போலியான போக்குவரத்து நெரிசலை உருவாக்கி கூகுளுக்கு தண்ணி காட்டிய ஜித்தன்


                 கூகுள் மேப்ஸ் என்பது ஒரு பெரிய நகரத்தில் பயணம் செய்யும் அல்லது பைக்கை ஓட்டும் அல்லது காரை ஓட்டும் எவருக்கும் விலைமதிப்பற்ற ஒரு கருவியாகும். சென்றடைய வேண்டிய வழிகளை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி, போக்குவரத்து மிகுந்த சாலைகள் அல்லது முக்கிய சாலைகளில் உள்ள தடைகள் குறித்த விவரங்களையும் வழங்குகிறது. "உங்களுடைய பயண பாதைகள் ஒழுங்காக இருக்கிறதா என்பதை, கூகுள் மேப்ஸ் வழியாக முன்கூட்டியே திட்டமிடுங்கள்" என்று கூகுள் விளம்பரங்கள் கூட செய்து வரும் நிலைப்பாட்டில், ஜெர்மன் தலைநகரில் ‘போலியான’ போக்குவரத்து நெரிசலை உருவாக்கி, தனிமனிதனாக ஒருவர் கூகுளுக்கே பல்பு கொடுத்துள்ளார். இதற்காக அவர் பயன்படுத்தியது வெறும் 99 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒரு கை வண்டி மட்டுமே.





 




பெர்லினை சேர்ந்த கலைஞர் ஆன சைமன் வெக்கர்ட், ஒரு தள்ளுவண்டி நிறைய ஸ்மார்ட்போன்களை போட்டுக்கொண்டு, அந்த வண்டியை சாலையில் வைத்து மெதுவாக இழுத்து கொண்டு செல்வதின் வழியாக தான் கண்டுபிடித்த ஒரு சமாச்சாரத்தை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார், அதே போல் தனது சொந்த வலைப்பதிவிலும் அந்த கண்டுபிடிப்பை பற்றி விவரித்துள்ளார். கூகுள் உலகெங்கிலும் போக்குவரத்து சார்ந்த டேட்டாவை (விவரங்கள்) திரட்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறது; அதாவது கார்களில் அல்லது பைக்களில் உள்ள ஸ்மார்ட்போன்கள் கூகுளுக்கு தகவல்களை வழங்கும், அவைகள் எந்த வேகத்தில் நகர்கின்றன, குறிப்பிட்ட தெருவில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன போன்ற டேட்டாவை (விவரங்கள்) வைத்து அந்த தெருவின் அல்லது சாலையின் போக்குவரத்து சார்ந்த முடிவுகளை கூகுள் நிகழ்த்தும். அவ்வண்ணமே குறிப்பிட்ட சாலை அல்லது தெருவில் போக்குவரத்து மிகவும் நெரிசலாக உள்ளது என்கிற தகவலையும் கூகுள் மேப்ஸ் பயனர்களுக்கு வழங்கும்.


 




இந்த செயல்முறையை பயன்படுத்தி தான் சைமன் வெக்கர்ட் ஒரு போலியான போக்குவரத்து நெரிசலை உருவாக்கி உள்ளார். அவர் இழுத்து செல்லும் கை வண்டியின் மெதுவான வேகமும், பயன்படுத்தப்பட்ட 99 தொலைபேசிகளும் தான் கூகுள் மேப்ஸ் அங்கே ஒரு போக்குவரத்து நெரிசல் நிகழ்கிறது என்று நம்புவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் அந்த தெருவில் வாகனங்களே இல்லை.வேகம் குறைவாகவும், எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தால், கூகிள் அந்தத் தெருவின் பகுதியை சிவப்பு அல்லது மெரூன் என்று காண்பிக்கும், அதாவது அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகக் கூறுகிறது என்று அர்த்தம்.


 



 


வெளியான வீடியோவானது, கூகுள் மேப்ஸில் உள்ள வீதிகள் படிப்படியாக பச்சை நிறத்தில் இருந்து மெரூனுக்கு மாறுவதை காட்டுகிறது. இதன் விளைவாக கூகுளின் நேவிகேஷன் பரிந்துரைகள் பயனர்கள் அந்த வீதிகளைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கின்றன. இதுதவிர்த்து, சைமன் வெகெர்ட் கூடுதல் விவரங்கள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை, எனவே இது முற்றிலும் போலியான ஒரு சம்பவமாக கூட இருக்கலாம். ஒருவேளை இது உண்மையானதாக இருந்தால், இதுபோன்ற போலியான போக்குவரத்து நெரிசல்களை உருவாக்குவதற்கான வழிகளை கூகுள் கண்டறிந்து, அவற்றை தடுக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. இந்த சம்பவம் பெர்லினில் உள்ள கூகுள் அலுவலகம் இருக்கும் தெருவில் நடந்துள்ளது என்பது கூடுதல் சுவாரசியம்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி