அதிக வயதில் தேர்வெழுதிய கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மா,
மிக அதிக வயதில் தேர்வெழுதிய கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மா,
கேரளாவில் 105 வயதான பாகீரதி அம்மா, கடந்த ஆண்டு கொல்லத்தில் நடைபெற்ற மாநில எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் தேர்வு எழுதி இருந்தார். அதன் முடிவுகள் அண்மையில் வெளியாயின. அதில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, நான்காம் வகுப்புக்கு இணையான பாடத்தில் பாகீரதி அம்மா தேர்ச்சி பெற்றுள்ளார்.
அம்மா இறந்தவுடன் தனது 9 வயதில் 3-ம் வகுப்போடு படிப்பில் இருந்து நிறுத்தப்பட்டார் பாகீரதி அம்மா. இளம் வயதிலேயே திருமணமான அவர், தனது 30-வது வயதில் கணவனை இழந்தார். 6 குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பத்துக்காகப் பாடுபட்டார். குழந்தைகளைக் கரையேற்றிய பிறகு படிக்க ஆசைப்பட்டார்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு எழுத்தறிவு இயக்கத்தின் துணையோடு படிக்க ஆரம்பித்தார். தற்போது 4-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். எனினும் முதுமை காரணமாக தேர்வை எழுதுவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டார் பாகீரதி அம்மா. சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் ஆகிய கேள்வித்தாள்களை 3 நாட்களில் எழுதினார். அதில் 275 மதிப்பெண்களுக்கு 205 மதிப்பெண்களைப் பெற்றார்.
அவரின் 6 குழந்தைகளில் ஒருவரும், 15 பேரக் குழந்தைகளில் 3 பேரும் இப்போது உயிருடன் இல்லை. கொள்ளுப் பேரக் குழந்தைகளோடு, குழந்தையாகவே மாறிவிட்ட பாகீரதி அம்மா, 10-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற முயல்வதாகக் கூறுகிறார்.
Comments