பெண் சிசு -சிறுகதை
பெண் சிசு
சிறுகதை ---நித்யஸ்ரீ
தீபா ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் தன் பட்டபடிப்பை முடித்து விட்டு இப்போது ஒரு அரசு மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வருகிறாள்.
அம்மா... அம்மா.. என்று அழைத்தபடி சமையகட்டிற்குள் நுழைந்தாள் தீபா. இன்னைக்கு என்ன டிபன்...?
பூரியும் உருளைகிழங்கும் பண்ணிருக்கேன்ம்மா.. போய் டைனிங் டேபிள்ல் உட்காரு நான் எடுத்துட்டு வரேன்.
அப்பா ஆபிஸ் போயாச்சாம்மா...?
ம்...ம்.. இன்னைக்கு ஏதோ முக்கியமான கான்பிரன்ஸ் இருக்காம் அதான் சீக்கிரமாவே போயிட்டாரு...
ம்... அம்மா அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம் "மக்கள் நல் வாழ்வு திட்டம்" அப்படின்னு ஒரு கேம்ப் அதுல முக்கியமா போதை பழக்கத்துக்கு அடிமையானவங்களயெல்லாம் திருத்தி அவங்களுக்கு ஒரு புது வாழ்க்கை முறை அமைத்து தரனும்ங்கிறது தான் அதோட நோக்கம்.அதுக்காக நாங்க கிராமப் புறத்துக்கு போய் அங்குள்ள மக்களுக்கு சில நல்லது செய்யல்லாம்னு இருக்கோம் அது மட்டுமில்லாம நாங்க போற அந்த உசிலம்பட்டிங்கிற கிராமத்துல இப்பவும் நிறைய பெண் சிசு கொலை நடக்கிறதா சொல்றாங்க, அது தப்புன்னும் அப்படி செஞ்சா அது சட்டபடி குற்றம்ன்னும் அங்குள்ள மக்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கனும் அம்மா. இந்த பெண் சிசு கொலையை எப்படியாவது தடுத்து நிறுத்தனும்....
அது வரையில் அமைதியாய் மகளின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அன்னபூரனி உசிலம்பட்டி கிராம் என்றதும் தன் விழியைஅகல விரித்து மகளைப் பார்த்தாள். எந்த கிராம் சொன்ன...?
உசிலம்பட்டி ம்மா ... அங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களா..?
ம்.... அதெல்லாம் ஒண்ணும்மில்லை சும்மாதான் கேட்டேன்.. சரி நீங்க எப்ப போறீங்க வர்ற எத்தனை நாள் ஆகும் ?
அநேகமா ஒன் மந்த் கேம் ஆக இருக்கும்னு நினைக்கிறேன். நாளைக்கே புறப்படறோம். வர்றதுக்கு ஒரு மாசமாகும்.
என்னடி இப்படி தீடிர்னு சொல்ற.. உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டாமா..?
அப்பாகிட்ட நேத்து சாயந்தரமே பேசி சம்மதமும் வாங்கிட்டேன்மா. அப்பாதான் அம்மாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவா நீயே கேட்டுக்கோன்னு சொல்லிட்டாரும்மா.
அது சரி அப்பாவும் பொண்ணும் சேர்ந்து முடிவு பண்ணிட்டு இப்ப வந்து எங்கிட்ட இன்பார்ம் பண்றிங்களா...?
அய்யோ அப்படியெல்லாம் இல்லைம்மா யு ஆர் மை ஸ்வீட் மம்மி ... என்று சொல்லி தன் தாயை கட்டியனைத்து முத்தமிட்டாள் தீபா.
உசிலம்பட்டி கிராம்.....
அது ஒரு அழகான கிராமம் திரும்பி பார்க்கும் இடமெல்லாம் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் பசுமையாக நிறைந்திருந்தது. அங்குள்ள மக்களின் உழைப்பால் அந்த கிராம் மேலும் செழிப்பாய் காட்சியளித்தது. மாரியப்பனும் அவள் மனைவி கண்ணம்மா அந்த கிராமத்தில் தான் வசித்து வந்தார்கள். மாரியப்பன் அந்த கிராமத்திலேயே கூலி வேலை செய்து அதில் வந்த வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்தி வந்தான். குறைந்த வருமானமே என்றாலும் கூட இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் இன்னமும் குழந்தையில்லை. குழந்தை இல்லையே என்கிற ஏக்கமும் சிறிது இருக்கத்தான் செய்தது அவர்கள் இருவருக்கும்.
கண்ணமா கூட சும்மாயிராமல் அருகில் உள்ள கருவேலங்காட்டிற்கு சென்று சுள்ளி பொறுக்குவது என்று சிறு வேலைகள் செய்து வந்தாள். ஒரு நாள் கண்ணம்மா சுள்ளி பொறுக்கி கொண்டு வரும் வேளை, அது நண்பகல் வேளை என்பதால் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.அவளால் அதற்கு மேல் நடக்க முடிய வில்லை தலையை சுற்றி கொண்டு மயக்கமாய் வருவது போல் இருந்தது, கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு பூமியே தலைகீழாய் தெரிவது போல் இருந்தது அவளுக்கு, துணைக்கு யாரையும் அழைப்பதற்கு கூட அவள் உடம்பில் தெம்பில்லாமல் போயிற்று. நா வறண்டு தொடையை அடைத்தது அப்படியே அங்கேயே சரிந்து விழுந்தாள். அவள் கூட வந்த பொன்னுதாயி பார்த்து விட்டு உடனே உதவிக்கு சில பெண்களை அழைத்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளுக்கு குடிக்க தண்ணீரும் குடுத்தனர். அதில் ஒரு முதியவள் கண்ணமாவின் கை பிடித்து பார்த்து விட்டு ம்…ம்… எல்லாம் நல்ல சேதி தான் தாயி ! நீ உண்டாயிருக்க என்று சொல்ல கண்ணமாவிற்கோ தான் சந்தோஷ படுவதா இல்லை வருத்த படுவதா என்று தெரியவில்லை.
என்னமா எம்புட்டு நல்ல சேதி சொல்லிருக்கேன் உம்முகத்தில் துளி கூட சந்தோஷத்தையே காணோமே ?
அதெல்லாம் ஒன்றுமில்லேம்மா....
சரி சரி... அடியே பொன்னுதாயி இவள பத்திரமா கூட்டிட்டு போயி அவ வீட்ல விட்டுடி. அவ புருஷன் கிட்ட சொல்லி அவள வைத்தியர் கிட்ட கூட்டிகிட்டு போகச் சொல்லுடி என்ன்ன சரியா ?
சரி ஆத்தா நான் பாத்துக்கறேன் என்று சொல்லி விட்டு, வாக்கா என்று கண்ணமாவை அழைத்துக் கொண்டு வீடிருக்கு வந்தாள்.
வீட்டில் அவள் கணவன் மாரியப்பன் படுத்திருந்தவன் கண்ணம்மாவை கைத்தாங்கலாக அழைத்து வருவதைக் கண்டதும் பதறி எழுந்து அமர்ந்தான். என்ன புள்ள என்ன ஆச்சு ? என்று பரிதவிப்புடன் கேட்க..
ஒண்ணுமில்லை மச்சான் என்று சொல்லிக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.
என்ன ஆச்சு பொன்னுதாயிடம் கேட்க, எல்லாம் நல்ல சேதிதான் அண்ணே நீ அப்பாவாக போறே என்று சொல்லியவள் சரி சரி எனக்கு நேரமாவுது நான் ஆத்தா கிட்ட சொல்லிக்காம வந்துட்டேன் இந்நேரத்துக்கு என்னை தேடிகிட்டு இருக்கும் நான் வாறேன் என்றவாறு புறப்பட்டாள்.
மாரியப்பன் கண்ணமாவின் அருகில் வந்து அமர்ந்தான்.என்ன புள்ள எம்புட்டு நல்ல சேதி இதுக்காக நாம எம்புட்டு நாள் காத்துகிட்டு இருந்தோம் நீ ஏன் முகத்தை இப்படி வைச்சிட்டு இருக்கே....?
இல்ல மச்சான் பழசெல்லாம் ஞாபாகத்திற்கு வந்திடுச்சி. இந்நேரம் நம்ம குழந்தை மட்டும் உசிரோட இருந்திருந்தா அவளுக்கு 5 வயசு ஆயிருக்கும் எம்புட்டு வளர்ந்திருப்பா நம்ம பொண்ணு இல்ல மச்சான் .. ?
ஏன் புள்ள நடந்ததையே நினச்சிட்டு மனசை போட்டு குழப்பிக்கறே..?
இல்ல மச்சான் ஒரு வேளை இப்பவும் அது மாதிரி எதவது நடந்திட்டா...?
அப்படியெல்லாம் ஏதும் நடக்காது புள்ள எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று சமாதனம் சொல்லிவிட்டு சென்றான். அவன் சமாதனம் சொல்லி விட்டானே தவிர அவனுக்குமே அந்த பயம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.
கண்ணமாவின் கண்முன் பழைய நினைவுகள் எல்லாம் ஒரு மழைச் சாரலாய் வந்து போனது.
அப்போது அவர்களுக்கு திருமணமான முதல் வருடம் கண்ணமா கருவுற்றிருந்தாள். முதல் குழந்தை என்பதால் இருவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி. மாரியப்பன் பழவகைகள் அனைத்தும் வாங்கி குவித்தான்.கண்ணமாவை விழுந்து விழுந்து கவனித்தான்.
மாதம் நெருங்க நெருங்க சற்று பயம் வந்தது. காரணம் அந்த கிராமம் மிகவும் கட்டுபாடு நிறைந்தது. அந்த காலத்தில் பெண் குழந்தைகள் என்றாலே சிசுவிலே அழித்து விடுவார்கள். தப்பி பிறந்து விட்டாலும் கூட கள்ளிப் பால் கொடுத்து அந்த பிஞ்சு சிசுவின் உயிரை மாய்த்து விடுவார்கள்.
ஒருவேளை பிறக்க போவது பெண்ணாக இருந்தால் என்ன செய்வது என்ற பயம் இருவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. பிரசவ நாளும் வந்தது, கண்ணமா வலியால் துடித்தாள் மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்து குழந்தையும் பிறந்தது.
அவர்கள் பயந்தது போலவே பிறந்தது பெண் குழந்தைதான். உடனே ஊர் கட்டுப்பாடு படி குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுக்கும் படி ஊர் பஞ்சாயத்து தலைவர் சொல்லவும். கண்ணமா துடித்து போனாள். என்னதான் இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆயிற்றே...வலியும் வேதனையும் அவளுக்கு தானே தெரியும். அவள் மனம் பதை பதைக்க அவள் குழந்தையை மருத்துவச்சி எடுத்துச் சென்றாள்.
இன்னும் அந்த வலியும் வேதனையும் அவள் மனதை விட்டு நீங்க வில்லை. இப்போதும் அது போல் எதுவும் நடந்து விட கூடாது என்று என்றெண்ணி ஊர்க் கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு வேண்டி மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்திருந்தாள்.
மாதம் பத்து நெருங்கியது, கண்ணம்மா வலியால் துடித்தாள். மாரியப்பன் உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தான். மகப்பேறு முடிந்து குழந்தையும் நல்ல படியாக பிறந்தது. கண்ணம்மாவும் மாரியப்பனும் வேண்டியபடியே இந்த முறை ஆண் குழந்தையாக பிறந்தது. குழந்தை அப்படியே தன் கணவனை உரித்து வைத்தாற்ப் போல் பிறந்திருந்ததை பார்த்து பார்த்து மிகவும் பூரித்து போனால் கண்ணம்மா. மாரியப்பன் வந்து குழந்தையை கையில் எடுத்துக் தன் நெஞ்சோடு அனைத்துக் முத்தமிட்டான்.
பிள்ளைக்கு ஹரி என்று பெயரிட்டு அவர்கள் ஆசைப் பட்ட படி, செல்லமாகவும் வளர்த்து வந்தார்கள்.அவனும் நன்றாகவே படித்து வந்தான்.
அவன் பள்ளி படிப்பை முடித்ததும், அவனை மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மரியப்பனுக்குள் இருந்தது, ஆனால் கண்ணம்மாவோ அவன் மேல் படிப்பு படிக்க பட்டணம் போக வேண்டியிருக்குமே என்று தன் கணவனை தடுத்தாள். நாம் தான் படிக்காமல் இருந்து விட்டோம் நம் பிள்ளையாவது நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி அவளை சமாதானம் செய்து தன் மகனை பட்டணம் அனுப்பி மேலும் படிக்க வைத்தான்.
ஆனால் ஹரியோ அவன் படிக்க சென்ற இடத்தில் நண்பரகளுடன் சேர்ந்து புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பல தீயப் பழக்கங்களை கற்றுக் கொண்டான். படிக்க சென்ற புதிதில் மட்டும் விடுமுறை நாட்களில் சில முறை தாய் தந்தையை பார்க்க தன் ஊருக்கு வந்து சென்றான். இப்போது அதுவும் இல்லை. தந்தை வந்தாலும் அவன் நண்பர்களிடம் எதாவது சாக்கு சொல்லி பார்க்காமலேயே அனுப்பி விடோவான். தன்னை இந்த நிலையில் பார்த்தல் அவர் மிகவும் மனம் வருந்துவார்,அதை தாயிடம் சொன்னால் அவரின் மனமும் வேதனை அடையும் என்று எண்ணினான்.
மேற்படிப்பை முடித்து அவன் ஊருக்கு திரும்பினான். பிள்ளையின் போக்கை பார்த்த பெற்றோர்கள் நாம் தான் அதிகமாக செல்லம் கொடுத்து அவனை கெடுத்து விட்டோமோ என்று மனம் வருந்தினர்.
தீபா அந்த கிராமத்திற்கு வந்து அங்குள்ள சில இளைஞரகளை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு நல் வழிப் படுத்தினாள். ஹரியை திருத்தி, அவனிடம் இருந்த தீயப் பழக்கங்களை எல்லாம் மாற்றி நல் வழிப்படுத்தினாள். மேலும் அங்குள்ள கிராம மக்களுக்கு பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது தவறு என்றும், குழந்தை பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றும் எடுத்து விளக்கி சொல்லி இனி அது போன்ற காரியங்களை செய்ய கூடாது என்றும் வலியுறுத்தினாள் .
பெண் என்பவள் உலகில் போற்ற பட வேண்டியவள், உலகில் பெண் என்ற ஒருத்தி இல்லாமல் நீங்க எவ்வாறு பிறக்க முடியம் உங்களை பெற்றவள் ஒரு தாய் என்றால் உங்களுடன் வாழ்ந்து உங்களுக்கு ஒரு பிள்ளையை பெற்றுக் கொடுப்பவளும் பெண்தானே...?
நாம் என்ன தான் தவறு செய்தாலும் இந்த பூமியில் எத்தனை போர் நடந்தாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு பொறுமையை நம்மை சுமந்து கொண்டு நிற்கிறாளே இந்த பூமித் தாய் அவளும் ஒரு பெண்தான். பெண் என்பவள் பொறுத்து போகும் குணம் கொண்டவள் நீங்கள் தவறுகள் ஆயிரம் செய்த போதிலும் அதை தாங்கி கொண்டு செல்பவள் பெண்தானே. குழந்தை பிறந்த அந்த நொடியில் பெண்ணாக பிறனைத் ஒரு காரணத்திற்க்கா மட்டுமே இந்த மண்ணில் விதைக்க பட வேண்டிய எத்தனை உயிர்கள் புதைக்க பட்டுள்ளன. பத்து மாதம் கருவில் சுமப்பவள் பெண், அவள் கண் முன்னே அந்த பச்சிளம் குழந்தைக்கு அவள் மனம் துடிக்க துடிக்க கள்ளிப்பால் கோட்டுக்கும் போது பெற்ற மனம் எப்படி வலித்திருக்கும் என்று நீங்கள் ஒரு முறையாவது நினைத்து பார்த்து இருப்பீர்களா..? என்று அந்த கிராம மக்களிடம் பேசி விழிப்புணர்வைக் கொண்டுவரச் செய்தாள்.
தன் மகனை திருத்திய அந்த புண்ணியவதியை பார்க்க வேண்டும் என்று ஹரியிடம் கண்ணம்மா கேட்க ஹரி அவர்களை தீபாவிடம் அழைத்துச் சென்றான்.
அக்கா இவங்க தான் எங்க அம்மா அப்பா என்று அறிமுகம் செய்து வைத்தான். தீபாவை பார்த்ததும் கண்ணம்மாவிற்கு தன் மகளையே உயிரோடு பார்ப்பது போல் ஒரு பிரம்மை. ரொம்ப நன்றிம்மா எங்க பையனை திருத்தி நல்ல படியா மாத்திட்ட நீ நல்லா இருக்கணும் என்று கண்ணம்மாவும் மாரியப்பனும் தீபாவை பார்த்து கூறிட, என்னம்மா இது நீங்க வயசுல பெரியவங்க நீங்க போய் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு, எதாவது சாப்பிடறீங்களா ...?
அதெல்லாம் ஒன்னும் வேண்டாமம்மா உன்னை பார்த்து நன்றி சொல்லிட்டு போகலாமின்னு தான் வந்தோம். அம்மாடி உன்னை பார்க்கும் போது எனக்கு எங்களோட இறந்து போன பொண்ணு ஞாபாகம் வந்திடுச்சி. இந்நேரத்துக்கு எம்பொண்ணு உசிரோட இருந்திருந்தா அவளுக்கு உன் வயசு தான் இருந்திருக்கும். உன்னாட்டமே வளர்ந்திருப்பா. நீ இப்ப சொன்ன மாதிரி ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி யாராவது வந்து இப்படி சொல்லியிருந்தா நான் எம்பொண்ண பறி கொடுத்திருக்க மாட்டேன் என்று கண்ணீருடன் பேசிய கண்ணம்மாவிடம்,
அதனால என்னம்மா என்னையும் உங்க பொண்ணா நினைச்சிக்கோங்க என்று சொன்ன தீபாவை இறுக்கி பிடித்துக் கொண்டாள் கண்ணம்மா.
நாளைக்கு நாங்க எல்லாரும் கேம்ப் முடிஞ்சு ஊருக்கு போக போறோம் அம்மா, நீங்க எல்லாம் அவசியம் ஒரு முறை சென்னைக்கு எங்க வீட்டுக்கு வரணும். நான் போகும் போது அட்ரெஸ் கொடுத்தது போறேன். கண்டிப்பா வரோம்மா என்று சொல்லி விடை பெற்றார்கள்.
மறுநாள் காலை,
தீபா ஊருக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தாள்,
ஏய் தீபா ஊர்ல இருந்து உங்க அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்கடி என்று தோழி வந்து சொல்லவும், ஆச்சரியத்துடன் வெளியே ஓடி வந்தாள்.
என்னப்பா திடிர்னு இப்படி சொல்லாம கொல்லாம, நான் இன்னைக்குதான் இங்க இருந்து கிளம்பறதுக்கு எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கேன். நீங்க வந்தது சர்ப்ரைசிங்கா இருக்கு ...?
என்னமாம் நீ மறந்துட்டியா இன்னைக்கு உன்னோட பிறந்தநாள்டா ... எப்பவுமே உன்னோட பிறந்தநாள நாம எல்லாரும் சேர்ந்து கொண்டாடறதுதானே வழக்கம் இப்ப மட்டும் எப்படி ..?
ஐயோ அப்பா நான் மறந்தே போயிட்டேன் ... நல்ல சமயத்துலதான் வந்துருக்கீங்க என்னோட சேவையை பாராட்டி எனக்கொரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணிருக்காங்க அப்பா நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க.
உன்னை பெற்ற மகராசிக்கு தான் இந்த பெருமையெல்லாம் சேரனும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் அன்னபூரணி.
மேடையில் ஊர்த்தலைவர்கள் அனைவரும் தீபாவைப் பாராட்டி பேசினார்கள். பாராட்டி சிறப்பித்ததோடு மட்டுமில்லாமல் ஒரு நினைவு பரிசு ஒன்றும் தந்தார்கள். தீபா அதை தன் பெற்றோர் கைகளால் வாங்க வேண்டும் என்று ஆசைபட்டு, தன் பெற்றோர்களை மேடைக்கு அழைத்தாள்.
மேடைக்கு வந்த அவள் பெற்றோகள், தீபா இந்த பரிச நாங்க கொடுக்கறதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு விசஷயத்தை சொல்ல நினைக்கறோம் அதும் இந்த மேடைல சொன்ன நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். என்ன என்பது போல் தன் புருவம் உயர்த்தி பார்த்தாள் தீபா.
எங்களுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் குழந்தையே இல்லாம இருந்தது. குழந்தை வரம் கேட்டு நாங்க கோயில் கோயில்லா போனப்போ நாங்க வர்ற வழியில கார் பஞ்சர் ஆயிடுச்சு நல்ல மழை வேற அப்ப இந்த ஊர் எல்லையில் இருக்கிற ஒரு மண்டபத்துல மழைக்காக கொஞ்சம் நேரம் ஒதுங்கி நின்றிருந்தோம். அப்போ அங்க ஒரு குழந்தையோட அழு குரல் கேட்டது என்னனு போய் பார்த்தோம் அங்க ஒரு வயசான அம்மா கைல ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது.
என்ன ஏதுன்னு விசாரிச்சோம், அந்த குழந்தை பொம்பிளை பிள்ளையாய் பிறந்து பாவம் பண்ணிடுசும்மா பிறந்துதும் அம்மாவோட மார்புல தாய் பால் குடிக்க வேண்டிய குழந்தை இப்போ என் கையால இந்த கள்ளிப் பாலை குடிச்சிட்டு உசிர விடப் போகுது என்று சொன்னாள்.
உடனே நாங்க எங்க நிலமைய சொல்லி எங்க கிட்ட அந்த குழந்தைய தரச் சொன்னோம், அந்தம்மா ஊர் கட்டுப்பாட்டின் படி தரக் கூடாது ஊர் ஜனங்களுக்கு தெரிஞ்சா என்னை ஊரே விட்டே ஒதுக்கி வச்சிடுவாங்க அப்படின்னு சொல்லி மறுத்தாங்க.
இல்லம்மா இந்த உண்மைய நாங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டோம் நீங்க எங்கள நம்பலாம். என்று சமாதனம் சொல்லி அவர்களிடம் இருந்து அந்த குழந்தையை அன்னைக்கு நாங்க வாங்கிட்டு போனோம் அந்த குழந்தை வேற யாரும் இல்லைம்மா நீதான் என்று சொன்னாள் அன்னபூரணி . உன்னோட அப்பா அம்மா இதோ இந்த மாரியப்பனும், கண்ணம்மாவும். தான் அன்னைக்கு இந்த குழந்தை வேண்டான்னு நீங்க உதறி தள்ளிட்டீங்க ஆனா இன்னைக்கு இந்த பெண் குழந்தை தான் படிச்சி முன்னேறி இப்ப ஒரு கிராமமே அவளக்கு பாராட்டு விழா நடத்தற அளவுக்கு வந்திருக்கா. இப்படி பட்ட ஒரு பொண்ண தான் நீங்க அன்னைக்கு வேண்டான்னு சொல்லிட்டீங்க இப்ப அவ இந்த பரிச தன் பெத்தவங்க கையால வாங்க ஆசை படறா, ப்ளீஸ் மேடைக்கு வாங்க என்றார்கள்.
உடனே மாரியப்பனும் கண்ணாமாவும் மேடையேறி வந்து நம்முடைய மகள் தீபா என்று பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அவளை கட்டிக் கொண்டு முத்தமிட்டனர். தீபாவும் தன் பெற்றோர்களை கட்டியனைத்தபடி அங்கு மகிழ்ச்சி நிலவியது.
---நித்யஸ்ரீ
Comments