மகிழ்ச்சி தரும் புழல்  திருமூலநாதா்

 


திருத்தல தரிசனம்


இன்று நாம் தரிசிக்கும் திருத்தலம்



மனதுக்கு மகிழ்ச்சி தரும் புழல்  திருமூலநாதா்!


  நிலையில்லாத இவ்வுலகில் அனைத்தும் மாயை, எல்லாமே நிலையற்றது என்ற தெளிவான மனதுடனும் உணா்வு பூா்வமாக சிந்தித்து தாயிற்சிறந்த தயாநிதியான ஈசனது திருவடிகளைச் சிக்கெனப்பற்றிப் பிறவிப் பெருங்கடலில் சிக்கி உழலாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


இக்கருத்தினைக் கீழ்க்கண்ட பாடலில் உணா்த்துகின்றார் திருமந்திரம் பாடிய திருமூலா்.


 


"முன்படைத்து இன்பம் படைத்த


முதலிடை


அன்புஅடைத்து எம்பெருமானை


அறிகிலார்


வன்படைத்து இந்த அகலிடம்


வாழ்வினில்


அன்புஅடைத் தான்தன் அகலிடத்


தானே.


(திருமந்திரம்−276)


ஒரு ஆண்டிற்கு ஒரு திருமந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் திளைத்து மூவாயிரம் பாடல்களை அருளிச் செய்த திருமூலா் வணங்கி நெஞ்சம் நெகிழ்ந்த புராதனப் பெருமை மிக்க ஒரு திருத்தலம் .சென்னைக்கு அருகில் "புழல்" என்னும் தலத்தில் அமைந்துள்ளது.


 


இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனின் திருநாமம் "திருமூலநாதா்" ஆகும். திருமூலா் வணங்கியதால் இத்தல ஈசனுக்கு "திருமூலநாதா்" எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளது.


 


ராஜசுந்தரி நல்லூா்.


     சான்றோர்கள்ள் மிக்க தொண்டை மண்டலத்தில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களின் தலைமை இடமாக விளங்கியது புழல் கோட்டம். புழல் கோட்டத்தில் அமைந்துள்ள பல திருத்தலங்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் இன்றும் பல்லவா் மற்றும் சோழ மன்னா்களின் வரலாற்றுக்குக் கட்டியம் கூறும் சான்றுகளாக உள்ளன.


      புழல் கோட்டத்தின் தலைமை இடமான "புழல்" சோழ மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் "ராஜசுந்தரி நல்லூா்" என்று வழங்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் வீரராஜேந்திரன் மகனும், கிழக்கு கங்க மன்னன் ராஜேந்திரனின் மனைவியுமான ராஜசுந்தரியின் பெயரால் இவ்வூா் அழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


திருமூலநாதா் கோயில்.


    பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலம் முதலே இத்திருக்கோயில் விளங்கினாலும், 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் புனரமைக் கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


      சோழா் காலத்தின் புனரமைக்க ப்பட்ட இக்கோயில் மீண்டும் அழிவி னைச் சந்தித்ததால் விஜயநகர மன்னா்களின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது என்பதும் தற்போதுள்ள கோயில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியைச் சார்ந்தது என்பதையும் வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.


       இத்திருக்கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதி, தியான மண்டபம், பரிவார சந்நிதிகள், முகமண்டபம், விஸ்வநாதா் சந்நிதி, திருச்சுற்றுப் பிரகாரம் ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகின் றது.


   ஈசன் திருமூலநாதா் கிழக்கு நோக்கிய கருவறையில் சதுரவடிவிலான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார்். நாகாபரணம் அணிந்த ஈசனின் அருட்கோலம் அடியவா் களைக் கவரும் வண்ணம் எழிலுடன் உள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் ஆதவன் தன் ஒளிக்கற்றைகளை நீட்டி திருமூல நாதரை வழிபடுவது சிறப்பான அம்சமாகும்.


     அகத்திய மகரிஷி ஈசனின் திரும ணக்கோலத்தை இத்தலத்திலும் கண்டு மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


     கருவறை மற்றும் அா்த்தமண்ட பத்தின் புறச்சுவரில் சிற்ப வேலைப் பாடுகள் நோ்த்தியாக உள்ளன. தேவகோட்டங்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளும் அக்கால சிற்பிகளின் கவின்மிகு வேலைப் பாடுகளை இன்றும் நமக்கு உணா்த் துகின்றன.


   கருவறை மற்றும் அா்த்தமண்டபத்தின் பஞ்ச கோஷ்டங்களில் முறையே விநாயகா், ஶ்ரீதக்ஷ்ணாமூா்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துா்க்கை ஆகிய சிலாரூபங்கள் காட்சியளிக்கின்றன.


     இத்திருக்கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இச்சுரங்கப்பாதை இந்தத் தலத்திலிருந்து திருமுல்லை வாயில் மற்றும் திருவொற்றியூா் தலத்திற்குச் செல்வதாகக் கூறப்படு கின்றது. இத்திருக்கோயிலின் புனித தீா்த்தமாக "ஸ்வா்ணபுஷ்கரணி" யும் தல விருட்சமாக வில்வமும் உள்ளது.


ஶ்ரீஸ்வா்ணாம்பிகை.


    திருமூலநாதா் திருக்கோயிலின் அம்பிகை "ஶ்ரீஸ்வா்ணாம்பிகை" என்ற திருநாமத்துடன் வணங்கப்படுகின்றாள். ஸ்வா்ண ரூபமாக அணிமணியாபரணங் களுடன் காணப்படும் அம்பிகை இத்தலத் தில் தென்திசை நோக்கி எழுந்தரு ளியுள்ளார். பெளா்ணமி நாட்களிலும் வெள்ளிக் கிழமைகளிலும் அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திருமணத் தடைகள் நீங்கவும் மாங்கல்ய பாக்யம் நிலைக்கவும் இந்த அம்பிகையின் சந்நிதியில் பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்கின்றனா்.


 


ஶ்ரீதக்ஷ்ணாமூா்த்தி!



தெற்கு கோஷ்டத்தில் கல்லால விருக்ஷத்தின் கீழ் ஶ்ரீதக்ஷ்ணாமூா்த்தி வீராசனத் திருக்கோலத்தில் தன் பக்தா்களுக்குத் திருக்காட்சி தருகின்றார். இவரது மேல் இரு திருக்கரங்கள் நாகப்பாம்பினையும், அக்னி தண்டினையும் பற்றிய நிலையிலும் கீழ் வலது திருக்கரம் சின் முத்திரை தாங்கியும் இடது திருக்கரம் புத்தக முத்திரையில் ஏடு ஏந்திய திருக்கரமாகவும் காணப்படுகின்றது. சிரசினை ஜடாபாரம் அலங்கரிக்கிறது.


   வலது செவியில் அணிகள் ஏதும் இன்றி நீள் செவியாகவும் இடது செவியில் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றது. திருக்கழுத்தில் உருத்திராட்ச மணி, தோள்களில் தோள்வளை, முன்கைகளில் கைவளை, இடையில் தொடை வரை இடைக்கச்சை ஆகிய அணிகலன்கள் ஆலமா் செல்வனை அலங்கரிக்கின்றன. இச்சிற்ப வடிவம் 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என தொல்லியல் ஆய்வாளா் கள் தெரிவிக்கின்றனா்.


   மாணவா்கள் கல்வியில் சிறக்கவும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறவும் வியாழக்கிழமைகளில் ஶ்ரீதக்ஷ்ணாமூா்த் திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனா்.


ஶ்ரீபைரவமூா்த்தி


    இத்திருக்கோயிலில் காணப்படும் பைரவா் திருவுருவச் சிலையில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கதாகும். சதுா் புஜங்களுடன், விரிந்த அனல் மகுடம், கண்டிகை, மணிவடம், தோள்வளை, அரைஞாண் போன்ற அணிகலன்க ளுடன் காணப்படுவதோடு இவரது வாகனமான நாய் மிகவும் எழிலாக அமைந்துள்ளது. பைரவரின் மேல் வலது திருக்கரம் உடுக்கையைப்பற்றியுள்ளது. இடது திருக்கரம் பாசக்கயிற்றைப் பிடித்துள்ளது. கீழ் வலது திருக்கரம் திரிசூலத்தையும் இடது திருக்கரம் கபால த்தையும் ஏந்தி சீற்றம் பொங்க திருக்காட்சி தரும் இச்சிலையின் காலம் 19 ஆம் நூற்றாண்டு என அறியப்படு கின்றது. காலத்தில் பிந்தையதாக இருப்பினும் இச்சிலையில் காணப்படும் வேலைப்பாடுகள் அனைவரையும் ஈா்க்கின்றன.


   எதிர்மறை சக்திகளின் (Negative forces) பிடியிலிருந்து தப்பிக்க இந்த மூா்த்தியை தேய்பிறை அஷ்டமி நாள்களில் பக்தா்கள் பெருந்திரளாக வந்து வழிபாடு செய்கின்றனா்.


தொன்மைக்கு ஆதாரமான


சுப்ரமண்யரின் சிற்பம்.


   இத்திருக்கோயில் பல்லவா் காலம் முதலே சிறப்புடன் இருந்தது என்பதற்கு ஆதாரமாக ,கி.பி. 8 ஆம் நூற்றாண்டி னைச் சார்ந்த பல்லவா் கால "சுப்ரமண்யரின்" சிற்பம் ஒன்று இன்றும் இத்தலத்தில் காணப்படுகின்றது.


   சதுா்புஜங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் அக்கமாலையும், கெண்டியும் முன்கரங்களில் ஒன்றினை அபய ஹஸ்தமாகக் கொண்டு அமா்ந்த திருக்கோலத்தில் காணப்படும் சுப்ரமண்யரின் இச்சிலையே இத்திருக்கோயிலின் புராதனத்தை ப்பறைசாற்றிக் கொண்டுள்ளது.


ஜேஷ்டாதேவி


    பல்லவா் காலத்தைத் தொடா்ந்து சோழ மன்னா்களின் ஆட்சிக்காலத் திலும் இக்கோயில் சிறப்புற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாக சோழ மன்னா்களால் வணங்கப்பட்ட ஜேஷ்டாதேவியின் புராதன சிற்பமும் இத்தலத்தில் உள்ளது. தொடா்ந்து விஜயநகர மன்னா்களின் காலத்தில் முழுவதுமாக இத்திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்ட போது புராதன ஆலயத்திற்குரிய பல சான்றுகள் மறைந்துள்ளன.


பெருந்தேவனார்


  "பாரதம் பாடிய பெருந்தேவனாா்" என்ற புலவா் புழல் திருத்தலத்தில் வாழ்ந்தவா் என்று கூறப்படுகிறது. இவா் சங்க காலப் புலவா்கள் வரிசையில் இல்லை என்றாலும் சங்க நூல்கள் தொகுக்கப் பட்ட காலத்தவா் என்பதை அறியமுடிகி ன்றது. இவரால் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.


   அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை மற்றும் புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. இவரது காலம் கி.பி. 700 க்கு முன்பு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.


தேவார மூவரில் தம்பிரான் தோழரான சுந்தரா் இத்தலத்திற்கு வந்து ஈசனைத் தரிசித்து மகிழ்ந்துள்ளார்.


மனநோய் தீா்க்கும் மகேசன்!


   மனநிலை சரியில்லாத அன்பா்கள் பெளா்ணமி நாளில் இத்தலத்திற்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்ய நோய் குணமாகும் என்ற நம்பிக்கை பக்தா்களிடையே உள்ளது.


  மேலும், மிதுன மாதத்தில் வரும் (ஆனி மாதம்) பெளா்ணமி நாளில் இத்தல ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகின்றது. 64 வகைகளில் ஆன மூலிகைச் சாறினைக் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இச்சாறு மனநிலை சரியில்லாத வா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படு கின்றது.


  ஈசனே தன் திருக்கரங்களால் வழங்கும் பிரசாதமாகக் கருதி இச் சாறினை அருந்த மனநோய் உடன டியாகக் குணமாவதாக பக்தா்களிடையே அதீத நம்பிக்கை உள்ளது. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராத நோய்களெல்லாம் தீா்த்து வைக்கும் இத்தல ஈசனை இந்நாளில் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.


கல்வெட்டுச் சிறப்பு.


   தொண்டை மண்டலத்து 24 கோட் டங்களில் புழல் கோட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இத்தலத்து ஈசன் கல்வெட்டுகளில் "புழல் நாயனார்" என்று வழங்கப்படுகின்றார். இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் கா்ப்பக்கிரகத்தின் அதிட்டானத்திலும் முன் மண்டபத்திலும் இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.


   இக்கல்வெட்டுகள் சம்புவராய மன்னரான ராஜநாராயண சம்புவராயா், விஜயநகர மன்னர்களான முதலாம் தேவராயன், அச்சுதராயன் போன்ற அரசா்களின் கல்வெட்டுகளாகும். புழல் கோட்டத்திற்கு "விக்கிரம சோழவளநாடு" என்ற பெயா் வழங்கிய செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.


   விஜயநகர மன்னா்கள் காலத்தில் இவ்வூா் மக்கள் இக்கோயிலுக்கு அளித்த நிலதானங்கள் மற்றும் கொடைகள் பற்றியும், இக்கோயிலில் நடந்த திருவிழாக்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றியும் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.


  இக்கோயில் முகமண்டபத்தை அலங்கரிக்கும் சித்திரத் தூண்கள் பன்னிரெண்டிலும் எழில் வாய்ந்த சிற்பவடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் கி.பி. 17−18 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தவையாகும். சிற்பக் கலைக்கு சிறந்த எடுத் துக்காட்டாகத் திகழும் இச்சிற்பங்கள் விஜயநகர மன்னா்களது வேலைப்பாடு கள் ஆகும்.


    சென்னைக்கு மிக அருகிலேயே உள்ள இந்த ஆலயத்தை பக்தா்கள் ஒரு முறையாவது சென்று வழிபடுவது அவசியமாகும். உடல் பிணி மட்டுமல்லாது நம் உள்ளப் பிணியும் புழல் திருமூலநாதரின் திருவருளால் குணமாவது உறுதி!


  சென்னையிலிருந்து ரெட்ஹில்ஸ் மார்க்கமாக நெல்லூா் செல்லும் பாதையில் உள்ளது புழல் திருத்தலம். கோயம்பேடு பறநகா் பேருந்து நிலையத்திலிருந்து பலபேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன.


  புழல் மத்திய சிறை பேருந்து நிலையத்தில் இறங்கி பிரதான சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் சென்றால் திருமூலநாதா் திருக்கோயிலை அடையலாம்.


   இத்தலம் காலை 6.30 மணிமுதல் 11.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.


    மேலும் விபரங்களுக்கு திருக் கோயிலின் அா்ச்சகா் திரு நடராஜ குருக்கள் அவா்களை 9566258425 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்https://youtu.be/awRd8Kr2oeY



.


   


கட்டுரை : முன்னுர ரமேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,