அக்கரைப்பட்டி தென் ஷீரடி.    

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில், ரூ.7 கோடியில் புதிதாக பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டு வரும் ஷீரடி சாய்பாபா கோயிலின் குடமுழுக்கு விழா ஜன. 20-ம் தேதி நடைபெற்றது.


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக விருக்ஷா அறக்கட்டளை சார்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சாய்பாபா கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு  அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் கடந்த 21.04.2014-ல் சாய்பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.


கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை 22.10.2015-ல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 12.2.2016 முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியது .


இந்தப் புதிய கட்டிடத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைதளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய்பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டது. இங்கு பாபாவின் சமாதி மந்திர், விநாயகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், தத்தாத்ரேயர் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.


நாமக்கல் என்.டி.சி. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் என்டிசி குழுமத்தின் தலைவர் கே.சந்திரமோகனை நிர்வாக அறங்காவலராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் குழுவினர் மற்றும் பக்தர்கள் இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.


      இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் ஜன.17-ம் தேதி தொடங்கி  பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, ஜன.20-ம்தேதி காலை 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது


              தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாய் பக்தர்கள் தங்களது பிரார்த்தைனைக்காகவும், சாய் பாபாவிற்கு ஆராதனை செலுத்துவதற்காகவும் சிறிய அளவிலான கோயில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். இருப்பினும், சாய் பக்தர்கள் அனைவருக்கும் ஷீரடி புனிதப்பயணம் என்பது மிகப்பெரிய கனவே , அவர்களது கனவை நினைவாக்கும் வகரையில் தென் ஷீரடியை கட்டமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்கு நிகராக எந்த அம்சங்களிலும்  குறைவில்லாமல் தத்ரூபமாக கட்டிடக்கலையில் தொடங்கி, சமாதி மந்திர், சாவடி, துவாராகாமாயி, லெண்டித்தோட்டம் ஆகியவற்றோடு அச்சு அசலாக அதே மகிமையோடும், கம்பீரத்தோடும் தனக்கான ஆலயத்தை முழுவதுமாக பக்தர்களின் உதவியுடனேயே எழுப்பப்பட்டுள்ளது. 


 


 


ஷீரடியில் இருக்கும் சாய் பாபாவின் திருமேனியைப் போலவே தென்ஷீரடியிலும் 5 அடி 5 அங்குல உயர வெண் பளிங்கு திருஉருவத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஷீரடியில் சாய்பாபா தனக்கான இருப்பிடத்தை ஒரு வேப்பமரத்தின் அடியில்தான் அமைத்துக்கொண்டார். தென்ஷீரடியிலும் அற்புதம் பொங்க அதேபோன்ற வடிவில் வேப்பமரத்தின் அடியில்தான் தனக்கான குருஸ்தானத்தை அமைத்துள்ளார். .


 


           ஷீரடியில் நடப்பதைப் போலவே அங்கு கடைபிடிக்கப்படும் அதே நேரத்தில் தென் ஷீரடியிலும் தினமும் 4 வேளை அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6.30 மணிக்கு காக்கட் ஆரத்தி, நண்பகல் 12 மணிக்கு மத்யான் ஆரத்தி, மாலை 6 மணிக்கு தூப் ஆரத்தி, இரவு 7 மணிக்கு சேஜ் ஆரத்தி என இடைவிடாமல் ஆரத்தி பூஜைகள் நடக்கின்றன. கோயிலின் துவாரகாமாயியிலும் அணையா நெருப்புத் தனல் கொண்ட துனி அமைக்கப்பட்டு பக்தர்கள் வேண்டுதலுக்காகவும், நேர்த்திக்கடனாகவும் காணிக்கையாக அளிக்கும் மட்டைத்தேங்காய் கொண்டு ”உதி”  (விபூதி) பிரசாதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.


தினமும் 100 பேருக்கு மேல் ஒரு வேளை அன்னதானம், வியாழக்கிழமைகளில் 4 வேளை அன்னதானம் நடக்கிறது. சாய்பாபாவிற்கு உகந்த வியாழக்கிழமைகளில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளாக பங்கேற்கின்றனர். அன்றைய தினம் சாய்பாபாவின் திருவுருவத்தை கோவிலைச்சுற்றி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பல்லக்கில் ஊர்வலமாக சுமந்து செல்கின்றனர்.


 


உச்சிப்பிள்ளையாரும், தாயுமானவரும் குடிகொண்ட மலைக்கோட்டை, அரங்கநாதர் பள்ளிகொண்ட திருப்பதிக்கு நிகரான திருவரங்கம், பஞ்சபூதங்களில் நீருக்கு உரியதாக ஜம்புகேஸ்வரர் ஆட்சி செய்யும் திருவானைக்கோவில், அகிலம் போற்றும் அம்மனாக அருள்பாலிக்கும் சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன் கோவில், வயலூர் முருகன் கோயில் வரிசையில் திருச்சிக்கு பார் முழுவதும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது அக்கரைப்பட்டி தென் ஷீரடி.    
 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,