உண்மையான பக்திக்கு இறைவனே நம் வீட்டிற்கு வருவார்
ஆருத்ரா தரிசனம் 10.01.2020
: உண்மையான பக்திக்கு இறைவனே நம் வீட்டிற்கு வருவார் - திருவாதிரை களியின் வரலாறு
மதுரை: ஏழை பக்தனான சேந்தனாரின் உண்மையான பக்தியை உலகுக்கு வெளிக்காட்டவே, சிவபெருமான் தரிசனம் தந்த மார்கழி திருவாதிரை நாளே ஆருத்ரா தரிசனம் எனக் கொண்டாடப்படுகிறது. சேந்தனாரின் வீட்டில் சிவபெருமான் அடியாராக வந்து களி அமுதை உண்டார். அன்று மார்கழி திருவாதிரை நாள். அன்று முதல் அந்த களி அமுதானது திருவாதிரை களி எனப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.
பக்தி என்பது அடிமனதின் ஆழத்திலிருந்து தானாக வெளிப்படுவது. அதை யாரும் கட்டாயப்படுத்தி வெளிக்கொண்டு வரமுடியாது. அது போலவே எளிமையான பக்திக்கு மட்டும் தான் இறைவன் முதலிடம் கொடுப்பான். பகட்டாக, உடல் முழுவதும் திருநீரு பூசிக்கொண்டோ, திருமண் இட்டுக்கொண்டோ, சதா சர்வகாலமும் நாவில் இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தாலோ இறைவனின் தரிசனம் கிடைக்காது.
அதற்கு மாறாக, ஏழ்மை நிலையில் இருந்தாலும், ஒரு வேளை உணவிற்கே வழியில்லாவிட்டாலும் கூட, அது பற்றிய சிந்தனையே இல்லாமல், உழைப்பதையே கண்ணாக கருதிக்கொண்டு, எந்நேரமும் மனதில் இறைவனையே நினைத்து வாழ்ந்து வருவோர்க்கு தான் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கே தரிசனம் தந்து தன்னோடு ஆட்கொள்வார். அதை உணர்த்த உருவானதே ஆருத்ரா தரிசனமும் திருவாதிரை களியும்.
தானாகவே திறந்த சிறைக்கதவுகள்
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வந்தவர் சேந்தனார். பட்டினத்தார் துறவறம் மேற்கொண்ட உடன், அவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் சூறைவிட்டார். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதையறிந்த பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.
சேந்தனாரை சோதித்த நடராஜர்
சிறையிலிருந்து வெளியில் வந்த சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். விறகுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது.
சிவனடியாருக்கு காத்திருந்த சேந்தனார்
விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் காசில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். இதனால், வீட்டிலிருந்த கேள்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருக்க தொடங்கினார். நேரம் சென்றதே தவிர, இவர் வீட்டுக்கு சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை. இதனால் மனம் வருந்திய சேந்தனாரின் உண்மையான எளிமையான பக்தியை உலகிற்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்டார் தில்லை நடராஜர்.
பார்சல் வாங்கிய நடராஜர்
ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக்கதவை தட்டினார் நடராஜ பெருமான். கதவை திறந்த சேந்தனார், வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து, அவருக்கு தன் கையாலேயே களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.
கண்டராதித்தரின் சிவ வழிபாடு
இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர் தினசரி செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார்.
கண்டராதித்தரின் கனவில் நடராஜர்
கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், சிவஞானச் செல்வரே வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உங்களுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார். அதை நினைத்து அகமகிழ்ந்த சோழ மன்னர், ஆஹா... ஆஹா... என்ன அற்புதம், சேந்தனாரின் அன்பே துய அன்பு என்று எண்ணியவாறே அயர்ந்து தூங்கிவிட்டார்.
கருவரையில களிச்சிதறல்கள்
மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார்.
நகராமல் அடம்பிடித்த தேர்
அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகராமல் அடம் பிடித்தது.
அசைந்தோடிய தேர்
அந்த சமயத்தில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 பாடல்களை இறைவனை நினைத்து பாடினார். உடனே, தேர் அசைந்தோடி தானாகவே சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.
திருவாதிரைக்களி
இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி சொல்லப்படுகிறது.
----மஞ்சுளாயுகேஷ்
Comments