தீபாவளி மலர் -சிறுகதை

ராசி ராசியானது


   -சிறுகதை



'திலகம்' என்பது ஒரு பிரபல வாராந்திர இதழ். பிற மாத வார சஞ்சிகைகளிலேயே திலகம்'தான் அதிகம் சந்தாதாரர்களைக் கொண்டு நெம்பர் ஒன் இடத்தில் உள்ளது.


 


அதில், கதை தொடர்கதை, கேள்வி பதில், அரசியல் துணுக்கு, சினிமா கிசுகிசு, பிரமுகர் பேட்டி எல்லாம் இருக்கும்.


 


'ஆலய விஜயம்' பகுதிக்கு என்று தனி வாசகர் பட்டாளம் காத்திருந்து படிப்பார்கள். அந்தப் பகுதியில் வரும் சுவாமி படங்கள் பெரிய சைஸில் வண்ணத்தில் தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளும் வகையில் வெளியாகின.


 


கூடவே ராசி பலன் பகுதியும் களைகட்டியது.


பிரபல ஜோதிட சிகாமணி மாதவப் பணிக்கர் எழுதும் பலன்களை குடும்பப் பெண்மணிகள், வேலை தேடும் இளைஞர்கள், திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்கள், பெரியவர்கள் என்று எல்லா வயது ரசிகர்களும் முண்டியடித்துப் படித்தார்கள்.


 


பண்டிகைக்கு ஊருக்குப் போன ஜோதிட சிகாமணி  கேரளாவில் பெருமழையில் அகப்பட்டுக்கொண்டு திட்டமிட்டபடி சென்னைக்குத் திரும்பமுடியவில்லை.


 


என்ன சிக்கல் என்றால் இந்த வாரம் வெளியாகவேண்டிய இதழுக்கான ராசிபலன் பகுதி இல்லாமலிருக்கிறது. வெளியூர் போனால் கூட தபாலில் அனுப்பிவிடுவார்.


இப்போது மழையால் தொடர்பு இல்லாமல்


ஒரு முட்டுச் சந்தில் (dead end) வந்து நின்றது மாதிரி ஆகிவிட்டது.


 


உதவி ஆசிரியர் பதைத்து ஆசிரியரிடம் ஓடினார். என்ன செய்வது.


'இன்னும் இரண்டு நாள் அவகாசம் இருக்கிறது. நாளை வரை எதிர்பார்ப்போம்' என்று தள்ளிப் போட்டார் ஆசிரியர்.


 


அந்த பகுதிக்கு இடம் விட்டு மற்றதை அச்சேற்றித் தயாராக வைத்திருந்தார்கள்.


 


நாளையும் வந்தது. ஜோதிடர் வரவில்லை. இனி எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. ராசிபலன் இல்லாவிட்டால் பெயர் கெட்டுவிடும்.


எல்லாரும் கையைப் பிசைந்தார்கள்.


 


அப்போது பார்த்து புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஆபீஸ் பையன் சொன்னான்.


 


'சார் .. நான் ஒன்று சொல்லட்டுமா .. கோபப்படமாட்டீர்களே..'


 


'எங்களுக்கு தெரியாத ஐடியா .. நீ என்ன சொல்லப் போறே..' நக்கலடித்தார் உதவி ஆசிரியர்.


 


'இருங்க சார், என்னதான் சொல்றான் கேட்போம்' மேனேஜர் இடம் கொடுத்தார்.


 


'போன வாரம் ஜோதிடர் அய்யா எழுதினது இருக்கில்ல சார்.. அதைக் கலைச்சி மேஷத்தில இருக்கிறது சிம்மத்துக்கு கடகத்தில இருக்கிறது தனுசுக்குன்னு பன்னண்டு ராசியையும் மாத்தி மாத்தி போட்டுடலாம் சார்..'


 


'ஏதாவது விபரீதாமா ஆகிடப் போகுது ..' உதவி ஆசிரியருக்குத் தயக்கம்.


 


மேனேஜர், 'நீ வாய்யா நான் பேசிக்கிறேன்' என்று ஆசிரியர் அறைக்குப் போனார்கள்.


 


ஆசிரியரிடம் ஆபீஸ் பாய் சொன்னான் என்று சொல்லாமல் மேனேஜர் தன்னுடைய ஐடியா என்று விஷயத்தைச் சொன்னார்.


 


ஆசிரியர் ஓகே சொல்லிவிட்டார். 'என்னத்தையோ செய்து நேரத்துக்கு எல்லா ஊருக்கும் பார்சலை அனுப்புங்க..' என்று முடுக்கினார்.


 


வியாழக்கிழமை காலையில் டாண்ணு கடைகளில் திலகம் தொங்கியது.


 


ஆபீசில் எல்லாருக்கும் திக் திக் ..


 


வியாழன் போயிற்று, வெள்ளி போயிற்று. ஒரு சத்தத்தையும் காணோம்.


 


சனிக்கிழமை மத்தியானம் இரண்டு மூன்று வாசகர் கடிதங்கள் வந்தன.


ஒன்றும் பாதகமில்லை. ஒரு கடிதத்தில் மட்டும் ராசிபலனைப் பாராட்டியிருந்தது.


 


ஞாயிறு விடுமுறை.



திங்கட்கிழமை காலையிலேயே போன் கால்கள் பிறகு கடிதங்கள் என்று குவிந்தன.


 


எல்லாம் பாராட்டுத்தான். ஜோதிடப்பலன் அப்டியே பலித்ததாம். வரன் கூடி வந்ததாம். வேலைக்கு இன்டர்வியூக்கு வரச்சொல்லி லட்டர் வந்திருக்காம்... ஆஹா ஓஹோதான்.


 


அப்புறமென்ன, மாதவப் பணிக்கர் அலுத்துச் சலித்து சாவகாசமாக வந்து சேர்ந்தார்.




  •  ---வெ. பெருமாள்சாமி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி