பிரதமர் மோடி, பிரேசில் புறப்பட்டு சென்றார்

பிரதமர் மோடி, பிரேசில் புறப்பட்டு சென்றார்


 


 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்பு

2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டு சென்றார்.


உலகின் முக்கிய பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இந்த அமைப்பின் 11-வது உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் இன்று (13-ந் தேதி) தொடங்குகிறது.
இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவுக்கு நேற்று பிற்பகலில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இது 6-வது முறை ஆகும்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் இடையே டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பது பற்றியும், பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பிரேசில் புறப்படுவதற்கு முன்னதாக பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேசுவேன். பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி என்ற உச்சிமாநாட்டின் கருப்பொருளுடன் பிற பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதை எதிர்நோக்குகிறேன்” எனவும்  “பிரிக்ஸ் நாடுகளுடனான உறவில் நமது வர்த்தகம், தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நான் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் உரை ஆற்றுகிறேன். பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் நியூ டெவலப்மென்ட் வங்கியில் கலந்துரையாடுகிறேன்” எனவும் கூறி உள்ளார்.
“பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இந்த மாநாடு, வழிவகுத்து தந்துள்ளது” எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்தித்து மோடி இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு முகமைகள் இடையே பிரிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,