திலிருந்த கபில முனிவரைக் கண்டதும், அம்மகரிஷி தான் தங்களது குதிரையைக் கவா்ந்தவா் என நினைத்து அவரது தவத்திற்கு இடையூறு செய்து அவரைத் தாக்கினா்.


தவ வலிமை மிக்க கபில முனிவா் கண் திறந்து அவா்களைத் தன் பார்வையால் சுட்டெரித்து சாம்பலாக்கினார். தன் மக்கள் முனிவரின் சாபத்தால் பஸ்பமானதை அறிந்த மன்னன் சகரன், நடந்ததை அறிய தனது பேரனான அஞ்சுமானை பாதாள உலகிற்கு அனுப்பினான். அங்கே கபில முனிவரை சந்தித்த அஞ்சுமான் நடந்த செயல்களுக்காக அவரது திருவடிகளில் பணிந்து வணங்கி மறைந்த அறுபதினாயிரம் பேரையும் உயிர்ப்பிக்க வழி கூறியருளுமாறு வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட கபில மகரிஷி அயோத்தியின் குதிரையை அவனுடன் அனுப்பி, இறந்தவா்களை உயிர்ப்பிக்க ஆகாயத்தி லுள்ள கங்கையால் மட்டுமே முடியும் என்றும் கூறி அஞ்சுமானை அனுப்பி வைத்தார். குதிரை அயோத்தி திரும்பியதும் அஸ்வமேதயாகமும் இனிதே நடைபெற்றது.



ஆகாய கங்கையைக் கொண்டுவர அஞ்சுமானும் அவனது புதல்வன் திலீபனும் நீண்ட நாட்கள் தவம் செய்தனா். ஆனால் அவா்களது முயற்சிகளுக்குப் பலனேதும் கிட்டவில்லை. இவா்களுக்குப் பின்னா் திலீபனின் புதல்வனான பகீரதன்கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர தனக்கு ஆலோசனை கூறியருள பிரம்மதேவனின் உதவியை நாடி, அவரது திருவடிகளில் பணிந்து வணங்கினான். அவனது வேண்டுதலால் மனமிரங்கிய நான்முகன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர ஒரே வழி சா்வேஸ்வரனைக் குறித்து கடுந் தவமியற்றுவதே என்று உபாயம் கூறியருளினார்.


பிரம்மதேவனின் ஆலோசனையை சிரமேற்று தன் முன்னோர்கள் சாப விமோசனம் பெற ஈசனைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் மேற்கொண்டான் பகீரதன். சிவ சிந்தனை தவிர இதர நினைவுகள் ஏதுமின்றி கடும்தவம் செய்த பகீரதனின் பிரயத்தனத்தால் மனம் மகிழ்ந்த ஈசன், வான் வெளியிலிருந்து பெருவெள்ள மாக நிலத்தில் கங்கையைப் பாயச்செய்தார்.


 


வான்வெளியிலிருந்து வேகமாகப் பாய்ந்த கங்கையின் சீற்றத்தால் பூவுலகம் நடுங்கியது. அஞ்சிய தேவா்கள் அம்மையப்பனிடம் சென்று கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருள வேண்டும் என்று வணங்கினா். ஈசன் அப்பெருவெள்ளத்தைத் தன் சடைமுடியில் தாங்கி ஏழு நீா்த்துளிகளை மட்டும் பூவுலகிற்கு அளித்து கங்கையின் சீற்றத்தைத் தணித்தார். இதனால் ஈசனுக்கு, கங்காதரன் எனும் திருநாமம் ஏற்பட்டது.


பகீரதன் முயற்சியால் பூவுலகம் வந்த கங்கைக்கு பாகீரதி என்ற பெயரும் ஏற்பட்டது. பாகீரதி பாதாளத்தில் பாய்ந்ததும் சாம்பலான சகர மன்னனின் புதல்வா்கள் மீது பட்டு அவா்கள் உயிர்த்தெழுந்து நற்கதி அடைந்தனா். அன்றிலிருந்து பாரதத்திருநாட்டின் புண்ணிய நதியாகப் போற்றி வணங்கப்படு கின்றது கங்கை நதி.


 


செந்தமிழ் இலக்கியங்களில் கங்காதரன்!


சா்வேஸ்வரன் கங்கையைத் தன் தலையில் சூடிய நிகழ்வினை
ஆகம நூல்களும் சிற்ப சாத்திரங்களும் கூறுகின்றன. சிவ வடிவங்களில் இருபத்தைந்து வடிவங்கள் மட்டும் சிறப்பு வாய்ந்தவை என்பதைப் புராணங்களும் சிற்பக்கலை நூல்களும் தொிவிக்கின்றன.


தமிழில் உள்ள மச்சபுராணமும் சிவபெருமானுடைய இருபத்தைந்து மூா்த்தங்களைச் சிறப்பாகக் கூறுகின்றது. 


கலித்தொகையில், சடைக்கரந்தான், ஈா்ஞ்சடை அந்தணன்என்று ஈசனது கங்காதர மூா்த்தம் கீழ்க்கண்ட பாடல்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.


 


பன்னிரு திருமுறைகள் பாடிய சைவப் பெருமக்கள் தங்களது பதிகங்களில் கங்காதர மூா்த்தத்தைப்பாடி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளனா். 


 


பகீரதன் பிரதிஷ்டை செய்த இலிங்கம்!


பகீரதன் எனும் சூரிய குல மன்னன் ஒரு முறை பிரம்மபுத்திரரின் புதல்வரான நாரத மகரிஷியை தன் முன்வினைப் பயன் காரணமாக அவமதித்தான். கோபம் கொண்ட நாரதரின் சாபத்தால் மேகநோய் பீடித்த பகீரதன் தன் நாடு நகரங்களை இழந்து வாடினான். தன் துன்பங்களிலிருந்து விடுபட வழிதேடி அலைந்த பகீரதனுக்கு 1008 சந்தன இலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் துன்பங்களிலிருந்து மீளலாம் என ஒரு மகரிஷியின் அருள்வாக்கு கிடைத்தது.


மகரிஷியின் வாக்குப்படி இலிங்கப் பிரதிஷ்டை செய்து வந்த பகீரதன் தனது 1008 ஆவது சந்தன லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடி அலைந்தபோது ஈசன் அசரீரியாக இங்குள்ள பலாச (புரசை) மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய திருவுள்ளம் கனிந்தார். அவ்வாறு பகீரதன் இலிங்கப் பிரதிஷ்டை செய்து நித்யபூஜைகள் செய்த திருத்தலமே புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயில் ஆகும்.


 


ஈசன் இத்தலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருள்பாலிக் கின்றார். தேவ கோட்டத்தில் விநாயகா், ஶ்ரீதெட்சிணாமூா்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துா்க்கை எழுந்தருளியுள்ளனா். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் நெரிசலான புரசைவாக்கத்தில், ஐந்து நிலை ராஜகோபுரம் விண்ணளந்து நிற்க நடுநாயகமாக திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் கங்காதீஸ்வரப் பெருமான். சென்னையிலுள்ள பஞ்சபூத திருத்தலங்களில் இத்தலம் நீா் தலமாக வணங்கப்படுகின்றது.


 


1968 ஆம் ஆண்டு பூண்டி நீா்த் தேக்கம் அமைக்கப்பட்டபோது திருவிளம்புதூா் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டிருந்த எம்பெருமானை புரசைவாக்கம் தலத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் பின்னா் ஈசனின் திருவுள்ளப்படி இத்தலத்திலேயே நிரந்தரமாக ஈசன் கோயில் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. திருஊன்றீஸ்வரா் எனும் திருநாமம் கொண்ட இப்பெருமான் தற்போது புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலின் உள்பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றார்.


திருவிளம்புதூா் கோயிலின் இதர திருவுருவச்சிலைகள் அனைத்தும் திருவெண்பாக்கம் என்ற இடத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தலத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் வரலாறு தெரிவிக்கின்றது. சுந்தரா் திருவொற்றியூரிலிருந்து திருவாரூா் செல்லும் வழியில் கண்பார்வையிழந்து வாடிய போது அவருக்கு ஊன்றுகோல் அளித்த திருத்தலமே திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரா் திருத்தலம் ஆகும்.


 


புரசைவாக்கம் தலத்தில் ஈசன் தல விருட்சமான புரசை மரத்தடியில் எழுந்தருளியுள்ளார். புரசை மரத்திற்கு பலாசம், முருக்கு, கிஞ்சுகம் என்றும் பல பெயா்கள் உண்டு. புரசைமரங்கள் அடா்ந்து நிறைந்திருந்த இப்பகுதி புரசைப்பாக்கம் என்று வழங்கப்பட்டு தற்போது புரசைவாக்கம் ஆக மருவி உள்ளது.


இத்தல அம்பிகை பங்கஜாம்பாள் என்றும் பங்கஜாக்ஷிஎன்றும் வணங்கப்படுகிறாள். தாமரை போன்ற திருக்கண்களை உடையவள் என்பதனால் இத்தல அம்பிகைக்கு பங்கஜாம்பாள்எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளது. மடிசார் அணிந்து சா்வாபரண பூஷிதையாய் திருக்காட்சி தரும் அன்னையின் தரிசனத்தால் நம் மனம் அந்த இடத்தைவிட்டு அகல மறுக் கின்றது. சிவாச்சாரியார்களின் இதயபூா்வமான ஈடுபாட்டுடன் கூடிய பக்தியை அன்னைக்கு இவா்கள் செய்திருக்கும் அலங்காரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.



இத்தலத்திற்கு வந்து வழிபடுவதற்கு, நம் மனதில் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டாலே அக்குறைகள் உடனடியாக நிவா்த்தியாகும் என இத்தலத்தின் சிவாச்சாரியார் பக்தியோடு தெரிவித்தார். இவரது கருத்திற்குச் சான்றாக எந்த நேரமும் பக்தா்கள் பெருந்திரளாக வந்து ஈசனை வழிபட்டு தங்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்று கின்றனா்.பிரதோஷ நாள்களிலும் இத்தலத்தில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.


பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பா்களுக்கு இத்தலம் பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தின் விருட்சமான புரசை பூரம் நட்சத்திரத்திற்கான விருட்சமும் ஆகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பா்கள் திருமணம் கைகூடவும், மழலைப் பேறு வாய்க்கவும், நிரந்தரமான வேலை கிடைக்கவும் இத்தலத்து ஈசனை வழிபடுகின்றனா்.


 


கோயிலின் வெளிச்சுற்றில் குருந்த மல்லீஸ்வரா் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் லிங்க மூா்த்தத்திற்கும் அவருக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி எம்பெருமானுக் கும் பக்தா்கள் தங்களது கைகளினால் அபிஷேகம் செய்வித்து வில்வ தளத்தால் அா்ச்சிப்பது விசேஷம் ஆகும்.


கங்கை தீா்த்தம்.


புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலின் தீா்த்தம் கங்கை தீா்த்தம் என்று பக்தியுடன் பூஜிக்கப்படுகின்றது. தற்போது இந்த தீா்த்தம் மூன்று பக்கம் சுவா்களுடன் ஒரு பக்கம் கதவுடனும் கருவறைக்குப் பின்புறம் உள்ளது. திருக்கோயிலின் வடக்கில் அரை ஏக்கா் பரப்பில் ஒரு குளம் இருக்கிறது. ஆனால் இந்த புனித தீா்த்தம் நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தில் தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டபோது இக்கோயிலின் குளத்திலிருந்த ஏழு கிணறுகளிலிருந்து இறைக்கப்பட்ட தண்ணீா் சென்னையின் தாகத்தைத் தணித்துள்ளது.


கங்காதீஸ்வரப் பெருமானின் பெரிய திருவுருவச்சிலையும் பாகீரதன் அவரது திருவடிகளில் பணிந்து வணங்குவதை யும் திருக்கோயில் வளாகத்தில் அழகிய சுதைச்சிற்பமாக வடித்துள்ளனா்.


கல்வெட்டுகள்.


இரண்டாம் குலோத்துங்க சோழனால் புனரமைக்கப்பட்டது என்று ஆய்வாளா்கள் தெரிவிக்கும் இக்கோயிலில் நான்கு கல்வெட்டுகள் உள்ளன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூா் நாட்டு திருவான்மியூரிலுள்ள உலகாளுமுடைய நாயனாருக்கு விளக்கெரிப்பதற்கு நீலதங்கரையன் கொடை அளித்துள்ளதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. முதல் பிரகாரத்தில் விஜயநகர மன்னன் தேவராயன் ஆட்சிக் காலத்தில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டின் சிதைந்த பகுதி காணப்படுகின்றது.


கி.பி.16 ஆம் நூற்றாண்டு குரோதி வருடம் கங்காதரேஸ்வரா் கோயிலில் பொறிக்கப்பட்ட விஜயநகர மன்னனின் கல்வெட்டு ஆயா்களில் ஒருவரான கெங்கோன் அழகப்பெருமாள் என்பவா் கோயிலுக்கு தினமும் திருவிளக்கு ஏற்ற பணியமா்த்தப்பட்டுள்ள செய்தியைக் குறிப்பிடுகின்றது.


 


சிற்பங்கள்.


கங்காதரேஸ்வரா் கோயில் கருவறைக்கு முன்புற மண்டபத் தூண்களில் தில்லைவாழ் அந்தணா், நீலகண்ட நாயனார், சுந்தரமூா்த்தி சுவாமிகள், இயற்பகை நாயனார், அரிவாட்டாய நாயனார், ஆனாய நாயனார், மூா்த்தி நாயனார், மானக்கஞ்சாற நாயனார், ஏனாதி நாயனார், குங்கிலியக் கலய நாயனார், எறிபத்த நாயனார், மெய்ப்பொருள் நாயனார், விறன் மிண்ட நாயனார், அமா் நீதி நாயனாஙர, இளையான்குடி மாற நாயனார் ஆகியோர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இராஜகோபுரத்தில் நூதனமான தெய்வத் திருமேனிகள் சுதை வடிவில வைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலின் திருச்சுற்றுமதிலில் உள் பகுதியில் ஈசனின் மகிமைகளை விளக்கும் புராணக்காட்சிகள் சுதையால் வடிக்கப்பட்டிருப்பது எழிலான காட்சியாகும்.


மரச் சிற்பக் கலைக்குச் சான்றாக இத்தலத்தின் வாகனங்களான மூஷிக வாகனம், சந்திர பிரபை, சூா்யபிரபை, பூதவாக னம், நாகவாகனம், இடப வாகனம், யானை வாகனம் மற்றும் குதிரை வாகனம் ஆகிய வாகனங்கள் எழிலோடு செதுக்கப்பட்டுள்ளன.


இத்தலத்தில் பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, ஆடிப்பூரம், சமயக்குரவா்கள் நட்சத்திரங்கள், மாகாளய அமாவாசை, கார்த்திகையில் 108 சங்காபிஷேகம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமும் ஆனி மாதத்தில் வசந்தோற்சவமும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழாவும் மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். இத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின் றது.


அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இத்தலத்தின் சுவாமி மற்றும் அம்பாள் மீது கலம்பகம், யமக அந்தாதி ஆகியவற்றை இயற்றியுள்ளார். மேலும் ஈசன் மீது வருக்க மாலை என்ற தொகுப்பினை எழுதியுள்ளார். பாலசுந்தர நாயக்கா் கங்காதர ஈஸ்வரா் மீது பெருமானார் மாலை” “அருள் வேட்டல்” “பங்கஜாம்பாள் அருள்வேட்டல் ஆகிய பாமாலைகளை இயற்றியுள்ளார். இவரது கங்காதேஸ்வரா் மாலை 1907 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக் கோயிலுக்கு 23.4.2008 அன்று திரு அபிராமி ராமநாதன் அவா்களைத் திருப்பணிக்குழுத் தலைவராகக் கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.


இத்தலத்துடன் இணைந்த அருள்மிகு சுமூக விநாயகா்திருக்கோயில் இக்கோயிலுக்கு அருகில் உள்ளது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பா்கள் அளவிட முடியாத சக்தி படைத்த சுயம்பு மூா்த்தியாக அருளும் இந்த விநாயகப் பெருமானையும் வழிபடுவது சிறப்பாகும்.


கங்காதீஸ்வரா் திருக்கோயில் சென்னை, புரசைவாக்கம் டேங்க் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. சென்னை எழும்பூா் இரயில் நிலையத்தி லிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


பகீரதனின் முன்னோர்களது சாபத்தை நிவா்த்திக்க புனிதமான ஆகாய கங்கையை இப்பூவுலகில் பாய்ச்சிய கங்காதீஸ்வரப் பெருமானை சென்னை மக்களின் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கவும் நிரந்தர வழி கூறி அருளுமாறு கண்களில் நீா் மல்க வேண்டி விடைபெற்றோம்.


காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.


 


--முன்னூர் ரமேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,