ஸ்மார்ட் மின்கம்பம்

ஸ்மார்ட் மின்கம்பம்













'    ஸ்மார்ட் சிட்டி' செயல்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நவீன வசதிகளைப் பெற்றுவரும் சென்னை மாநகராட்சி, தற்போது புதிய விஷயங்களுடன் களமிறங்கியிருக்கிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்கம்பம், பார்ப்பவர்களை ஒருகணம் வியப்பில் ஆழ்த்துகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், இந்த ஸ்மார்ட் மின் கம்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட நிதியின் கீழ் இந்த ஸ்மார்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 இடங்களில் இதைப் பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது.




 


 


 





      இந்தக் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 24 மணி நேரமும் காட்சிகள் பதிவாகின்றன. இதன்மூலம், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும். ஏற்கெனவே, முக்கியமான சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், நகரத்தின் சில தெருக்களில் பாதுகாப்பின்மையை உணர்வதாக மக்கள் கூறுகின்றனர். வசதி உள்ளவர்களின் வீட்டைச் சுற்றி கேமராக்கள் வைத்துக்கொள்கிறார்கள். பாதுகாப்பு கேமரா வைக்க முடியாத சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவது இதன்மூலம் தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.








 


 








     மழை அளவைக் கணக்கிடும் கருவியும் இந்தக் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை உடனடியாகப் பெற முடியும். அப்படி பெறப்படும் தகவல்கள் மூலம், அந்தப் பகுதியின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியும்.


       பேரிடர் காலங்களில் மக்களை அதிகம் பாதிப்பது தொலைத்தொடர்பு துண்டிக்கப்படுதல். கடந்த காலங்களில், தகவல் பரிமாற்றம் இல்லாமல் பல உயிர்களை இழந்திருக்கிறோம். அதனைச் சரிசெய்யும் வகையில், இதிலுள்ள ஒலிபெருக்கியை வைத்து எல்லா இடங்களுக்கும் மீட்பு குறித்த தகவல்களை அனுப்ப முடியும்.


                 அதுமட்டுமின்றி, செல்போனில் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், செல்போனில் சார்ஜ் இல்லாமல் இருந்தாலும், அதற்கும் ஒரு வழியை வைத்திருக்கிறது இந்தக் கம்பம். கம்பத்தில் ஒரு பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பட்டன் உதவியுடன் பொதுமக்களாலும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். தங்கள் நிலையைக் கூறி மீட்புப் பணியை அழைக்க முடியும்.




                 காற்று மாசை கணக்கிடும் கருவியும் இந்தக் கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் காற்று மாசின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதைத் தொடர்ந்து, அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.



 


 









"4, 5 இடங்களில் கிடைக்கும் தகவல்களை வைத்து சொல்லப்படும் மழையளவு, இப்போது 30 இடங்களில் இருந்து கிடைக்கிறது. அதனால் இன்னும் துல்லியமாகக் கணித்து, மழை பாதிப்பு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். காற்று மாசு எங்கெல்லாம் அதிகம் இருக்கிறது, எங்கெல்லாம் மிதமாக இருக்கிறது என்று அறிந்துகொள்வதால், மேற்படி திட்டங்கள் வகுக்க ஏதுவாக இருக்கும்" என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.




முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வரும் சில கம்பங்களின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, நகரம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒளி, ஒலி, சிசிடிவி, மழை அளவு கண்டறியும் கருவி, காற்று மாசு அளவு கணக்கிடும் கருவி, அவசர காலத்தில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளும் வசதி எனப் பல அம்சங்கள் அடங்கிய ஒற்றைக் கம்பம், சென்னைக்குப் புதிய பாதையைக் காட்டும்.


பேரிடர் காலங்களில், முன்னெப்போதும் போல மிகக் கடினமாக இல்லாமல் இருக்கும் என நம்பிக்கை தருகிறது, இந்த 'ஸ்மார்ட்' மின்கம்பம். இரண்டு நிமிடம் நின்று சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்லும் அளவுக்கு ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்பங்களோடு அமைந்துள்ளது.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,