இருளின் முடிவில்

இருளின் முடிவில் ...










 

                                                                                         

வான்பெயல் ஓய்ந்தது 

முகில்கள் உலர்ந்து கலைந்தன 

வறண்டு வற்றி அடிசுட்டது தரை 

தளிரும் தருவும் 

தாக்குப்பிடித்து வேரில் நின்றன;

சில மாதங்கள்தான் 

மேகம் திரளாகிக் கருக்கொண்டு 

மழை மீண்டும் வரும் 

பசும்புல் தலை பச்சையம் சேர்த்து 

உயிர்கள் தழைக்கும்.

 


நூலகம் தீப்பற்றிக் கருகியது 

பல்லாயிர ஆண்டுச் 

சிந்தனைகளின் சங்கமம் 

சாம்பலாய்த் தீய்ந்தது; 

நாளடைவில் 

திசையெங்கும் திரட்டிக் 

குருவிகள் கொண்டிங்கு சேர்க்கும் 

மீட்டுருவாக்கும் 

ஊற்றுக்கண்கள் 

புதியனவாய்த் திறந்து 

அறிவுக் கருவூலம் 
அகன்று விரியும்.

 


படையெடுப்பின் முடிவில் 

பகைமுகாம் தாண்டவம் 

நெல்லொடு கரும்பும் வாழையும் 

விளைநிலங்கள் மனைகள் தோறும்

எருக்கும் பீர்க்கும் எங்கும் படர்ந்தன 

பெருவழிப்பாதை புதராய் அடர்ந்தது; 

அதுவே முடிவல்ல

இழந்தோர் கிளர்ந்தெழுவர் 

உழைப்புத் துளிகளின் விதைப்பில் 

முட்செடி அழித்து உரமாக்கி 


முல்லை மல்லிகை மகிழம் மலரும் 

நிழல்மரம் வளர்ந்து கனிகள் குலுங்கும் 

சிதறுகள் திரண்டு 

சிங்கார மாளிகை எழும்பும்.

 


கதிரவன் மறைந்தான் 

கனையிருள் சூழக் கவிந்தது; 

அதற்கு முன்பே 

தண்ணிலவு எழுந்து 

குளிரொளி உமிழும் 

அகல்விளக்கு அங்கங்கு 

கண்சிமிட்டிக் காத்திருக்கும் 

கருக்கல் நிரந்தரம் இல்லை 

விடியல் வெளிச்சம் இருளை விலக்கும்                                               


காலைச் சூரியன் புதிதாய்க் 

கிழக்கில் புலரும் இரவின் முடிவிலே !


 

- வெ.பெருமாள்சாமி

 


 

 


 


 

 


 







 



 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி