புண்ணியம் தரும் காவிரி நீராடல்

ஐப்பசி ஸ்பெஷல் !#புண்ணியம்_தரும் #காவிரி_நீராடல்………


 


கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.


 


கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம். 


 


#கங்கையை_விட #உயர்ந்தது 


 


இந்த காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்று புகழப்பட்டுள்ளது. புண்ணியம் சேர்க்கும் காவிரியின் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் ஐப்பசி மாதம்தான் உகந்தது. இந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். 


 


இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரியின் மகிமையை பற்றி அரிச்சந்திர மன்னனுக்கு, அகத்திய முனிவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுபற்றி ஸ்ரீதுலா புராணம் தெளிவாக கூறுகிறது. அகத்திய முனிவர் காவிரியின் சிறப்பு குறித்து கூறியபோது, அதனை அங்கிருந்த பல முனிவர்கள் கேட்டுணர்ந்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண முனிவர்கள் கிடையாது. தவத்தில் சிறந்து விளங்கிய மகா தபஸ்விகள். அந்த மகா தவவான்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். 


 


#மகா_தபஸ்விகள் 


 


வசிஷ்டர், பிருகு, காச்யபர், வாமதேவர், வீதிஹோத்ரர், துர்வாசர், ஜாபாமலி, வாமதேவர், மங்கணர், காலவர், அத்ரி, விசுவாமித்திரர், கண்வர், யாஜர், மார்க்கண்டேயர், அஸிதா, பரத்வாஜர், கவுதமர், உபயாஜர், பராசரர், பைலவர், சாதாதபர், வியாசர், மவுத்கலர், முக்தர், வால்மீகி, கவஷர், ஜாதுகர்ணர், சுதீஷணர், சதானந்தர், சத்யவிரதர், மதங்கர், ஸத்யதபஸ், நாரதர், காந்தர், மாண்டவ்யர், ஆஸூரி, தவும்யர், கவிமதுஹாச்ரயர், ஹோதா, தூமகேது, ஜலப்லவர், சங்கர், லிகிதர், போதாயனர், யக்ஞகேது, யாக்ஞவல்கியர், மருக்ரது, புலஸ்தியர், புலஹர், கவுரர், ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், மரீசி, யக்ஞராசி, பப்ரு. 


 


இத்தனை ரிஷி முனிவர்களும் அறியும்படியாக, காவிரியை பற்றி அகத்திய முனிவர் கூறியதை நாமும் தெரிந்து கொள்ளலாம். 


 


புண்ணிய நதிகளின் சங்கமம் 


 


ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் கலக்கின்றன. எனவே அந்த மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைக்கும். முக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 


 


நீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். ஐப்பசி மாதம் அனைத்து நாட்களும் காவிரியில் நீராடுவதாக ஒருவர் நினைத்துக்கொண்டால், சில காரியங்களை நிறைவேற்றவேண்டியது முக்கியம். 


 


#கடைபிடிக்க #வேண்டியவை 


 


எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. முகச்சவரம் மற்றும் முடிவெட்டிக்கொள்ளுதல் கூடாது. தாம்பூலம் போட்டுக்கொள்வது, வீண் பேச்சு, பாய், கட்டில்களில் படுப்பது, சாப்பிட கூடாதவற்றைச் சாப்பிடுவது, வெளியிலோ அல்லது ஓட்டலிலோ சாப்பிடுவது, ஆண்–பெண் சங்கமம், தானம் வழங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 


 


இதே போல் உணவில் பூசணிக்காய், மொச்சைக்கொட்டை, கேழ்வரகு, தினை, உளுந்து, துவரை, கத்தரிக்காய், கொள்ளு, முருங்கைக்காய், சிறுகீரை, சுரைக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரவு உணவு, காலை சந்தி– மாலை சந்தியில் உணவு உட்கொள்ளக் கூடாது. பழைய சாதம், எருமைப்பால் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. 


 


கடைபிடிக்க வேண்டியவைகளை படித்து விட்டு அயர்ந்து போய்விட வேண்டாம். தங்களால் இயன்றவரை கடைபிடித்தால் கூட புண்ணியம் கிடைக்கும். 


 


#முடவன்_முழுக்கு 


 


ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நீராடினாலும், நீராடாவிட்டாலும், கார்த்திகை முதல் நாள் அன்றும், அதற்கு முந்தைய நாளான ஐப்பசி மாத கடைசி தினத்திலும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள். ஐப்பசி மாத கடைசி தினத்தில் நடைபெறும் புனித நீராட்டம் 'கடை முழுக்கு' என்றும், கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் புனித நீராட்டம் 'முடவன் முழுக்கு' என்றும் அழைக்கப்படுகிறது. 


 


'ஐப்பசி மாதம் முடிந்து விட்டதே!, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே!' என்று கூறி வருத்தப்பட்டான் ஒரு முடவன். அந்த வருத்தத்தை மயூரநாதரிடம் முறையீடாகவும் வைத்தான். அவனது வருத்தமான புலம்பலைக் கேட்ட ஈசன், அசரீரியாக தோன்றி, 'நீ சென்று காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் முக்தி பேறு கிடைக்கும்' என்று கூறினார். அதன்படியே முடவனும் கார்த்திகை முதல்நாள் அன்று காவிரியில் புனித நீராடி, முக்தி பேற்றை அடைந்தான். 'முடவன் முழுக்கு' நடைபெறுவதற்கு காரணமாக இந்தக் கதை கூறப்படுகிறது. 


 


#இடப_தீர்த்த_சிறப்பு 


 


ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் முன்பு உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஏனெனில் இந்தப் பகுதியில் ஓடும் காவிரியே, இந்தத் தலத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் தீர்த்தமாக அமையப்பெற்றிருப்பதுதான். இங்குள்ள காவிரி ஆற்று படித்துறை பகுதிக்கு இடப (நந்தி) தீர்த்தம் என்று பெயர். 


 


எவர் ஒருவரும் கயிலை மலையானை தரிசனம் செய்ய செல்லும் முன்பு வாயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நந்தி பகவான். ஒருமுறை நந்திதேவருக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது. அவரது வாக்கினில் ஆணவம் குடிகொள்ளத் தொடங்கியது. 


 


இதனால் நந்தி பகவானை, பாதாளத்தில் அழுத்தி தள்ளினார் சிவபெருமான். அப்படி அழுத்தி தள்ளிய இடம்தான் மயிலாடுதுறை காவிரியின் துலாக் கட்டம். இந்த இடத்தின் நடுவில் இன்றும் இறைவனின் திருவுருவை கண்டு பரவசம் அடையலாம். இடப தேவர் அழுந்தப்பட்ட இடம் என்பதால் அந்த தீர்த்தம் இடப தீர்த்தம் என்று பெயர் பெற்றது. 


 


சிவபெருமானால் பாதாளத்தில் அழுந்தப்பட்டதும், நந்தி தேவர் உண்மையை உணர்ந்தார். பின்னர் சிவஞானத்தை உபதேசம் செய்யும்படி சிவபெருமானை விரும்பி கேட்டுக்கொண்டார். சிவனும் அவ்வாறே நந்திதேவருக்கு சிவஞானத்தை உபதேசம் செய்து அருளினார். இது ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று, காவிரியின் வட பகுதியில் உள்ள வள்ளலார் கோவில் என்னும் இடத்தில் நடந்தது. இதனால் தான் காவிரியில் ஐப்பசி அமாவாசையன்று நீராடி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக மாறியது. ஐப்பசி அமாவாசையில் நடுப்பகல் வேளையில் இடப தீர்த்த துறையில் இருந்து காவிரி தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், அந்த தீர்த்தம் எத்தனை ஆண்டுகள் ஆயினும், கெட்டுப்போகாது என்பது இன்றும் அனைவராலும் நம்பப்படும் ஐதீகம். இன்றும் பலர் மேலே சொன்ன நேரத்தில் தீர்த்தத்தை பிடிப்பது நடைபெற்று வருகிறது...


By


Manjula Yugesh


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,