மலைகளில் சிறந்தது திருத்தணிகை

திருத்தணிகை மலை...

மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று பற்றுகிறது கந்த புராணம்.
‘திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலோ... தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ... தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.

‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று ஸ்ரீமுருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யார்.

தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

ஸ்ரீசுப்பிரமணியர் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி, செல்வங்கள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூரணகிரி, உலகின் மூலாதாரமான ஈசனே தணிகாசலனை இங்கு பூஜித்ததால் மூலாத்திரி, பக்தர்களின் கோரிக்கைகள் நிமிடத்தில் நிறைவேறும் தலம் ஆதலால் க்ஷணிகாசலம், இங்கு நாள் தோறும் கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி, முருகப் பெருமான் பிரணவப் பொருளை உரைத்த தலம் ஆதலால் பிரணவதான நகரம், இந்திரன் வரம் பெற்ற தலம் ஆதலால் இந்திரநகரி, நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்ரியம், அகோரன் என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரகல்வயைப்ரமம், நீலோற்பல மலர்கள் நிறைந்த இடமாதலால் நீலோத்பலகிரி, கழுநீர்க் குன்றம் மற்றும் நீலகிரி, கல்பத்தின் முடிவிலும் அழியாத தலம் ஆதலால், கல்பஜித் என்றும் பெயர் பெற்றது திருத்தணிகை. உற்பலகிரி, செங்கல்வகிரி, சாந்தரகிரி, நீலகிரி, குவளைச் சிகரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.

திருத்தணி முருகப் பெருமானை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.

சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மைந்தனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவனார், வீர அட்டகாசமாகச் சிரித்ததால், வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். இவர் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவீரட்டானேசுவர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வட கரையில் உள்ளது.

நந்தியாற்றின் தென்கரையில் ஆறுமுக சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்குள்ள முருகப் பெருமானே சிவபெருமானுக்கு உபதேசித்ததாக ஐதீகம். இங்கிருந்த ஆறுமுக சுவாமி, தற்போது திருத்தணி மலை மீது உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருவதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியரை, ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் ஆதவன் வழிபடுவது கண் கொள்ளாக் காட்சியாகும். சூரியனின் கிரணங்கள் முதல் நாள் சுவாமியின் பாதங்களிலும், 2-ஆம் நாள் மார்பிலும், 3-ஆம் நாள் சிரசிலும் விழுவது அற்புதம். நந்தியாற்றின் கரையில் உள்ள வீரராகவஸ்வாமி திருக்கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்று.

ஸ்ரீமகாவிஷ்ணு, திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பங்குனி உத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் கூடிய நன்னாளில் இதில் நீராடி தணிகை முருகனை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

ஒரு முறை பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். இதனால் சிருஷ்டித் தொழில் பாதிப்படைவதை விரும்பாத சிவனார், சிறையிலிருந்த பிரம்மனை மீட்டார். பிறகு, கர்வம் நீங்கிய பிரம்மன் சிவனாரது ஆலோசனைப்படி, இங்கு வந்து தவம் இயற்றி தணிகைவேலனை வழிபட்டு, அட்ச சூத்திரம், கமண்டலம் மற்றும் சிருஷ்டி வல்லமையை மீண்டும் பெற்றார். அவர் உருவாக்கிய பிரம தீர்த்தம் மற்றும் பிரமேஸ்வரர் லிங்கத்தை மலைப்பாதையில் தரிசிக்கலாம்.

பிரம்மனின் மனைவி சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தமும் ஸ்ரீசரஸ்வதீஸ்வரர் லிங்கமும் இதற்குச் சான்று.

ஸ்ரீராமபிரான் இங்கு வந்து குமாரக் கடவுளை வணங்கி ஞானோபதேசம் பெற்றதாகக் கூறுவர். சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமர் சந்நிதானம், ஸ்ரீராமர் பூஜித்த சிவலிங்கம் மற்றும் அவர் உருவாக்கிய தீர்த்தமும் திருத்தணிகையில் உண்டு.

நந்திதேவர் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு, பதி- பசு- பாசம் ஆகிய முப்பொருள் இயல்பைக் கூறும் சைவ சித்தாந்த உபதேசம் பெற்றார். இதற்காக முருகப் பெருமான் வரவழைத்த, ‘சிவதத்துவ அமிர்தம்’ எனும் நதி ‘நந்தி ஆறு’ என்றும், நந்திதேவர் தவம் செய்த குகை ‘நந்தி குகை’ என்றும் வழங்கப்படுகின்றன.

இந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து சுனை ஒன்று (இந்திர நீலச்சுனை) ஏற்படுத்தி, அதன் கரையில் நீலோற்பலக் கொடியை வளர்த்தான். அதன் மலர்களால் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் தணிகை வேலனை பூஜித்து சங்க- பதும நிதிகள், கற்பகத்தரு, சிந்தாமணி மற்றும் காமதேனு ஆகியவற்றைப் பெற்றான். இதனால் தணிகை முருகன், ‘இந்திர நீலச் சிலம்பினன்’ என்று பெயர் பெற்றார். இன்றும் இவரது அபிஷேகத்துக்கு இந்திர நீலச்சுனையின் தீர்த்தமே பயன்படுகிறது. இதில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி இல்லை.

‘திருத்தணியில் முருகப் பெருமானை தியானித்து தவம் இயற்றினால் முத்தமிழறிவும், ஞானமும் கிட்டும்!’ என்று சிவபெருமான் அருளியபடி அகத்தியர் இங்கு வந்து, தவம் இயற்றி முருகப் பெருமானின் அருள் பெற்றார்.

பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி நாகம் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நலம் பெற்றதாக திருப்புகழ் கூறுகிறது.


 ---மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,