அந்த நாள் நெஞ்சிலே நண்பர்களே

பள்ளியில் படித்த மாணவர்களுடன் சந்திப்பு மு.க.ஸ்டாலின்



                                         சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 1970-ம் ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. அதே பள்ளியில் படித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த குழுவுடன் சேர்ந்து படித்தவர் ஆவார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் 125 பேர் பங்கு பெற்றனர்.


 


                2-வது நாளாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். இதில் முன்னாள் மாணவர்கள் சார்பில் தங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்கள் ஜோசப் (வயது 92), சுந்தரகிருஷ்ணன்(84), ராபர்ட் ஜோதிராஜ்(83), நாராயணன்(82), லட்சுமி நாராயணன்(82), சுந்தர்சிங்(81), ஜெயராமன்(81), மைத்ரன்(85), பட்டாபிராமன் ஆகிய 9 பேருக்கு தலா ரூ.2½ லட்சம் சன்மானம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மாணவராகவே தலைமை தாங்கி ஆசிரியர்களை கவுரவப்படுத்தினார்.


 


முன்னதாக மு.க.ஸ்டாலின் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள். , நண்பர்களுடன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.


 


நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பள்ளி பருவம் பற்றி தன்னுடன் படித்த நண்பர்களுடன் மனம் விட்டு பேசியதாவது:-


 


 


50 ஆண்டுகளுக்கு பிறகு, என்னோடு படித்தவர்களுடன் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பள்ளியில் தான் என்னுடைய சகோதரர்கள் மு.க.முத்து, மு.க.அழகிரி படித்தார்கள். அந்தவகையில் என்னையும் இதே பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று மறைந்த முரசொலி மாறன் அதற்கான முயற்சியை எடுத்தார்.


 


இந்த பள்ளியில் சேரவேண்டும் என்றால் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற வேண்டும். ஆனால் நான் அந்த தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன். ஆகவே என்னை சேர்க்கமுடியாது என்று பள்ளி நிர்வாகம் சொல்லிவிட்டது.


 


 


அந்த நேரத்தில் மேயர் பதவி மிகப்பெரிய பதவி ஆகும். அப்போது மேயராக இருந்தவர் குசேலன். அவருடைய காரில் முரசொலி மாறன் மற்றும் நானும் பள்ளிக்கு வந்தோம். மேயரின் பரிந்துரையால், அப்போதைய தலைமை ஆசிரியர் சவரிராயர் என்னை இந்த பள்ளியில் சேர்த்தார். பள்ளி படிப்பை முடித்து நான் மேயராக பதவியில் இருந்த நேரத்தில், பலமுறை பள்ளிக்கு வந்துவிட்டேன். அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கிறேன்.


 


நான் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு 29 'சி' மாநகர பஸ்சில் ஏறி வருவேன். நாங்கள் படிக்கும்போது இருபாலர் படிக்கும் வசதி இந்த பள்ளியில் இல்லாமல் போய்விட்டதே என்று இப்போது கூட என்னுடைய துணைவியாரிடம் சொல்லி கொண்டு இருந்தேன்.


 


ஆசிரியரிடம் வாங்காத அடி இல்லை


 


நான் படிக்கும் போது ஆசிரியர்களிடம் அடி நிறைய வாங்கி இருக்கிறேன். அதிலும் ஜெயராமன் ஆசிரியரிடம் வாங்காத அடியே இல்லை. இப்போது அவரை பார்த்தால் கூட பயமாக தான் இருக்கும். இவர்களுக்கு பயந்து கொண்டே பாதி நாள் வகுப்புக்கு செல்லாமல் 'கட்' அடித்துவிடுவேன்.


 


என்னுடன் படித்த மவுலானா அப்துல் ரகீமுடன் சேர்ந்து தினமும் மதியம் வெளியே சென்று 'டீ' குடிப்பேன். எனக்கு சிகரெட் பிடிப்பதில் விருப்பம் கிடையாது. ஆனால் ஸ்டைலுக்கு கையில் சிகரெட் வைத்துக்கொண்டு, அங்கே வருபவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருப்பேன். அதுவெல்லாம் பசுமையான நினைவுகள்.


 


இப்போது என்னுடைய நண்பர் அப்துல்ரகீம் உயிருடன் இல்லை. அந்த வாழ்க்கை மீண்டும் வராதா? என்ற ஏக்கத்தில் இருந்து வருகிறேன். அப்போது இருந்த நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் நெகிழ்ச்சி அடைகிறேன். என்னை உருவாக்கிய ஆசிரியர்களையும், என்னுடன் இருந்த நண்பர்களையும் என்றும் மறக்க முடியாது.


 


இவ்வாறு அவர் பேசினார்.


 


நிகழ்ச்சி முடிந்ததும், சக முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்ட மு.க.ஸ்டாலின், அவர்களுடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டு புறப்பட்டு சென்றார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,