இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம்
நீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா
இயக்குனர் பா.இரஞ்சித் முற்றிலும் மாறுபட்டவர். கலை மக்களுக்கானது எனும் மாவோ கூற்றுக்கு ஏற்ப, சமூகத்தில் உள்ள அடுக்குமுறைகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.
நீலம் புரொடக்சன்ஸ், நீலம் பண்பாட்டு மையம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை திரைப்பட இயக்கம் என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு அவர் உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
. தனது கனவிலிருந்து உருவான நீலம் பண்பாட்டு மையம், நீலம் புரொடக்சன்ஸ் போன்றவற்றை தொடர்ந்து "நீலம் பதிப்பகம்" ஒன்றை ஆரம்பித்துள்ளார். நீலம் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதும், மூத்த எழுத்தாளர்கள் & சிந்தனையாளர்களின் படைப்புகளை மறுபதிப்பு செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி நீலம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் (தொகுப்பு வாசுகி பாஸ்கர்), எம்.சி.ராஜா சிந்தனைகள் (தொகுப்பு வே. அலெக்ஸ்), பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம் (ஏழுமலை. கலைக்கோவன்), எண்பதுகளின் தமிழ் சினிமா (எழுத்தாளார் ஸ்டாலின் ராஜாங்கம்), பீஃப் கவிதைகள் (கவிஞர் பச்சோந்தி) என்ற ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
நீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா மற்றும் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அறிமுக விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள பக்ஸ் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் பா. கல்யாணி, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, ம. மதிவண்ணன், அழகிய பெரியவன், வெண்மதி வே. அலெக்ஸ், சுகிர்தராணி, பிரேமா ரேவதி, க. ஜெயபாலன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது, எழுத்தாளர்களை உருவாக்குவதற்கும், அவர்கள் யோசிக்கும் கருத்துக்களை எந்த வித தடையும் இன்றி பதிவு செய்வதற்காகவும், மனித சமுதாயத்திற்கான தேவையான புத்தகங்களை வெளியிடும் நோக்கத்திலும் நீலம் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Comments