ஒலியும் ஒளியும் --தொடர்
ஒலியும் ஒளியும் தொடர்
பகுதி ( 1 )
----------------------
'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலும் அதில் எஸ்பிபியின் குழைவான காதல் கலந்த குரலும் நம்மை ஈர்க்கும். எவர்கீரின் பாடல்களில் இதுவும் ஒன்று .எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடலும் கூட, உழைப்பாளர்கள் தினத்தில் 1969ம் வருடம் எம்.ஜி.யார் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் அவர்களின் இயக்கத்தில் வெளியான படம் 'அடிமைப்பெண்.'
1964ல் துவங்கப்பட்ட படம் ஐரோப்பிய வரலாறுகளில் அடிமையின் காதல் என்று நாவலாக வெளிவந்த கதைதான் படத்தின் கரு.
வில்லனாக நம்பியார், பவளநாட்டு அழகியாக கே.ஆர்.விஜயா, ரத்னா கதாநாயகியாக சரோஜாதேவி என்று கலக்கல் காம்பினேஷனில் உருவான படம் அரைமணி நேரப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்க அதே நேரம் குண்டுகள் துளைக்கப்பட்டு மீண்டு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கிடப்பில் போட்டிருந்த நான்கு படங்களில் முதலாவதாக கையிலெடுக்கப்பட்ட படம்தான் இந்த அடிமைப்பெண்.
இரண்டாம் முறை தொடங்கும் போது சரோஜாதேவி அவர்கள் மணவாழ்க்கைக்குள் சென்றுவிட, அவருக்கு பதில் ஜெயலலிதா அவர்கள் இரட்டை வேடம் ஏற்று நடித்த படம்.
ஜெய்பூர் அரண்மனையின் அழகையும் கம்பீரத்தையும் மிஞ்சியிருக்கும் அப்பாடலில் அவர்களின் நடிப்பு. காதலைக் கூட கர்வமாய் வெளிப்படுத்தும் விழிகள், காதலில் உள்ளம் தொய்தாலும் மிடுக்கு குறையாத நடை,
தீண்டியும் தீண்டாமலும் அதே நேரம் தன் காதல் நாடகம் என்று அறிந்து கொள்ளாத தோற்றத்தில் அழகான ஆளுமையான காதல் விளையாடல்கள். பவளக்கொடி கதாப்பாத்திரம் நூறு நீலாம்பரிகளை அசால்டாக தூக்கி சாப்பிட்டு இருப்பார் ஜெ.
கதைப்படி பனிப்புயலில் சிக்கி பவளக்கொடியிடம் சிக்கிக்கொண்ட காதலியைக் காக்க அரசியிடம் காதலாய் கரையும் காட்சியமைப்பில் வரும் பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா'
SPB தான் பாடுகிறார் என்ற தகவல்கள் எல்லாம்வெளியான பிறகும், ஒரு மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் உடல்நிலை சரியாகும்
வரையில் காத்திருந்து அதன் பிறகு பாடலை ரெக்கார்டிங் செய்தார்கள் .
SPB ஒரு நேர்காணலில் 'இந்தப் பாடலை நான் பாடுகிறேன் என்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் நீங்கள் பகிர்ந்து இருப்பீர்கள் .
இப்போது வேறொருவருக்கு கொடுத்து அதனால் உங்களுக்கு மனசங்கடமும் வருத்தமும் வரும். வேறு ஒரு பாடலில் நாம் இணைந்தாலும் இந்தப் பாடலில் பாடவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கும். அதனால்தான்
காத்திருந்தோம் 'என்று எம்ஜிஆர் அவர்கள் சொல்லியதாக குறிப்பிட்டு இருந்தார்.
கே.வி. மகாதேவன் இசையில் படத்தின் எல்லா பாடல்கள் நெஞ்சை அள்ளும் ரகம்./ மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் சில்வர் ஜீப்ளி கொண்டியவள் அடிமைப்பெண்.
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இப்படம் வென்றதோடு சிறந்த இசையமைப்பாளர் விருதை திரு. கே.வி. மகாதேவன் அவர்களுக்கும் பெற்றுத்தந்தது
---லதாசரவணன் .
Comments