நூலும் திரையும் - 2

நூலும் திரையும் - 2


சிதம்பரம் என்ற 15 வயது பையன், வடக்கூரானை ஒரு அரையிருள் நேரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிடுகிறான். 


உண்மையில், அவனுக்கு வலக்கையை எடுக்கவேண்டும் என்பதுதான் எண்ணம். 
வசம் தவறி விலாவில் பாயவே உயிருக்கு உலை வைத்துவிடுகிறது.


ஆள் சாய்ந்ததுமே இவன் ஓட்டம் எடுக்கிறான் .....


பின்னாலேயே நாலைந்து பேர் துரத்தி வருகிறார்கள்.
இவன் ஒரு கைக்குண்டை எடுத்து அவர்களை நோக்கி வீசுகிறான். அது வெடித்ததில் யாருக்கு எவ்வளவு சேதமோ காயமோ..


அதற்கு மேல் யாரும் தொடரவில்லை. ஒரு சத்தத்தையும் காணோம்.. அவ்வளவுதான்.


ஊரைத் தாண்டி ஒரு இடத்தில் அய்யாவும்(அப்பா) மாமாவும் அவனைச் சந்திக்கிறார்கள்.
 
அய்யாவுக்கு, நம்மை முந்திக்கொண்டானே என்று ஆதங்கம். தன் இயலாமை குறித்து சுய பச்சாதாபம். அவருக்கும் மாமாவுக்கும் அவனை நினைத்துப் பெருமை கூட.


நிதானித்து யோசித்து செய்ய எத்தனிப்பதற்குள் என்னாகுமோ. அப்படிச் செய்வதற்கு அவன் ஒன்றும் வயசாளி இல்லையே. 
இளங்கன்று இல்லையா.. நினைத்தான் கருவினான் நோட்டம் பார்த்தான் போட்டுவிட்டான்.


 எல்லாரும் சேர்ந்து, ஆத்தாவையும் தங்கச்சியையும் சித்தி ஊருக்கு அனுப்பிவைப்பது என்று முடிவு செய்கிறார்கள். நாயை மாமா வீட்டில் விட்டால் அத்தை பார்த்துக் கொள்வாள்.


மாமா ஊரிலேயே இருந்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிப்பார். 
அய்யா இவனிடம் வந்து வந்து போய்க் கொண்டிருப்பார்.
இப்படி ஏற்பாடாகிறது.


பேசி முடித்ததும் அவன் கிளம்பிவிடுகிறான். போய் ஊருணி கம்மா காடு மேடு எல்லாம் தாண்டி மலை உச்சிக்கு வந்துவிடுகிறான். எந்நேரமும் இடுப்பில் அரிவாளும் பாதுகாப்பாக இரண்டு கைக்குண்டுகளும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.


ராத்திரி ரெம்ப நேரம் கழித்து அய்யா வந்து சேர்கிறார். மலையின் எதிர்ச்சரிவில் ஒரு குகை போன்ற இடத்தில் தங்கிக்கொள்கிறார்கள்.


மாமா கொடுத்துவிட்ட மூட்டையைப் பிரித்து அதில் உள்ள சாப்பாட்டில் பாதியைச் சாப்பிடுகிறார்கள். அத்தை குழம்பும் காயும் அக்கறையாகக் கெட்டியனுப்பியிருக்கிறாள்.


இப்படியே, ஏழுநாள் மலங்காடு கம்மா கரும்புத் தோட்டம் சுடுகாடு சுடலமாடன் கோவில் சித்தி'வீடு அய்யங்கோவில் என்று மாறி மாறித் தங்குகிறான்.


ஒரு நாள் தங்கின இடத்தில் மறுராத்திரி இல்லை.


ஒவ்வொரு நாளும் அந்தியிலோ இருட்டிலோ அய்யா வந்து சேர்ந்துகொள்கிறார். 


கெட்டிக் கொடுத்த சோறு ரெண்டு வேளைக்குத் தாங்கிற்று. 
பெறவு அவனே பொங்கிக் கொள்ளுகிறான். 


ஒருமுறை மாமா வந்து அரிசி புளி கொடுத்துவிட்டுப் போனார். 
அங்கங்கே, விறகு கல்லடுப்பு கள்ளுக் கலயம் என்று கிடைக்கிற சாமான்களை வைத்து சமையலை முடித்துவிடுவான். அய்யா வருகிற சமயங்களில் இருவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.


கடைசிக்கு முந்தின நாள் ஆத்தா தங்கியிருக்கிற சித்தி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டான். 
மறுநாள் நடந்து வருகையில், வழியில் ஒரு பிஞ்சையில் சீனிக்கிழங்கு - தப்புக் கிழங்கு - கிள்ளி வந்து கோவில் அருகில் முன்பு யாரோ பொங்கல் வைத்த அடுப்பில் அங்கிருந்த உடைந்த பானை ஓட்டில் தண்ணீர் கோலி, அக்கிழங்கை வேகவைத்து, வரும்போது கடையில் வாங்கி வந்த கருப்பட்டியோடு ருசித்துச் சாப்பிடுகிறான்.


இத்தனை நாளும் தனியே அவன் இருக்கையில்,


 -- வடக்கூரான் தன் நிலத்தோடு நிலமாக அக்கம்பக்கத்து நிலங்களை வளைத்துப் போடுவதையும்
 -- இவர்கள் நிலத்தைக் கேட்டு அய்யா கொடுக்காததையும்
 -- அந்தக் கோபத்தில் இவனுடைய அண்ணனை ஆடு மேய்க்கையில்   வடக்கூரான் கொலை செய்ததையும்
 -- அவன் கொடுக்கும் காசுக்கு ஊழியம் செய்த போலீஸ்காரர்கள், இப்போது தன்னை வேட்டையாடச் செய்யும் முனைப்புகளையும் 
 -- அண்ணனுடைய திறமைகளையும், செய்நேர்த்தியையும்
 -- அண்ணனோடு ஆடு மேய்த்ததையும் கிட்டிப்புள் விளையாடியதையும்
  -- ஆத்தாவின் தைரியத்தையும்
  -- வெள்ளந்தியான அத்தையின் இளகின மனசையும்
  -- அத்தையின் பெண் சானகியும் தானும் அண்ணன் பின்னால் போய் விசாகத் திருவிழாவைக் கண்டு வந்ததையும்
  -- அவளோடு மலையேறித் திரும்பியதையும்
 -- கடைசிக்கு ஒருநாள் அவள் காய்ச்சல் வந்து செத்துப்போனதையும்
 -- தங்கச்சி, தான் வாங்கித் தரும் பண்டத்தை நாளெல்லாம் கொரித்துக்கொண்டும், தான் பச்சை ஓலையால் செய்து தரும் ஆபரணங்களை மாட்டிக்கொண்டும் திரியும் அலம்பல்களையும்
 -- ஊரில் நடந்த போராட்ட ஊர்வலத்தையும்
 -- அப்போது ஏற்பட்ட அமளியையும்
 -- துப்பாக்கிச் சூட்டையும் 
என்று,
 
இந்த ஏழு நாளும் அவன் விட்டுவிட்டு நினைவுபடுத்திவருவதை நாம் தொகுத்துக்கொண்டால் நமக்குக் கதையின் skeleton கிடைக்கிறது.


இன்னும், அய்யா வரும் நேரங்களில்  அவனோடு அவர் பேசி, 
°ஊருக்குப் போய்த் தெரிந்துவருகிற செய்திகள்
°போலீசு எல்லா இடத்திலும் தேடி விசாரிப்பது
° முந்தி இளைமைக் காலத்தில் பிறந்த ஊரில் , இது மாதிரி நிலத்தகராறில் அவர் செய்த கொலை 
°அதைத் தொடர்ந்து அவரது சிறை வாழ்க்கை
°ஊரிலுள்ள மனிதர்களின் குணாம்சங்கள் 
°ஆடுகளை விற்று கேசு நடத்தப்போவது
என அவர் பகிர்கிறவற்றையும் சேர்த்துக்கொண்டால் அதுதான் முழுக்கதை.


கடைசி நாளன்று, பக்கத்து ஊர் கோர்ட்டில் ஆசராவதென்றும், சிதம்பரம் சிறுவன் என்பதால், அய்யாதான் செய்தார் எனச் சொல்வதென்றும் முடிவு செய்து செயிலுக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். 
-------  -------  -------  -------  -----


இந்நாவலில் ஒரு வாசகராக நாம் நுகர்ந்து திளைப்பதற்கு நிரம்ப உண்டு. 
*பாத்திர வார்ப்புகளை மட்டும் கொண்டாடினாலே தீராது. 
*அந்த கரிசல் மண் சார்ந்து அந்த மக்களின் வாழ்வியல் சார்ந்து அறிதொறும் நம் அறியாமையே புலப்படும்.
*அந்த மொழி நடை மட்டும் தனியே எடுத்து வைத்து ஆய்வதற்குரியது.( நானும் அம்மொழிச் சொற்களை அங்கங்கு இப்பகிர்வில் கையாண்டுள்ளேன்).
*அவர் இதைத்தான் சொல்ல வருகிறேன் என்று சொல்லாமலே, அந்த மக்களிடையே நிலவும் -- போலித்தனமில்லாத பாசாங்கற்ற -- உறவும் புரிதலும் உரிமையும் பாசமும் எண்ணி மகிழ்ந்து போற்றுதலுக்குரியன.


(தொடரும்)
-------  -------  -------  -------  -----
                    (அடுத்து 'அசுரன்')...


  ---வெ.பெருமாள் சாமி


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி