சேலத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்..






சேலத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்.. திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!




சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் என்ற அமைப்பின் சார்பில் 16 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தின் துவக்க விழா நடைபெற்றது.


இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி மற்றும் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த துவக்க விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்று சிறப்பித்தார். மேலும், தற்போதைய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.


இந்த கிரிக்கெட் மைதானம் சேலம் மாவட்டம் காட்டு வேப்பிலைப்பட்டியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஐந்து பிட்ச்கள் உள்ளன.


சர்வதேச தரத்தில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் என்ற அமைப்பு உருவாக்கி உள்ளது.


இந்த கிரிக்கெட் மைதானத்தால் சேலம் மற்றும் அருகே உள்ள மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் பெரும் அளவில் பயன் அடைவார்கள் என கருதப்படுகிறது. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராமசாமி கூறுகையில், இந்த மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என கூறினார்.


ராகுல் டிராவிட் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன். இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் இனி சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் உருவாக இருக்கிறார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கும் இங்கே கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், வயதாகி விட்டதால் அது நடக்காது. இளம் வீரர்களை இங்கே விளையாட வைப்பேன்" என்றார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,