போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்
போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 19/1/2020 அன்று தொடங்கியது. இந்த முகாமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனது கையால் போலியோ சொட்டு மருந்தை வழங்கி, பொம்மைகளை பரிசாக அளித்து பேசினார்-
முதலில் ஆண்டுக்கு 2 முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் போலியோ நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் முழுவதுமாக இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தாலும், போலியோ நோய் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண்டுக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கி கொண்டு இருக்கிறோம்.
இந்த மருந்து குறித்த காலத்திலே வழங்கப்படும் காரணத்தால் 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது.
போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்காங்கே இருக்கின்ற மையங்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து தங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். பூமியில் இருந்து இந்த போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என உறுதி ஏற்போம்.
போலியோ நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டால் அதனால் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தை கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல ஏற்பாட்டை இன்றைக்கு செய்திருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை கொளத்துரில் நடைபெற்ற போலியோ சொட்டு முகாம் காட்சிகள்
Comments