ரசவாதி
ரசவாதி
இன்று (17.10.2019) கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள்
அன்னாருக்கு நினைவாஞ்சலியாக
கவிதை படைத்துள்ளார் ,கவிஞர் பிருந்தாசாரதி
வாங்க நாமும் அவருடன் இணைந்து கவியரசரை நினைவு கூர்வோம்
காதுகளை உதடுகளாக மாற்றிக்
காற்றை ருசிக்க வைத்த
ரசவாதி
பாமரர்க்கும் புரியும்படி
வேதாந்தம் உரைத்த
தத்துவவாதி
பலாப் பழத் தமிழைப்
பஞ்சு மிட்டாயாக
எளிமை செய்த
இலக்கியவாதி
சதுரங்க விளையாட்டின்
சதிகள் புரியாமல்
அப்பாவியாய்
ஆட்டத்தில் திகைத்து நின்ற
அரசியல்வாதி
கண்ணனைப் பாடிக் களிப்பேறிக் களிப்பேறி
ஆண் ஆண்டாளாய் ஆன
ஆன்மீகவாதி
வாதி பிரதிவாதி
இருவருமே தானாகி
வாழ்க்கையை விசாரணை செய்த நியாயவாதி
போருக்கு அழைத்த
துன்பங்களை எல்லாம்
புன்னகையால்
மண்டியிடவைத்த
யதார்த்தவாதி
மிதவாதி தீவிரவாதி
பயங்கரவாதி எல்லோருக்குமே
உன் பாடல்கள் கேட்டால்
இதயம் கசியும்.
காலங்கள் தேசங்கள் எத்தனைக் கடந்தாலும்
உன் மேல் நாங்கள் கொண்ட
காதல் மட்டும்
தேயாமல் பெருகும்.
கவியரசே
இறந்து போனதால் அல்ல
இன்னுமும் நீ இறக்காமல்
வாழ்கிறாயே
அது எப்படி என்றுதான்
இந்த நினைவு நாளில்
உன்னை நினைத்துப் பார்க்கிறேன்.
-பிருந்தாசாரதி
Comments