கனமழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் .
காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இது தொடக்கத்தில் பரவலாக பெய்தது இயல்பை விடவும் மழையின் அளவு அதிகரிக்கும் என மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி கடந்த ஆண்டை போலவே மந்த கதியை அடைந்தது. மேலும் கோடை காலத்தை போல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலும் சில நாட்கள் சுட்டெரித்தது.
இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments